ஆங்கிலத்தில் எழுதும்போது அல்லது பேசும்போது பிழை நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். போதிய மொழிப் புலமை இல்லையெனில், எழுதுவதையும் பேசுவதையும் தவிர்த்துவிடுகிறோம். இந்த மனப்போக்கு, நம் தாய்மொழியாம் தமிழைப் பயன்படுத்தும்போது நம்மில் பெரும்பாலோர்க்கு இல்லை என்பது கசப்பான ஓர் உண்மை.
நான் எழுதும் தமிழிலும் பிழைகள் உள்ளன. எனினும், நண்பர்களின் கணிசமான பதிவுகளில் கண்களை உறுத்துகிற அளவுக்கு அவை கூடுதலாகத் தென்படுவதை மனதில் கொண்டு இந்தப் பத்துப் பரிந்துரைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
பரிந்துரைகள்:
ஒன்று:
பதிவு எழுதி முடித்தவுடன், கருத்துப் பிழைகள் உள்ளனவா என்பதைச் சோதிப்பது போலவே, ஒரே ஒரு முறையேனும் சொற்பிழை, தொடர்ப்பிழை போன்ற மொழிப் பிழைகள் உள்ளனவா என்பதையும் சோதித்துவிடுங்கள்.
இரண்டு:
நாம் கையாளும் சொல்லின் அமைப்பு குறித்து ஐயம் எழுந்தால்[ஆவனமா, ஆவணமா? முந்தானையா, முந்தாணையா? என்பன போல] சோம்பலுக்கு இடம் தராமல், தமிழ் அகராதியைப் புரட்டிவிடுங்கள். கைவசம் இல்லையெனில் ஒன்று வாங்கிவிடுங்கள். தமிழில் பதிவெழுதிப் பிரபலம் ஆக ஆசைப்படு கிற நாம் அதை வாங்கத் தயங்கலாமா?
ஐயப்பாட்டுக்குரிய சொல்லைக் கூகிள் தேடலில் தட்டச்சு செய்வதன் மூலமும்[வரிசைகட்டும் பதிவுகளின் தலைப்புகளை வைத்து] அது பிழையானதா, அல்லவா என்பதை அறிய முடியும்.
மூன்று:
கருத்துகளைச் சிறு சிறு [simple sentence] வாக்கியங்களாக எழுதுவதன் மூலம் தொடர்ப் பிழைகள் நேர்வதைத் தவிர்க்கலாம். கலப்பு வாக்கியங்களைப் பயன்படுத்தும்போது, ஒருமை பன்மை மயக்கம், எழுவாய் பயனிலை முரண்பாடு போன்றவை இடம்பெற வாய்ப்பு உண்டு.
நான்கு:
ஒரு கருத்துக்கு ஒரு பத்தி[paragraph] என்ற முறையைக் கையாளுங்கள். அடுத்த ஒரு கருத்தைச் சொல்லும்போது, அடுத்த பத்திக்குத் தாவிவிடுங்கள்.
பத்திகள் சிறியனவாக அமைவது வாசிப்போரின் சிரமத்தைக் குறைக்கும் என்பதை மறக்கவே வேண்டாம்.
ஐந்து:
சிலருடைய பதிவுகளில் மிக மிகக் குறைவான பிழைகள் இடம்பெற்றிருப்பதை, அல்லது, பிழைகளே இல்லாமலிருப்பதைக் கருத்தூன்றிப் படிப்பதன் மூலம் அறியலாம். அத்தகையோரின் பதிவுகளைத் தவறாமல் வாசித்தால், அது உங்கள் மொழி நடையைச் செம்மைப்படுத்தும்.
திரு.வி.கல்யாண சுந்தரனார், மு.வரதராசனார் போன்ற தமிழறிஞர்களின் நூல்களை வாங்கி வைத்து, அவற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் படிப்பது மிகுதியும் பயனளிக்கும் என்பதை நம்புங்கள்.
