சனி, 20 ஜூன், 2015

பொல்லாத விதியும் ஒரு ‘கவர்ச்சி நடிகை’யின் உள்ளாடையும்!!! [எச்சரிக்கை! நீ..ண்..ட பதிவு]

'விதி'யைப் பற்றி நீங்கள் அறிவீர்களோ இல்லையோ பிரபல 'கவர்ச்சி நடிகை' பூஜாவைப் பூர்ணமாக அறிந்து வைத்திருப்பீர்கள் என்பதில் எள்முனை அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை.

பஞ்சபூதங்களில் ஒன்றான 'காற்று'க்கு, பூஜாவைக் காட்டிலும் பூஜாவின் உள்ளாடையின் மீது ரொம்பவே பித்து.

அன்றொரு நாள், மக்கள் மனங்களில் 'காதலுணர்வு' மலர்ந்துகொண்டிருந்த மாலை மயங்கும் அரையிருட்டுப் பொழுதில், எதோவொரு  திக்கிலிருந்து 'புர்ர்ர்ர்ர்ர்ர்'ரென அசுர வேகத்தில் புறப்பட்ட சூறாவளிக் காற்று, குப்பைகூலங்கள், கூரை வீடுகளின் ஓலைக் கீற்றுகள், தகர டின்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் என்று எதிர்ப்பட்ட அத்தனை பொருள்களையும் வாரி இறைத்தும்  உருட்டியும்  விளையாடியவாறு பயணித்துக்கொண்டிருந்தது.
மொட்டை மாடிகளில் உலர்ந்துகொண்டிருந்த அத்தனை துணிமணிகளையும் ஆகாய வெளியில் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தவாறு சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது.

அந்த அசுர வேகப் பாய்ச்சலிலும், பூஜாவின் உள்ளாடை மீது அது கொண்டிருந்த 'மோகம்' காரணமாகவோ என்னவோ, அது கொடியில் தொங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே சிறிது நேரம் தொட்டுத் தடவி ஊசலாட்டி மகிழ்ந்த பின்னர், அதைத் தன்  கரங்களில்  ஏந்தியவாறு அந்தரத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிந்தது.

அச்செயல், வாயுபகவானின் மறு அவதாரமான தன் தகுதிக்கு இழுக்குச் சேர்க்கும் என எண்ணி, அந்த ஆடையை ஏதோவொரு திசையில் வீசியெறிந்துவிட்டுச் சென்றது.

காற்றுக் கடவுளின் கரங்களிலிருந்து விடுபட்டு அங்குமிங்குமாகச் சிறிது நேரம் அலைக்கழிந்த ஆடையானது நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் வரிசை கட்டியிருந்த மரங்களில் ஒன்றான ஒரு புளிய மரத்தின் பக்கவாட்டுக் கிளையொன்றில் சிக்கி ஊசலாடியது.....

இது ஒரு நிகழ்வு.

இப்போது, இந்த நிகழ்வின் முடிவை மாற்றி ஒரு வினாவை முன்வைக்க இருக்கிறேன்.

'காற்றுக் கடவுளின் கரங்களிலிருந்து விடுபட்டு அங்குமிங்குமாகச் சிறிது நேரம் அலைக்கழிந்த அந்த ஆடை, மரக்கிளையில் சிக்காமல், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரின் முகத்தை  மூடி மறைத்துக்கொண்டது.

நிலை தடுமாறினார் அவர். அங்குமிங்கும் அலைந்து பக்கவாட்டிலிருந்த மரத்தின் மீது மோதியது வாகனம். பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த மனிதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மக்கள் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

அவர்களில் ஒருவர் சொன்னார்: "பலத்த காத்து வீசணும். அதுல பறந்து வந்த உள்ளாடை முகத்தை மறைக்க, அடிபட்டுச் சாகணுங்கிறது இந்த ஆளோட விதி."

கவனியுங்கள். ஆடை ஒன்று பலத்த காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, ஒரு மரக்கிளையில் சிக்கியது வெறும் நிகழ்வு. அதே ஆடை ஒரு மனிதனின் மரணத்திற்குக் காரணம் ஆனபோது அது ‘விதி’ ஆனது.

விதி?

விதிக்கப்பட்டது...நிர்ணயிக்கப்பட்டது. பெரியவர் இப்படித்தான் சாக வேண்டும் என்று முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக நம்மவர்கள் நம்புகிறார்கள். இது சரியா?

மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று[எப்போதும் இருந்துகோண்டே இருப்பதா, ஒரு காலக்கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது] வீசுவது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை அது ஒரு நிகழ்வு மட்டுமே; அதாவது, இயற்கை நிகழ்வு.


காற்றானது சூறாவளியாகவோ புயலாகவோ வீசுவதும் குறுக்கிடும் பொருள்களை உருட்டிப் புரட்டிச் சிதைப்பதும் அழிப்பதும் ஒரு தொடர் நிகழ்வு; இயற்கை நிகழ்வு. உயிரற்றவை போலவே உயிருள்ளவையும் அதில் சிக்கிச் சிதையவோ அழியவோ செய்கின்றன. இதற்கு மனிதனும் விதிவிலக்கல்லன்.

பெரு நெருப்பால், பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளத்தால் உயிர்கள்/ மனிதர்கள் பாதிக்கப்படுவதும் இயற்கையே.

இந்நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலானவை. 

மனித இனத்திற்குப் பாதிப்பு ஏற்படாதபோது இவற்றை வழக்கமான நிகழ்வுகள் என்று  ஏற்றுக்கொள்கிறோம். பாதிப்பு நேர்ந்தால் 'விதி' என்கிறோம்.

வேடிக்கையாக இல்லை!?

கீழ்க்காண்பது, 2013இல் நான் எழுதிய பதிவு. படியுங்களேன்.

ன்ன நேரத்தில், இன்ன இடத்தில், இது இதெல்லாம், இப்படி இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது விதி.

15.07.2013 பிற்பகல் மணி 04.03க்கு இந்தப் பதிவு எழுதி முடிக்கப்படணும்கிறது இந்த ஒரு நிகழ்வுக்கான விதி.

இதை நான்தான் எழுதணும்கிறது காமக்கிழத்தனாகிய எனக்கென வகுக்கப்பட்ட விதி.

இதை இப்போ நீங்க படிச்சிட்டிருக்கீங்க இல்லியா, இது உங்களுக்கான  [தலை]விதி.

எதிர்பாராம மின்சாரம் ’கட்’ ஆகுது. “அடச் சே...”ன்னு எரிச்சலோட மேசை மேல ஓங்கித் தட்டுறீங்க. அங்கே உட்கார்ந்திருந்த ஒரு ‘ஈ’ நசுங்கிச் செத்துப் போகுது. இது ஈயோட விதி.

“டாக்டர் எஞ்சினீர்னு யார்யாரோ என்னைப் பெண் கேட்டு வந்தாங்க. ஆளு ஹீரோ  மாதிரி இருக்கார்னு இந்த ஆளை ஆசைப்பட்டுக் கட்டிகிட்டேன். இப்போ கல்யாணம் காட்சின்னு போனா கட்டிக்க ஒரு பட்டுப் புடவைகூட இல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கிறோம். எல்லாம் விதி...என் தலை விதி” என்கிறாள் என் எதிர்த்த வீட்டு அன்னபூரணி. இப்படித் தன் விதியைச் சொல்லிப் புலம்புற அன்னபூரணிகள் எல்லா ஊர்களிலும் இருக்காங்க.

“சென்னைக்குக் கார் எடுத்துட்டுக் கிளம்பினான். ரெண்டு தோசை போடுறேன், சாப்பிட்டுப் போடான்னு சொன்னேன். ஆம்பூர் போயி பிரியாணி சாப்பிடுறேனுட்டுப் போனான். பின்னால போன கார்க்காரன் இடிச்சதுல அந்த நிமிசமே எமலோகம் போய்ச் சேர்ந்துட்டான். தோசை சாப்பிட்டுட்டுப் பத்து நிமிஷம் கழிச்சிப் போயிருந்தா இந்த விபத்து நடந்திருக்குமா? விதி யாரை விட்டுவெச்சுது?” இப்படிப் புலம்பினது என் சிநேகிதனுக்குச் சினேகிதனோட அம்மா செல்லம்மா. இப்படி ஒரு செல்லம்மாவை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மேலும் பல பேரைக் கேள்விப்பட்டும் இருக்கலாம்.

இப்படி, விதியை நினைக்காத, அதைப் பத்திப் பேசாத மனுசங்க இந்த உலகத்தில் இல்ல; இல்லவே இல்லை.

இப்போ, உங்க பகுத்தறிவு மூளையில், மனுசங்களுக்கு மட்டும்தான் விதியா, மத்த உயிர்களுக்கு இல்லையான்னு ஒரு கேள்வி தலை தூக்கியிருக்கும்.

அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு மான். வயிராற புல் மேஞ்சுது. தாகம் எடுத்ததால ஒரு நீர் நிலையத் தேடிப் போகுது. அந்தப் பக்கத்தில் சிங்கம், சிறுத்தை, ஓநாய் போன்ற கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருப்பது அதுக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையா நாலா புறமும் பார்த்துட்டே நீர்நிலையை அடைந்து, தண்ணீரில் வாயை வெச்சி உறிஞ்ச ஆரம்பிக்குது. தாகம் எல்லை மீறிப் போனதால தண்ணிக்குள்ள முதலை இருப்பதை மறந்துடிச்சி. தண்ணியில் வாயை வெச்ச அடுத்த நொடியே உள்ளேயிருந்து ’சரேல்’னு மேலெழும்பிய ஒரு முதலை மானின் தலையைக் கவ்விப் பிடிச்சி உள்ளே இழுத்துட்டுது. அன்னிக்கி தினத்தில் ஒரு முதலைக்கு இரையாகணும்கிறது அந்த மானுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி. சுவையா மான் கறி சாப்பிட்ணும்கிறது முதலையோட விதி. இப்படி எல்லா உயிரையும் விதி ஆட்டிப்படைக்குது.

ஜடப் பொருள்களையும் அது விட்டு வைக்காது.

பூமி தன்னைத்தானே சுத்திட்டிருக்கு. சூரியனின் ஈர்ப்புச் சக்தியால அது சூரியனையும்  சுத்திச் சுத்தி வருது. என்னிக்கோ ஒரு நாள்,  சூரியனைச் சுத்துறதை நிறுத்திட்டு, தன்னைத்தானே சுத்துறதும் தடைபட்டுக் கீழே கீழே கீழே சரிஞ்சி துக்கிளியூண்டு புள்ளியா மாறி மறைஞ்சும் போச்சுன்னா, அதுக்கும் விதிதாங்க காரணம். யுக யுகாந்தரங்களுக்கு அப்புறம், சூரியனே வெடிச்சிச் சிதறி, வெட்ட வெளியில் சிறு சிறு தீப் பந்துகளா சுத்தி வர ஆரம்பிச்சா  அதுவும் விதியினுடைய சித்து விளையாட்டுதான். ஆக, பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பொருளும் விதியின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பவே முடியாது.

”என்னப்பா காமக்கிழத்தா, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?

அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே  நானும் கேட்க நினைக்கிறேங்க.”

“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.

நான் கட்சியெல்லாம் மாறலீங்க. மேலே நீங்க படிச்சதெல்லாம் ஆன்மிகவாதிகள் சொல்லிட்டுப் போன வியாக்கியாணங்களை அடிப்படையா வெச்சி நான் சொன்னதுங்க. எனக்கு இந்த விதி சதி மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. மனுசனுக்கு ஆறறிவு இருக்கு. சுயமா சிந்தித்துச் செயல்பட முடியுது. மூளையின் செயல் திறனைப் பொருத்து அவனுக்கு இன்ப துன்பங்கள் நேருதுன்னு நம்புறவன் நான்.

ஒரே ஒரு உதாரணம் மட்டும். [பாதி படிச்சதோட நீங்க ஓடிடக் கூடாதில்ல?]

மழை பெய்து தரையெல்லாம் ஈரமா இருக்கு காத்தும் வேகமா வீசுது. அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரர் அவசர வேலையா போய்ட்டிருக்கார். ஒரு சாலையைக் கடக்க நேரும்போது, எதிரே ஒரு கார் வருது. ஈரத் தரை வழுக்குங்கிறது அவருக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையாத்தான் நடையை எட்டிப் போடுறார். ஆனாலும், ஈரத் தரையில் கால் சறுக்க, குப்புற விழறார். கார் அவரை மோதித் தள்ளி அரைச்சிட்டுப் போயிடுது.

கட்டஞ்சட்டைக்காரர், அறிவுபூர்வமா செயல்பட்டும் அவர் சறுக்கி விழுந்ததுக்குக் காரணம் திடீர்னு வேகமா வீசிய காத்து. அது அவரை ‘விசுக்’னு பாதையில் தள்ளி விட்டுடிச்சி.

