'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Thursday, February 12, 2015

வைரமுத்துவின் இந்த வாரக் குமுதம் [16.02.2015] சிறுகதையும் என் ‘குட்டி’[க்] கதையும்!

பருவக் குமரிகளின் அழகைக் காட்சிப்படுத்தப் போதுமான எழுத்து வன்மை எனக்கு இல்லாததால், என் கதையின் நாயகி ‘ரூபி’யை  வர்ணிக்கக் கவிஞரின் சில  ‘வசிய’ வரிகளைச்  எடுத்தாண்டிருக்கிறேன். அவர் என்னை மன்னிப்பாராக.

வைரமுத்து சிறுகதையின் சுருக்கம்[குமுதம் படிக்காதவர்களுக்கு]:
‘தியா’, 18 வயதே ஆன ஒரு கவர்ச்சிப் பெண்[ஆசை தீர வர்ணித்திருக்கிறார் கவிஞர்!]. 

தன் தோழியான மனோகரியிடம், “நான் மூனுபேரோட பழகுறேன். காதலுக்கும் நட்புக்கும் மத்தியில் நிற்கிறேன். இவனுகள்ல எவனும் எனக்குப் புருஷன் இல்ல. மூனு பேர்ல எவன் எனக்குப் பொருத்த மானவனோ, அவனை நான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று சொல்வதிலிருந்தே இவளின் குணாதிசயத்தைப் புரிந்து கொள்ளலாம்.


“மூனு பேர்ல எவனும் என்னைத் தொட்டுப் பேசலாம். தொட்டா என்ன தப்பு? தொடுற இடம்... காரணம்தான் முக்கியம். தேவையில்லாம உணர்ச்சி வசப்படுறது ஒரு மன நோய்” என்று சொல்லுகிற அளவுக்கு முற்போக்கு எண்ணம் கொண்டவள்.


“ஆண்களோட குறைகளை மட்டுமே நீ பார்க்குற. உன் குறை உனக்குத் தெரியல” என்ற, தோழி மனோகரியின் கூற்றுக்கு.....


“என்கிட்ட எந்தக் குறையும் இருக்கிறதா எனக்குத் தெரியல. அப்படியே இருந்தாலும், அந்தக் குறைகளோட என்னை ஏத்துக்கிற ஒருத்தன் கிடைக்காமலா போயிடுவான்” என்ற பதில் இவளின் வாழ்தல் பற்றிய புரிதலை எடுத்தியம்புகிறது.


அடுத்த சில ஆண்டுகளில், இந்த இரு இளம் தோழிப் பெண்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பதை விவரிப்பதே இந்தச் சிறுகதையின் நோக்கமாக உள்ளது.


ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள்.


தியா மூன்று வாலிபர்களுடன் நட்புக்கொண்டிருக்கிறாள்[இது மனோகரிக்கும் தெரியும்].


மூவருள் வெங்கட் ஒருவன்; தன் பெற்றோரிடம் இவளை அழைத்துச் செல்கிறான். இவள், காலணியைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைந்ததும், கால் மேல் கால் போட்டு அமர்ந்ததும் வெங்கட் குடும்பத் தார்க்குப் பிடிக்காததால் இவர்களின் உறவு முறிகிறது.


மார்பகங்களைத் திறந்து போட்டுத் திரிகிறாள் என்பதால், முதலில் நட்பு பாராட்டிய சேகர்மேனனும் இவளின் உறவைத் துண்டிக்கிறான்.


“உண்மையைச் சொல்லு, உனக்கு எத்தனை காதலர்கள்?” என்று கேட்டு, இவளின் ஏடாகூடமான பதிலால் விலகுகிறான் மூன்றாமவன்.


இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில்.........


சென்னை விமான நிலையத்தில், மனோகரியைச் சந்திக்கிறாள் தியா.


கண் பார்வையற்ற ஓர் ஆடவனுக்கு வாழ்க்கைப்பட்டு, ஒரு மழலைக்குத் தாயாகவும் ஆகியிருந்த மனோ, “மூனு பேரில் நீ யாரை செலக்ட் பண்ணின?” என்று தியாவிடம் வினவுகிறாள்.


“என்னிடம் குறையிருந்தாலும் அதோட என்னை ஏத்துக்கிற ஆம்பிளையை என்னால சந்திக்க முடியல” என்பது தியாவின் பதிலாக இருக்கிறது.


மனோ, தோழியைக் கடிந்துகொள்கிறாள்; அவளிடம் விடை பெற்று, தன் கணவன், குழந்தையுடன் கோவை செல்லும் விமானம் நோக்கி நடக்கிறாள்.


‘யார் குறைப் பிறவி? அவளா? அவள் கணவனா? மனம் ஊனப்பட்ட நானா?’ என்று மனதுக்குள் கேள்வி எழுப்பித் திகைத்து நிற்கிறாள் தியா.


மேற்கண்டவாறு முடிகிறது.கதை.
என் கதை:                                                  ரூபி

லைந்த ஓவியமாகக் காட்சியளித்த ரூபியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினார் ராகவேந்தர்.