ஆறு:
சந்திப் பிழைகளை முற்றிலும் தவிர்ப்பதென்பது மிக மிக மிகப் பெரும்பாலோர்க்கு சாத்தியமில்லை. வார்த்தைகளை வாயால் உச்சரித்துப் பார்ப்பதன் மூலமும் முடிவு செய்யலாம்.
வாழை + பழம்......இவை இணையும்போது ‘ப்’ சேர்ப்பது அவசியம் என்பது புரியும்.
என்று + சொன்னான்....இவற்றை இயல்பாகச் சொல்லும்போது, ‘ச்’ தேவையில்லை என்பதை அறியலாம். ‘என்றுச் சொன்னான்’ என்று வராது. இலக்கணம் பயின்றவர்களையே திணறடிப்பது இந்தச் சந்தி! இதன் பொருட்டு வெகுவாக அலட்டிக்கொள்ள வேண்டாம்.
ஏழு:
‘பிழையின்றித் தமிழ் எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பிலான பதிவுகளைக் கூகிளில் தேடி அறிந்து, வாய்ப்பு அமையும்போது வாசிக்கலாம்.
எட்டு:
பதிவின் தலைப்பையும் சில ஆரம்ப வரிகளையும் மீண்டும் மீண்டும் கவனமாகப் படித்துப் பிழைகளை அகற்றிவிடுங்கள். திரட்டியில் இணைத்த பிறகு அவற்றைத் திருத்த வாய்ப்பில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஒன்பது:
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகள் பற்றிப் பின்னூட்டம் இடுகிறோம். அது போலவே, பதிவில் இடம்பெறும் மொழிப் பிழைகள் குறித்தும் பின்னூட்டம் இடுவதைப் பதிவர்களாகிய நாம் வழக்கம் ஆக்கிக்கொள்ளலாம். பிழை சுட்டப்படுவதை எவரும் கௌரவப் பிரச்சினையாக எண்ணுதல் கூடாது.
பத்து:
நல்ல கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம் நம் தாய்மொழி வாழவும் வளரவும் உதவுகிறோம். அது போலவே, பிழை நீக்கி எழுதுவதாலும் அது வாழுகிறது...வளருகிறது என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிழை காணின் மன்னியுங்கள்; திருத்துங்கள்.

பத்து பரிந்துரைகள் என்பதை விட பத்து (அன்பு) கட்டளைகள் என்ற தலைப்பை வைத்திருக்கலாம். மிக அருமையான பரிந்துரைகள். மன்னிக்க. கட்டளைகள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நடனசபாபதி.
நீக்குநல்ல. தேவையான, இணையத்தில் எழுதுகிற எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய பரிந்துரைகள். அதிலும் திருவிக, மு.வ போன்றோரின் நூல்களைப் படித்துப்பார்க்கச் சொல்லியிருக்கிறீர்கள் பாருங்கள்- அது ஒரு மிக அருமையான ஆலோசனை. குறிப்பாக இணையத்தில் எழுதுகிற பெரும்பாலானோர் இம்மாதிரியான அடிப்படைப் பயிற்சிகள் எதுவுமே எடுக்காமல்தான் எழுதவே ஆரம்பிக்கின்றனர். அதிலும் பிழையாக எழுதுகிறவர்களின் வாய்ச்சவடால்களைப் பார்க்கவேண்டுமே........ அந்தரத்திலேயே குதித்துக்கொண்டிருப்பார்கள்.
பதிலளிநீக்குநீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை ஓரளவுக்கு ஊகிக்கிறேன். ஆனால் அவர்கள் இப்போது
நீக்குஎவ்வளவோ திருத்தமாக எழுதுகிறார்கள்.
அத்துடன் அவர்கள் அதை வேண்டுமெனச் செய்யவில்லை. ஆனால் புரிய மறுத்தார்கள்
அமுதவன்,
நீக்குஇந்தப் பதிவை மிகுந்த தயக்கத்துடன்தான் வெளியிட்டேன். சிறந்த எழுத்தாளரான தாங்கள், ‘எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய பரிந்துரைகள் என்று பாராட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது.
நன்றி அமுதவன்.
நான் பின்னூட்டம் மாத்திரமிடுபவன்.
பதிலளிநீக்குஎவ்வளவோ முயன்ற போதும் சில பிழைகள் வந்துவிடுகிறது.
தொடர்ந்து கவனமாக இருக்க முயல்கிறேன்.
பின்னூட்டத்தில் நல்ல கருத்துகளைப் பகிர்பவர் நீங்கள். பிழைகளைத் தவிர்த்து எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களே, அது போதும்.
நீக்குநன்றி யோகன் பாரிஸ்.
வணக்கம் நண்பரே
பதிலளிநீக்குஎன் போன்ற பாமரனுக்கு உபயோகமான பதிவு நான் பெரும்பாலும் எழுதுவது அறையில் விளக்கு அணைத்தவுடன் அரை இருட்டில்தான், அதன் காரணமாகவே எனக்கு தவறுகள் நிகழ்ந்து விடுகிறது 80தை அறியத்தருகின்றேன் இனியெனும் வராமலிருக்க முயற்சிக்கின்றேன்.
தமிழ் மணம் 1
சுவையான செய்திகளை வழங்குவதில் காட்டும் அதே உற்சாகத்துடன் முயலுங்கள். பிழைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும்.
நீக்குநன்றி கில்லர்ஜி.
ஐயா என்னைப் போன்ற புதியவர்களுக்கு உதவும் கட்டுரை நன்றி
பதிலளிநீக்குதங்களைப் போன்றவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படும் என்பதறிந்து மகிழ்கிறேன்.
நீக்குநன்றி கிருஷ்ண வரதராஜன்
உபயோகமான பதிவு
பதிலளிநீக்குநன்றி Annogen balakrishanan.
நீக்குஇந்தப் பதிவில் பிழைகள் ஏதும் என் கண்ணில் படவில்லை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றிங்க.
நீக்குபிழைகள் உள்ளன. இனி வரும் பின்னூட்டங்களைப் படியுங்கள்.
எனது பதிவுகளில் எழுத்து பிழைகள் ஏற்படுகின்றன. அது என் கண்ணில் படும் போது திருத்தி கொள்கிறேன் அது போல யாரும் சுட்டிக் காட்டினாலும் திருத்தி கொள்கிறேன். பிழைகள் வருவதற்கு காரணம் இரவு நேரங்களில் எழுதி பதிவிடுவதாலும் எழுதியதை மீண்டும் படித்து திருத்த நேரம் இல்லை என்பதாலும்தான். அது மட்டுமல்ல சொல்ல வரும் கருத்துக்கள் மக்களுக்கு புரிந்தால் போது அதனால் எழுத்து பிழைகள் இருந்தாலும் படிப்பவர்கள் அதை சரியாக படித்துவிடுவார்கள் என்பதாலும் எனது சோம்பேறி தனத்தாலும்தான் சில சமயங்களில் எழுத்து பிழைகளோடு எனது பதிவுகள் வந்துவிடுகின்றன
பதிலளிநீக்குநேரம் இன்மை காரணமாகத் தங்களைப் போன்றவர்கள், ‘கருத்துகள் பிறருக்குப் புரிந்தால் போதும்’ என்று நினைப்பதில் தவறில்லை.
நீக்கு’சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன்.
நன்றி அவர்கள் உண்மைகள்.
மிக மிக உபயோகமான பதிவு.
பதிலளிநீக்குஅதிலும் எத்தனை முறை படித்தாலும் எழுத்துப் பிழைகள் கண்ணில் படாத என்னை போன்றவர்களுக்கும் ஒரு கட்டளை இட்டிருக்கலாம். ஆனால், பதிவை வெளியிட்ட உடனே வரிசையாக எழுத்துப் பிழைகள் கண்ணில் படும். குற்றம் கண்டுபிடிப்பதும் ஒரு கலை என்பது அப்போதுதான் தெரியும்.
குற்றம் கண்டுபிடிப்பதும் ஒரு கலைதான். அதற்குத் தணியாத ஆர்வமும் தேவை.
நீக்குநன்றி செந்தில் குமார்.
நான் எழுதுவதில் ஏதும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன் :)
பதிலளிநீக்குத ம 2
பிழை இருந்தால்தானே சுட்டிக் காட்ட முடியும்!
நீக்குநன்றி பகவான்ஜி.
அய்யா வணக்கம்.
பதிலளிநீக்குதாங்கள் கூறிய அனைத்தையும் மனதில் கொள்கிறேன்.
நீங்கள் கூறிய எண்ணம் எனக்கும் ஏற்படுவதுண்டு.
ஆனால் இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டுவதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது கருதியே அமைதியாகப் போய்விடுவது வழக்கம்.
நிச்சயமாய் உங்களின் ஒவ்வொரு கருத்தினையும் மனதிற்கொண்டால் பிழைகளைப் பெருமளவில் களைந்துவிடலாம்.
பதிவின் இறுதியில்,
கௌரவப் பிரச்சியாக என்பது “ கௌரவப் பிரச்சனையாக என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
வந்ததற்குத் தேடிப் பிடித்து ஒன்றைக் காட்டியாயிற்று.
பகவான்ஜி சொல்வதை நானும் வழி மொழிகிறேன்.
என் பதிவில் எப்பிழையிருந்தாலும் தயங்காது சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
நன்றி
த ம 3
பிழையைத் திருத்திவிட்டேன். ‘பிரச்சனை’ என்பதும் பிழை; ‘பிரச்சினை’ என்பதே சரி என்று நினைக்கிறேன்.
நீக்குஅதைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி ஊமைக் கனவுகள்...நன்றி...நன்றி.
நீங்கள் நினைப்பது சரிதான் அய்யா பிரசினம் என்பதன் தற்பவம்தான் அது.
நீக்குபிரச்சினைதான் தவறுக்கு வருந்துகிறேன்.
நன்றி
நன்றி அன்பரே.
நீக்குஆறாம் பரிந்துரையில் நீங்கள் கூறியிருப்பது சரிதான்,
பதிலளிநீக்குசந்திப்பிழைகளைக் களைவது “““பெரும்பாலோர்க்கு சாத்தியமில்லை“““.
‘பெரும்பாலோர்க்குச் சாத்தியமில்லை‘
நீங்கள் எழுதியிருப்பதும் சரிதான்.
நீக்குஆனாலும், ‘சா’வின் உச்சரிப்பைப் பொருத்து ஒற்று மிகாமலும் போகலாம். சாத்தியம் என்ற சொல்லில், ‘சா’வை, ‘cha' என்று உச்சரிக்கும்போது மிகும்; 'saa' என்று உச்சரிக்கையில் மிகாது. என்னைப் பொருத்தவரை, ‘saa' என்றுதான் உச்சரிக்கிறேன்.
மீண்டும் நன்றி ஊமைக் கனவுகள்.
மன்னிக்கவும் அய்யா,
பதிலளிநீக்குஇந்தப் “ பத்து பரிந்துரைகள் “ என்பதும் கூடப் “ பத்துப் பரிந்துரைகள் “ என்று ஒற்று மிகுந்தே வரும் என்பார்கள் பண்டிதர்கள்.
வன்றொடர் குற்றியலுகரத்தின் பின்னால் வலி மிகும் என்று அதற்குத் தமிழில் விதி இருக்கிறது என்பார்கள்.
நான் செய்வது அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைத்துவிடாதீர்கள்.
எவர் தளத்திலும் இது போல் சுட்டிக் காட்டியதில்லை.
உங்களின் பதிவு, நல்ல தமிழ் நடையை வலியுறுத்தியதாக இருப்பதால் இவற்றைக் கூற நேர்ந்தது.
மற்றபடி, நான் தமிழாசிரியனோ பண்டிதனோ இல்லை.
நீங்கள் கூறியுள்ள படி தவறற்றுத தமிழாளப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் செய்யும் இதைப் போன்ற தமிழ்நடைத் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
தவறாக நினைத்துவிட மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
நன்றி.
குற்றியலுகரத்தின் பின்னால் எல்லா இடங்களிலும் வலி மிகுவது கட்டாயமில்லை.
நீக்கு’பத்துப் பத்தாக அடுக்கு’ என்கிறபோது மிகும். ’கறுப்புக் குதிரை’ என்னும்போதும் மிகும். இப்படிப் பல உதாரணங்கள் தரலாம்.
‘எட்டு கோடி’யை, ’எட்டுக் கோடி’ என்று நான் அறிந்த வகையில், மறைமலை அடிகள், மு.வ., திரு. வி. க. போன்ற அறிஞர்கள் எவரும் எழுதியதாகத் தெரியவில்லை
எட்டு கோடி, பத்து பூக்கள் என்றுதான் உச்சரிக்கிறோமே தவிர, எட்டுக் கோடி, பத்துப் பூக்கள் என்று எவரும் உச்சரிப்பதில்லை.
தலைப்பிடும்போது இது பற்றி நன்கு யோசித்தே முடிவெடுத்தேன்.
நன்றி...மிக்க நன்றி ஊமைக் கனவுகள்.
இது கருத்துகளைப்[கருத்துக்களை என்றும் எழுதுகிறார்கள்] பகிர்ந்துகொள்ளும் இடம்.
நீக்குமன்னிப்பு வேண்டுவது கூடாது ஊமைக் கனவுகள்.
அய்யா வணக்கம்.
நீக்குபொதுவாக நான் இதுபோன்ற விவாதங்களில் இருந்து அகன்றே இருப்பவன்.
தமிழைச் சரியாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று ஆசைப்படுபவன்.
தாங்கள் இங்குச் சொல்லியிருப்பது தங்கள் கருத்தெனில் அதற்குத் தடையில்லை.
குற்றியலுகரத்தின் பின்னால் வலி மிகும் என்று நான் சொல்லவில்லை.
வன்றொடர் குற்றியலுகரத்தின் பின்னால் வலி மிகும் என்றே சொல்லியிருக்கிறேன்.
அதற்கான இலக்கணச் சான்றுகளை நீங்கள் விரும்பினால் மரபிலக்கண நூல்களில் இருந்து காட்ட முடியும்.
மு.வ, மறைமலையடிகள். திரு.வி. க போன்றோர் நி்ச்சயமாய் இது போன்ற இடங்களில் ஒற்று மிகுத்தே எழுதியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
ஒரு வேளை உங்களிடம் உள்ள பதிப்பில் அவ்வாறு இருந்தால் அருள் கூர்ந்து அந்தப் பதிப்பு, சமீபத்தில் வெளிவந்ததா என்று பாருங்கள். பழைய பதிப்பாய் இருந்தால் அது நம்பகமானதாய் இருக்கும்.
ஏனென்றால், தொல்காப்பியத்தின் கணேய்யரின் பதிப்பைப் பதிப்பித்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பதிப்பிலேயே பிழை மலிந்து கிடக்கும் காலம் இது.
நீங்கள் கூறிய திருவிக , முவ முதலானோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் “ எட்டு கோடி, பத்து பூக்கள் “ என இவர்கள் குறித்துள்ளதாகக் காட்டும் இடம் எங்கெனத் தெரியவில்லை.
சுட்டிக் காட்டுங்கள்.
நிற்க,
வன்றொடர் குற்றியலுகரம் உயர்திணையாய் இருக்கும் இடங்களில் ஒற்று மிகுவதில்லை. சான்றாக,
வைரமுத்து பேசினார் என்றே வரும். இதை வைரமுத்துப் பேசினார் என்று சொல்வதில்லை.
எட்டு கோடி என்று எழுதக் கூடாதா................. என்றால்
எழுதலாம்,
அது “ எட்டும் கோடியும் “ என உம்மைத் தொகையாய் வரும் இடத்தில் எட்டு கோடி தான். இப்பொருள் தரும் போது இதை எட்டுக் கோடி என்றால் தவறே.
அதே போல், எட்டுகின்ற கோடி , எட்டும் கோடி, எட்டிய கோடி என வினைத் தொகையாய் வரும் இடத்திலும் அது எட்டு கோடி தான். எட்டுக் கோடி என இங்குச் சொல்வதில்லை.
ஆனால் Eight Crore என்பதற்குத் தமிழில் தவறற்ற வடிவம், “ எட்டுக்கோடி“ என்பதுதான்.
இதைப் போலத் தான் பத்துப் பரிந்துரை என்பதும்.
ஒரு வேளை தாங்கள் கூறியிருப்பது போல, சந்திப் பிழை குறித்து வெகுவாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்பது தங்களின் கருத்தாயின் , உங்களின் இந்த ஆட்சி குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நன்றி.
ஊமைக் கனவுகள்,
நீக்குநானும் வன்றொடர்க் குற்றியலுகரத்தைக் கருத்தில் கொண்டுதான் விவாதித்தேன்.
தாங்கள் தந்த விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
இந்த அளவிற்கு விளக்கம் தருகிற தாங்கள் நன்கு தமிழ் இலக்கணம் கற்றவர் என்பதில் ஐயமில்லை. அல்லவெனில், தமிழ் அறிந்த உங்களின் நண்பர் ஒருவர் எழுதி, அல்லது, சொல்லி உதவியிருக்க வேண்டும். இருக்கட்டும்.
//எட்டு கோடி என்று எழுதக் கூடாதா................. என்றால்
எழுதலாம்,
அது “ எட்டும் கோடியும் “ என உம்மைத் தொகையாய் வரும் இடத்தில் எட்டு கோடி தான். இப்பொருள் தரும் போது இதை எட்டுக் கோடி என்றால் தவறே.
அதே போல், எட்டுகின்ற கோடி , எட்டும் கோடி, எட்டிய கோடி என வினைத் தொகையாய் வரும் இடத்திலும் அது எட்டு கோடி தான். எட்டுக் கோடி என இங்குச் சொல்வதில்லை.
ஆனால் Eight Crore என்பதற்குத் தமிழில் தவறற்ற வடிவம், “ எட்டுக்கோடி“ என்பதுதான்//
இவ்வாறாகத் தாங்கள் தந்திருக்கும் இலக்கண விதிகளெல்லாம் ஏற்கனவே நான் கற்றறிந்தவைதான்[நான்காண்டுகள் பயின்று ‘தமிழ் வித்துவான்’ பட்டம் பெற்றதோடு, எம்.ஏ[தமிழ்] பட்டமும் பெற்றவன் நான்.
இலக்கணம் தொடர்பான ஆய்வுகளிலிருந்து நான் விலகி ஆண்டுகள் பலவாயின.
கடவுள் தத்துவம், வாழ்வியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுவதில் நாட்களைச் செலவிடுகிறேன்.
என் படிப்பறிவை அடிப்படையாகக் கொண்டு, ‘பத்து பரிந்துரைகள்’ சரியே என நம்புகிறேன். இந்த விவாதத்தைத் தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை. சான்றுகள் தேடுவதிலும் ஆர்வமில்லை.
இன்று மொழி எவ்வளவோ திரிபடைந்துவிட்ட நிலையில் 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நன்னூலை மேற்கோள் காட்டி விதிகள் வகுப்பது ஏற்புடையதன்று என்பதையும் நினைவில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
மீண்டும் நன்றி ஊமைக் கனவுகள்.
ஐயா. ‘ஊமைக்கனவுகள்’ பதிவின் ஆசிரியர் ஒரு தமிழ் ஆசிரியர். அதனால் தான் உங்களோடு ஆரோக்கியமான விவாதம் செய்திருக்கிறார். எது எப்படியோ. இரு தமிழ் அறிஞர்கள் விவாதிக்கும்போது என்னைப் போன்றோர் பலன் பெறுகின்றனர் என்பது மகிழ்ச்சியே.
நீக்கு'நான் தமிழாசிரியனோ பண்டிதனோ அல்ல’ என்று குறிப்பிட்டாரே, அது ஏன்?
நீக்குதமிழாசிரியன் என்றால் பிறர் மதிக்க மாட்டார்கள் என்று அஞ்சுகிறாரா? புரியவில்லை.