ஒரு மனிதன் அறிவுபூர்வமா செயல்பட்டும்கூட, எதிர்பாராத சம்பவங்களால் உயிரிழக்கிறான்கிறதுக்கு இந்தச் சம்பவத்தை உதாரணம் காட்டினேன். இந்தச் சம்பவத்தைத் தற்செயலானதுன்னு ஆன்மிகவாதிகள் ஒத்துக்க மாட்டாங்க.

“திடீர்னு அதி வேகத்தில் காத்து வீசிச்சே, அது எப்படி? அதுதான் விதியின் செயல். கட்டஞ்சட்டைக்காரரைக் கொல்வதற்கு இங்கே அதி வேகக் காற்றைப் பயன்படுத்தியது விதி”ன்னு வாதிப்பாங்க.

‘காற்றின் வேகத்தை அனுமானித்து, தன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அவர் உயிர் பிழைத்திருந்தால்......’ இப்படி நாம் மடக்கினா, அதுக்கும் ரொம்ப சாமர்த்தியமா பதில் சொல்லிடுவாங்க.

அந்தப் பதில், “அவர் அன்னிக்கி சாகக் கூடாதுங்கிறது விதி. ‘இதை இப்படிச் செய். அதை அப்படிச் செய்’ என்று மனித அறிவை நெறிப்படுத்துவதே விதிதான். சுருக்கமா சொன்னா, ஐந்தறிவு, ஆறாவது அறிவு, பகுத்தறிவு, பகுக்காத அறிவு எல்லாமே விதிக்குக் கட்டுப்பட்டவைதான்” என்பதாக இருக்கும்.

இவங்க வாதத்தைச் சரின்னு ஏத்துகிட்டா,  கை அசைக்கிறது, கண் சிமிட்டுறது,  ஒன்னுக்கு ரெண்டுக்குப் போறது, பொறாமைப் படுறது, பொய் பேசுறது, புணர்ச்சி பண்றது ...இப்படி எல்லார்த்துக்குமே விதிதான் காரணம்னு சொல்லவேண்டி வரும்.

பிறக்கிற குழந்தைக்குத் தலையில் எத்தனை மயிர் இருக்கணும். வளர்ந்த ஒரு மரத்தில் ஒரு மைக்ரோ வினாடியில் எத்தனை இலை உதிரணும். உலகத்திலுள்ள  ஒவ்வொரு உயிரும் பெய்யுற மூத்திரம் என்ன என்ன எடையில் இருக்கணும் என்பதெல்லாம்கூட விதியின் மூலம் நிர்ணயிக்கப் படணும். இல்லையா?

இதெல்லாம் சாத்தியமா? அப்புறம் என்னங்க விதி? வெண்டைக்காய் விதி.

”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னா, மனுசனுக்கு அறிவுன்னு ஒன்னு எதுக்கு?”

இப்படி ஒரு கேள்வியை முன் வைத்தால்?

“மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, அவன் பல பிறவிகள் எடுத்து இன்ப துன்பங்களை அனுபவிக்கணும்கிறது விதி. பிறவித் துன்பத்திலிருந்து விடுபட விதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கணும். அதுக்குக் கடவுளின் கருணை தேவை. கடவுளை உணர ஆறறிவு தேவை” என்பது அவர்கள் பதிலாக இருக்கலாம்.

“என்னதான் பகுத்தறிவுடன் செயல்பட்டாலும், விதிப்படிதான் எல்லாம் நடக்கும்னு சொல்றீங்க. விதியே நம்முடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்னா, நாம் செய்யுற பாவ புண்ணியங்களுக்கும் விதிதானே பொறுப்பு? அப்புறம் எதனால் மனுசனுக்குப் பிறவித் துன்பம்? ஏன் இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களைக் குழப்புறீங்க?”

இப்படிச் சவுக்கடி கொடுத்தால்.........

“இதெல்லாம் மகான்கள் சொல்லிப் போனது. அவங்களைப் பழிச்சிப் பேசினா பாவம் வந்து சேரும்” என்று பயமுறுத்துவார்கள்; ஆட்களை வைத்து அடிக்க வருவார்கள்.

ஆளை விடுங்க.

***************************************************************************************************************************************************
‘விதி’ என்று தலைப்பிட்டிருந்தால் இளவட்டங்கள் வாசிப்பார்களா என்ன?.....மன்னியுங்கள்.

‘நடிகை பூஜா’...100% கற்பனை.
***************************************************************************************************************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக