இந்தத் தலைப்பு, தங்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் என்பதை நான் அறிவேன்.
‘ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்’ என்பது மக்கள் நலம் நாடுவோரின் நீண்ட கால விருப்பம்.
எவ்வகையிலேனும் இவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இவர்களின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்டால், ஜாதிச் சங்கங்களை ஒழிக்கும் பணி தேவையற்றதாகி, சங்கங்கள் தாமாகவே அழிந்து ஒழிந்து போகும். மக்களின் ஜாதிப் பற்று படிப்படியாக மறையத் தொடங்கும். ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்னும் நல்லவர்களின் கனவு நனவாகும் என்பது திண்ணம்.
அரசுகளும் அறிஞர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் சாதிகளை ஒழிப்பதற்குப் பல வழிகளிலும் பாடுபட்டு வரும் நிலையில், இப்படிச் சொல்வது கண்டிக்கத்தக்கது; காட்டுமிராண்டித்தனமானது; தண்டனைக்குரியது என்று நீங்கள் சொல்ல நினைப்பதை என்னால் உணர முடிகிறது.
“ஜாதிகளை ஒழிக்க முடியாது” என்று சொல்பவர்கள்கூட, “ஜாதிகளை ஒழிக்க வேண்டாம்” என்பதை ஏற்க மாட்டார்கள்.
நான் சொல்வது ஏற்கத்தக்கதா இல்லையா என்பதை, இப்பதிவைப் படித்து முடித்த பிறகு நீங்கள் முடிவு செய்யலாம்.
‘ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்’ என்பது மக்கள் நலம் நாடுவோரின் நீண்ட கால விருப்பம்.
‘ஒழிக்க வேண்டும்’ என்பதற்கான காரணங்களை அறிந்தால், ‘ஒழிக்க வேண்டாம்’ என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது எளிதாக அமையும்.
‘வேண்டும்’ என வாதிடுவோர் முன் வைக்கும் முதன்மைக் காரணம்..........
அவ்வப்போது நடைபெறும் ஜாதிக் கலவரங்கள் காரணமாக அளவற்ற பொருட்சேதங்களும் உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன என்பதுதான்.
இதனையும், இது போன்ற பல தீய விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான், “ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்னும் முழக்கம், மக்களின் நலம் நாடுவோரால் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.
இதனையும், இது போன்ற பல தீய விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான், “ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்னும் முழக்கம், மக்களின் நலம் நாடுவோரால் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.
‘மக்களின் மனங்களில் ஜாதி வெறியை ஊட்டுபவை இந்தச் சங்கங்கள்தான். இவற்றைத் தடை செய்வதால், வெறி தணிந்து படிப்படியாக ஜாதிப் பற்றும் குறையும். கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகும். காலப்போக்கில், சாதிகளற்ற சமுதாயம் உருவாகும்’ என்பது இவர்களின் நம்பிக்கை.
இவர்களின் நம்பிக்கை செயல் வடிவம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்பது பற்றி ஏற்கனவே நீங்கள் சிந்தித்திருப்பீர்கள். ஒரு முடிவுக்கும் வந்திருக்கக்கூடும்.
நீங்கள் எடுத்த முடிவுக்கு உரம் சேர்ப்பதாகவோ, அதை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டுபண்ணுவதாகவோ என் எண்ணங்கள் அமையலாம் என்ற நம்பிக்கையில்தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.
இந்த மண்ணின் ஏதோ ஒரு பகுதியில், ஜாதிக் கலவரம் மூண்டு, அது பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரும்போது, எனக்குள் நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வி ஒன்று உண்டு. அது..........
இந்தக் கலவரங்கள் மூளுவதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? எவை?
