ஞாயிறு, 28 ஜூன், 2015

‘தமிழ்நாடு’ மாநிலத்தின் பெயர் மாற்றப்படுமா? எப்போது?

தமிழ்நாடு அரசு குறைந்த விலையில் குடிநீர்ப் பாட்டில்களை விற்கிறது. இதற்கான செலவை அரசுதான் ஏற்கிறது. ஆனாலும், ‘அரசு குடிநீர்’ என்றில்லாமல், ‘அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வசதி குறைந்த நம் மக்களுக்குக் குறைந்த விலையில் தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் இத்திட்டம் செயல்பட அம்மாவின் அளப்பரிய கருணையே காரணம் என்பதால், ‘அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டியதில் எள்முனை அளவும் தவறு இல்லை எனலாம்.

அம்மா உணவகத்திற்கும் அரசுப் பணம்தான் செலவிடப்படுகிறது என்றாலும், அதன் உருவாக்கத்திற்கும்  அம்மாவின் அன்புள்ளமே காரணம் என்பதால் ‘அம்மா உணவகம்’ என்று அழைப்பதிலும் குறை காண வாய்ப்பே இல்லை.
மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துமாத்திரைகள் வழங்கி வருவது போற்றுதலுக்குரிய புனிதப் பணி என்பதால், ‘அம்மா மருந்தகம்’ என்றழைப்பதும் பொருத்தமானதே.
இனி, புதிதாகத் தொடங்கவிருக்கும் இவை போன்ற நற்பணிகளுக்கும் அம்மா பெயரையே சூட்டுவது தொடரும் என நம்பலாம்.

இவற்றோடுகூட, ஆவின், அரசுப் போக்குவரத்து போன்ற இன்ன பிற துறைகளின் பெயரோடும் ‘அம்மா’ என்னும் பெயரை இணைப்பது வரவேற்கத்தக்கது. அம்மா ஆவின், ‘அம்மா[அரசுப்] போக்குவரத்துக் கழகம், ’ ‘அம்மா[அரசு]மருத்துவமனை’, ‘அம்மா[தமிழ்நாடு] அரசு’.....என்றிப்படி! [அரசின் சாதனைகள் குறித்துப் பேசும்போது, “எனது அரசு” என்று அம்மா அவர்கள் குறிப்பிடுவது அறியற்பாலது].

மக்களின் நல்வாழ்வு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நல்லாட்சி புரிந்துவரும் அம்மா, தமிழ் மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கவர் என்பதில் மாறுபட்ட கருத்துடையார் எவருமிலர்.

அம்மாவையும், அவரின் அரிய சிறந்த பணிகளையும் என்றென்றும் மறவாதிருக்க, இம்மாதிரி சிறிய சிறிய துறைகளுக்கு / நிறுவனங்களுக்கு அம்மாவின் பெயர் சூட்டினால் மட்டும் போதாது; தமிழ்கூரும் இந்த நம் மாநிலத்துக்கே அம்மாவின் பெயர் சூட்டுதல் ஏற்புடையதாக இருக்கும். எனவே.....

‘தமிழ்நாடு’ என்பதை, ‘அம்மா நாடு’ [தமிழ் வாழ்வதும் வளர்வதும் அம்மாவின் அருளால்தான் என்பதால், தமிழ் உணர்வாளர்கள் வருந்தத் தேவையில்லை] என மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை  அம்மாவுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களும் தொண்டர்களும் மேற்கொள்ள வேண்டும்.

செய்வார்களா? எப்போது?
அம்மா நாமம் வாழ்க!

=============================================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக