தேடல்!


Feb 17, 2015

நான் பைத்தியக்காரன்! நீங்கள்?!

எந்தவொரு பயனுமில்லை என்பது தெரிந்திருந்தும், பிடிவாதமாய் ஒரு செயலைச் செய்துகொண் டிருப்பவன் பைத்தியக்காரன். இதற்கு உதாரணம் நானே! நீங்களும் என்னைப் போன்றவர்தானா? பதிவைப் படியுங்கள்.

யிர்களுக்குப் புலன்கள் உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற் குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ, ஓர் உயிரினத்தைப் பொறுத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான[?] அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............மிக மிக மிக[இந்த ’மிக’வுக்கு வரம்பேதுமில்லை] சக்தி வாய்ந்த மூளை கடவுளுக்கும் உள்ளதா?
உண்டெனில், அதற்கும் ‘உருவம்’ உண்டல்லவா? இல்லையெனில் அது அருவமானதா?

அருவமான ஒன்றின் மூலம் சிந்தித்துச் செயல்பட முடியுமா?

மூளையைத் தவிர்த்து, மூளை போன்ற ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?

அந்த ‘ஏதோ’ ஒன்று எப்படியிருக்கும்?!

இந்தக் கேள்வியால் எனக்கோ பிறருக்கோ பயனேதும் இல்லை[?] என்பது தெரிந்திருந்தும், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கண்ட கண்ட நேரங்களில் கேட்டுக் கொள்கிறேன்!!!


பயனற்ற இந்தச் செயலைச் செய்கிற நான் பைத்தியக்காரனா?

“ஆம்” என்பது உங்கள் பதிலானால்..... நீங்கள் எப்படி!?


=============================================================================================