‘பத்திகள் சிறிதாக...’ என்று எழுதியிருந்தேன். இவ்வாறு எழுதுவதுகூடப் பிழைதான். சற்று முன்னர்தான் ’சிறியனவாக’ என்று திருத்தினேன்.
‘நான் கற்றறிந்தவைதான்.’ என்று நான் குறிப்பிட்டிருப்பதும் பிழையானதே. ‘கற்றறிந்தவைதாம்’ என்றிருக்க வேண்டும்.
பெரும்பான்மை வழக்கு நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
என்னைப் பொருத்தவரை, ‘பத்து பரிந்துரை’ யை உச்சரிக்கும்போது, ‘ப்’ சேர்த்து அழுத்தம் கொடுத்து நான் உச்சரிப்பதில்லை. எழுதும்போதும் அவ்வாறே. இது பெரும்பான்மை. இலக்கணம் கற்றவர்கள்தான்[தாம்] ஒற்று சேர்க்கிறார்கள்.
தலைப்பிடும்போது, கூகிள் தேடலில், ‘பத்து பரிந்துரைகள்’ என்பதைத் தட்டச்சு செய்தேன். தினமணியில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில், ‘பத்துப் பரிந்துரைகள்’ என்று ஒற்று சேர்த்திருப்பதைக் காண முடிந்தது. ஆயினும், என் எண்ணப்படி, தலைப்பில், ‘பத்து பரிந்துரைகள்’ என்றே எழுதினேன்.
ஊமைக் கனவுகள், வாதம் புரிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. ஆயினும் தாம் ஒரு தமிழாசிரியர் என்பதை மறைத்ததை நான் விரும்பவில்லை.
எனினும், அவருக்கு நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
நன்றி நடனசபாபதி
அய்யா வணக்கம்.
நீக்குமீண்டும் இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட வருவேன் என்று நான் நினைக்க வில்லை.
நான் பன்னிரண்டாம் நூற்றாண்டின் நன்னூலை மேற்கோள் காட்டி இருப்பதாக நான் சொல்லாத கருத்தொன்றை நீங்கள் சொல்லி இருந்த போது கூட!
ஆனால் இங்கு மீண்டும் என் தனிப்பட்ட அடையாளத்துடன் ஒரு பிரச்சினை என்பதால் வருகிறேன்.
நான் என்னைப் பற்றிச் சொல்வதை நம்பத்தயாராயில்லாத நீங்கள், திரு. நடனசபாபதி அய்யா சொல்வதை நம்பி இந்தப் பின்னூட்டத்தில் நான் தமிழாசிரியன் இல்லை என்று பொய் கூறி இருப்பதாக எண்ணி ஏதேதோ கூறி இருப்பது நிச்சயம் எனக்கு வருத்தம் அளிக்கிறது.
திரு. நடனசபாபதி அவர்களை நானோ என்னை அவரோ பார்த்ததோ பேசியதோ இல்லை. அவர் என்னை முற்றிலும் அறியாதவர்.
எனது பதிவுகளில் நான் தமிழ் குறித்து எழுதுவதால் அவர் என்னைத் தமிழாசிரியர் என்று நினைத்திருக்கக் கூடும். அது என் பிழை அன்று.
நான் ஒரு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியன்.
இதை உறுதிப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?
தமிழாசிரியர் என்றால் பிறர் மதிக்க மாட்டார்கள் என்று நான் அஞ்சுகிறேன் என்றும், தமிழாசிரியர் என்பதை நான் மறைத்ததாகவும் நீங்கள் கூறியிருப்பது நிச்சயம் வருத்தமளிக்கிறது.
அது உண்மையானால், என்னைப் பொருத்தவரை நிச்சயம் அது பெருமைபடத்தக்க விடயமே! நான் தமிழ்கற்க விரும்பும் இன்னொரு மொழியைக் கற்பிக்கும் ஆசிரியன்.