“நீ அஞ்சு வயதுக் குழந்தையா இருந்தபோது உன் அம்மா செத்துப்போனாள். போறதுக்கு முன்னால, உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கணும்னு என்கிட்ட சத்தியம் வாங்கினா. நான் சத்தியம் தவறலாமா? நீ அழலாமா? உன்னை நான் அழ விடுவேனா? சொல்லுடா, உன்னைத் தற்கொலை செய்துக்கத் தூண்டிய அவன் யார்? காதலிச்சிக் கெடுத்துக் கைவிட்ட அந்தப் பொறுக்கி எந்த ஊர்? ஒரே நாளில் அவனைக் கண்டுபிடிச்சி உன் கண் முன்னாலயே கண்ட துண்டமா வெட்டிப் போடுறேன். சொல்லு...சொல்லுடா” என்று ஆவேசம் பொங்க அக்கினி வார்த்தைகளை உதிர்த்தார் பெரும் செல்வந்தரும் மேலிடங்களில் நிரந்தரச் செல்வாக்குப் பெற்றவருமான ராகவேந்தர்.

ரூபி சொல்லிவிடத்தான் நினைத்தாள். சொல்ல நினைத்த வார்த்தைகளை ஒருங்கிணைப்பது  அத்தனை எளிதாகப்படவில்லை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள்.

அவள் பேசத் தொடங்குவதற்கு முன்னால் அவளைக் கொஞ்சம் வர்ணித்துவிடலாம்.

‘ரகளை செய்யும் அழகு அவளுடையது. உளி படாத சதைச் சிற்பம். 170 செண்ட்டிமீட்டர் உயரம். அந்த உயரத்திற்கு அவள் எழுபது கிலோ எடை இருக்கலாம் என்பது பௌதிக அனுமதி. ஆனால், அறுபத் தைந்தில் ஒரு அவுன்ஸ் கடக்க மாட்டாள். மார்பில் தவிர வேறேங்கும் உபரிச் சதை ஆகாது என்பது அவள் உடற்கொள்கை. முறைக்கும் மற்றும் முறைக்க வைக்கும் அவளது ஜோடித்திமிர். எந்த ஆணுக்குமான சவப்பெட்டி என்று சொல்லும் அந்த அழகின் பள்ளம். நட்சத்திரங்கள் உடைந்து சிதறும் கண்ணில் அந்த அலட்சியம்தான் கவர்ச்சி. இரை உண்ணாத பாம்பைப் போல உள்ளடங்கிய வயிறு. வழித்தெடுத்த மெழுகைத் துடைத்தெடுத்த தொடைகள்.’[நன்றி: வைரமுத்து]

பெண்களின் அழகை மட்டுமே வர்ணித்து ஒரு புத்தகம் எழுதினால், அதன் அட்டைப் படமாக இவளைப் போடலாம். ஒரு தூக்குத் தண்டனைக் கைதி, கடைசி ஆசையாக இவளை ஒரு முறை தொட்டுக் கொள்ளலாம். சாகும் தருணத்தில் இவளைப் பார்த்துக்கொண்டிருந்தால் மரண பயம்கூட விலகிப் போகும்!

இத்தனை பேரழகியான இந்த ரூபிதான் தற்கொலைக்கு முயன்று தப்பிப் பிழைத்து, தனக்கிருக்கும் ஒரே ஆதரவான தந்தையைக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தாள்.

பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராகவேந்தரிடம் ரூபி சொன்னாள்: “அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி யாரும் என்னைக் கெடுக்கல. ராகவேந்தர் மகளைப் பலவந்தப்படுத்த யாருக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு? உங்க செல்ல மகளான நான்தான் பல ஆண்பிள்ளைகளைக் கெடுத்திருக்கேன்.....”

அதிர்ந்தார் ராகவேந்தர்: “என்னம்மா சொல்றே?”

“நடந்ததைத்தான் சொல்றேன். காதலைப் பொழுதுபோக்கா எடுத்துட்டு ஆண்களோடு விளை யாடிட்டேன். வினோத் என்னோடு படிச்சவன். என் காதல் விளையாட்டுக்கு முதல் பலி அவன்தான். இப்போ படிப்பைப் பாதியில் விட்டுட்டான். முகத்தில் தாடியும் உடம்பில் அழுக்குமா புதுக் கவிதை எழுதிட்டு அலையறான்.....”

பிரமை பிடித்தவராகக் கேட்டுக்கொண்டிருந்தார் ராகவேந்தர்.

“விரிவுரையாளர் ரவிவர்மா, கட்டிய பெண்டாட்டியைக் கைக்குழந்தையோடு பிறந்த வீட்டுக்கு விரட்டக் காரணமும் நான்தான். இன்னும் எவ்வளவோ இருக்கு....”

முகம் முழுக்கத் துக்கம் பரவ, மகள் சொல்லும் சோகக் கதையைச் செவிமடுத்துக்கொண்டிருந்தார் ரூபியின் தந்தை.

ரூபி தொடர்ந்தாள். “ஆடைகளை மாத்துற மாதிரி, காதலர்களையும் மாத்தினேன்.என்னால் காதலித்துப் புறக்கணிக்கப்பட்டவர்கள் பித்துப் பிடிச்சி அலையறதைப் பார்ப்பதில் எனக்கு அலாதியான திருப்தி. ஆனா, அந்தத் திருப்தி நீடிக்கல. நாலு நாள் முந்தி நடந்த அந்தச் சம்பவம் என் மனசை மாத்திடிச்சி. நம்ம விட்டுக் கார் டிரைவர் முருகேசனும் அவனுடைய குருட்டுத் தாயும் தற்கொலை செய்துட்டாங்களே, அந்தச் சம்பவத்தைத்தான் சொல்றேன். அவங்க சாவுக்கு நான்தான் காரணம்.....

.....முருகேசனின் வாட்டசாட்டமான உடம்பு மேல ரொம்ப நாளாவே எனக்கு ஆசை. சம்பவத்துக்கு முந்தின நாள், விருந்தினர் விடுதிக்கு அவனை அழைச்சிட்டுப் போனேன். ரொம்பவே பயந்தான்; ஓடப் பார்த்தான். பொய்ப் பழி போட்டு வேலையை விட்டு நீக்கிடுவேன்னு பயமுறுத்தி இணங்க வெச்சேன். யாருடைய துரதிருஷ்டமோ, நாங்க சந்தோசமா இருந்ததைத் தோட்டக்காரரும் சமையல்காரரும் பார்த்துட்டாங்க......

.....அவங்க பார்த்ததைப் பத்தி நான் கவலைப்படல. முருகேசன் அரண்டு போய்ட்டான். ஊரை விட்டு ஓடிப்போக நினைச்சான். பார்வையில்லாத தாயை அனாதையா விட்டுப் போக அவன் மனசு உடன்படல. நடந்ததை அவள்கிட்டே சொல்லியிருக்கான். நீங்க கொடுக்குற தண்டணையிலிருந்து தப்ப முடியாதுன்னு நினைச்சோ என்னவோ அவள் தூக்கில் தொங்க, தாய் மேல இருந்த அளவில்லாத பாசத்தால இவனும் தற்கொலை பண்ணிட்டான்.....”

சொல்லி நிறுத்திய ரூபி, “ஒரு கன்னிப் பொண்ணுக்குக் காதல் வரலாம்; கல்யாணத்துக்கு முந்தி காமம் வரலாமா அப்பா? என்னுடைய காமம் எத்தனை பேருடைய வாழ்க்கையைப் பாழாக்கிடிச்சி.” என்று கூறி முடித்து, வெடித்துச் சிதறி “ஓ”வென அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தார் ராகவேந்தர்.

=============================================================================================


12 comments :

 1. முகத்தில் தாடியும் உடம்பில் அழுக்குமா புதுக் கவிதை எழுதிட்டு அலையறான்.....”

  நல்ல வேளை அந்த பட்டியலில் நானில்லை" #புதுக்கவிதை

  நிகழ்கால எதார்த்த உண்மைகளை சேர்த்திருக்கிறது சிறுகதை அழகு

  ReplyDelete
 2. என் வயதில், நான் காதலித்ததும் இல்லை; காதலிக்கப்பட்டதும் இல்லை செந்தழல் சேது

  நன்றி சேது.

  ReplyDelete
 3. யதார்த்தமான உண்மைகள் எனது புதிய பதிவு வாருங்கள் நண்பரே..
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.

   தவறாமல் வருவேன்.

   Delete
 4. வைரமுத்து கவிஞர் ஆயிற்றே வர்ணித்து தள்ளிவிட்டார் போல! காதல் வரலாம்! காமம்தான் வரக்கூடாது! உண்மைதான்! சிறப்பான கதை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வைரமுத்துவின் முழுக்கதையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   நன்றி சுரேஷ்.

   Delete
 5. அந்தக் கதையை நானும் படித்தேன்.வர்ணனை கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.உள்ளாடை பிராண்டை யும் கூறி இருந்தார்
  உங்கள் கதையின் கருவுடன் ஓரளவிற்க்கு ஒத்துப் போகிறது.
  இரண்டுமே பிடித்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஓவர் என்றாலும் படிக்கச் சுவையாக இருக்கிறதல்லவா? காரணம், கதாசிரியர் என்பதோடு சிறந்த கவிஞரும்கூட.

   நன்றி முரளி.

   Delete
 6. பௌதிக அனுமதி...! எப்படீங்க இப்படி...?

  ReplyDelete
  Replies
  1. 170 செண்டிமீட்டர் உயரத்துக்கு எழுபது கிலோ எடை அதிகமில்லை என்கிறார் வைரமுத்து. ஓர் இளம் பெண்ணுக்கு இது அதிகம் என்றே தோன்றுகிறது. கவிஞரைக் கேள்வி கேட்பது யார்? கிடக்குது விடுங்க.

   நன்றி DD.

   Delete
 7. நம் நாட்டு கதைகளில் தான் இப்படி....
  இங்கே உண்மையிலேயே....

  ReplyDelete
 8. இங்கே இம்மாதிரிக் கதைகள் வெறும் கற்பனைகளாகவே இருந்துவிடட்டும்.

  நன்றி அருணா.

  ReplyDelete