இன்னும் தங்களுக்கு இதை மெய்ப்பிக்க வேண்டுமேல், என் கூற்றிற்கு மேலதிகத் தெளிவு வேண்டுமேல்,
வலைப்பதிவர்கள், முத்துநிலவன், மலர்தரு மது போன்றோர் என்னை அறிந்தவர்கள். தொடர்பெண்ணோடு அவர்கள் தளம் இருக்கிறது. நீங்கள் அவர்களைக் கேட்டுக் கொள்ளலாம்.
எனக்கு இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அவர்கள்தான்.
நீங்கள் வித்துவானுக்குப் படித்துள்ளீர்கள் என்றால் உங்கள் வயதில் பாதிதான் எனக்கிருக்கும். அறிவிலும் அனுபவத்திலும் கூட.
என்னை நெறிப்படுத்துங்கள்.
அன்றி,
தற்போதெல்லாம் இது போன்ற விவாதங்களில் இருந்து நழுவிச் செல்லும் என்னைத் தங்களின் இது போன்ற விமர்சனங்கள் மிகுந்த வலிதருவனவாய் உள்ளன.
நிச்சயம் இனியொரு பின்னூட்டம் இட வர மாட்டேன்.
தங்களது விருப்பத்திற்குகந்தவனாய் இல்லாமைக்காக நானும் வருந்துகிறேன்.
நன்றி!!!
இந்த குழப்பத்திற்கு காரணமான என்னை நீங்களும், ‘ஊமைக்கனவுகள்’ பதிவின் ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறேன். ஊமைக்கனவுகள் பதிவில் அவர் எழுதியிருந்ததை படித்ததும் அவர் தமிழ் ஆசிரியராக இருக்கக்கூடும் என்ற எண்ணி எழுதிவிட்டேன். திரும்பவும் மன்னிப்பை கோருகிறேன்.
நீக்குஊமைக் கனவுகள்,
நீக்குநடனசபாபதி தந்த தகவலில் உண்மை இருந்திருக்குமானால், நான் மனம் வருந்தி எழுதியதில் தவறேதும் இல்லை. அவர் செய்த தவற்றால் நான் உங்கள் மனதை நோகடித்துவிட்டேன். மன்னியுங்கள்.
சபாபதியும் மன்னிப்புக் கோரியிருக்கிறார். அவர் சார்பாகவும் என் வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.
நன்றி. வருந்தற்க சபாபதி.
வலைப் பதிவர்களுக்குப் பயன்தரும் பத்து ஆலோசனைகள். தமிழுக்கு நல்ல தொண்டு.
பதிலளிநீக்குத.ம.4
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ.
நீக்குகீழுள்ள இணைப்பு சிறிது உதவும்...
பதிலளிநீக்குhttp://dev.neechalkaran.com/p/naavi.html
மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபத்துப் பரிந்துரைகளுக்கும் நன்றி பரமசிவம் ஐயா.
பதிலளிநீக்கு(எனக்கென்னவோ.... என்னைக் குறித்து எழுதியது போல் தான் உள்ளது..... )
உங்களைக் குறித்தா?! ஊஹூம்...இல்லவே இல்லை.
நீக்குஉங்கள் பதிவுகளில் எப்போதாவது, மிக அரிதான சந்திப் பிழைகளைப் பார்த்ததாக நினைவு.. அதையும் உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அவற்றைப் பொருட்படுத்தவும் தேவையில்லை.
கவலையே வேண்டாம். நல்ல தமிழில் எழுதுகிறீர்கள். தொடருங்கள்.
நன்றி அருணா.
சந்திப்பிழைகள் பலருக்கும் மிகும்! என்னுடைய பதிவுகளில் கூட சந்திப்பிழைகள் மிகுந்திருக்கும்! இன்றைய மொழி வளர்ந்திருப்பதற்கு ஏற்ப இலக்கணங்களில் சில திருத்தங்கள் இருந்தால் நன்றுதான்! மிகச்சிறப்பான பதிவும் விவாதங்களும் தமிழறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவின. தொடருங்கள்! நன்றி! நேற்று இந்த வலைப்பக்கம் வந்து முடக்கப்பட்டு இருப்பது கண்டு வருந்தினேன். இன்று மீண்டும் அனைவரும் படிக்க வசதி செய்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்.
நீக்கு