ஒரு சிற்றுண்டிக் கடைக்காரருக்கும் போதையில் இருந்த வாடிக்கையாளருக்கும் இடையே ‘மீதிச் சில்லரை’ கொடுப்பதில் தகராறு. போதை மனிதர் ‘வக்காளி’, ‘தக்காளி’ என்று வாய்க்கு வந்தபடி பேச, கடைக்காரர் கை நீட்டிவிடுகிறார். அவரைத் திருப்பி அடிக்க முடியாத நிலையில் சொந்த ஊர் சென்று தன் ஜாதி ஆட்களுடன் வந்து கடையை அடித்து நொறுக்குகிறார் நம் குடிமகன். ஜாதி பேதமின்றி மற்ற கடைக்காரர்களின் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன.
கடைக்காரரின் ஜாதிக்காரர்கள் போதை ஆசாமியின் கிராமத்துக்குத் திரண்டு போய் அவர்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.
குடியிருப்புகள் தரை மட்டம் ஆகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கரும்புத் தோட்டங்கள் பற்றி எரிகின்றன. பம்ப் செட்கள் உருக்குலைகின்றன.
நூற்றுக் கணக்கில் போலீஸ் படை குவிக்கப்பட்டும் கலவரம் அடங்க நான்கு நாட்கள் தேவைப்படுகின்றன. [இவை உண்மை நிகழ்வுகள்]
இது, தனி மனிதர்களால் உருவான ஜாதிக் கலவரம்.
யாரோ ஒரு குடிகாரன் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவன் அல்லது ஜாதி வெறி ஊட்டி வளர்க்கப்பட்ட ஓர் அசாதாரணன் நாற்சந்தியில் உள்ள ஒரு ஜாதி சார்ந்த தலைவருக்குத் திருட்டுத்தனமாய் செருப்பு மாலை அணிவிக்க, வெடிக்கிறது ஜாதிக் கலவரம்.
இது ஒரு தனி மனிதருக்காக உருவாக்கப்பட்ட கலவரம். இப்படிப்பட்ட பல கலவரங்களால் மக்கள் வாழ்க்கை சிதைந்து சீர்குலைந்து போனதை, நம் சமுதாய வரலாறு சொல்லும்.
இன்னும், காதல் திருமணங்கள், கோயில்களில் நுழையத் தடை போன்ற காரணங்களாலும் ஜாதிக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இம்மாதிரி கலவரங்களுக்கும் ஜாதி வெறியர்கள் சிலரே மூல காரணமாக இருந்திருப்பதைக் கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும்.
இவற்றிற்கும் தனி மனிதர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின் மீதோ நீதிமன்றத்தின் நடுவு நிலை மீதோ எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. எந்தவொரு ஜாதியிலும் சில பொல்லாதவர்களுக்கிடையே மிகப் பல நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஒரு போதும் உணர்ந்ததில்லை.
ஆக, தனிப்பட்ட நபர்களுக்காகவே வெவ்வேறு ஜாதியைச் சார்ந்த பெரும்பான்மை மக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சீரழிந்து போயிருக்கிறார்கள் என்று உறுதிபடச் சொல்லலாம்.
தத்தம் ஜாதிக்குச் சலுகைகள் வேண்டி, உண்ணா நோன்பு மேற்கொள்ளுதல், ஊர்வலம் நடத்துதல் போன்ற போராட்டங்களில் பல்வேறு ஜாதியைச் சார்ந்த மக்களும் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, இம்மாதிரி போராட்டங்களின் போது பிற ஜாதியாருடன் மோதலை உருவாக்கியதற்கான ஆதாரங்கள் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. கொடிக் கம்பம் நடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறு சிறு குழுக்களாக மோதிக் கொள்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது.
இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கும்கூட, அனுசரித்துப் போகும் மனப் பக்குவமும் பிறரை மதிக்கும் குணமும் இல்லாத சுயநல விரும்பிகளே காரணமாக இருந்திருக்கிறார்கள்.
ஜாதிச் சங்கங்கள் தடை செய்யப்பட்டாலும்கூட, இந்தச் சுயநலவாதிகள், ‘நம்ம மாவட்டம்’, ‘நம்ம ஊரு’, ‘நம்ம தெரு’ என்று ஏதாவதொரு பின்னணியில் மக்களைத் திரட்டி, கலவரங்களில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.
அமைச்சராக இருந்த ஒருவர், ஜாதிச் சங்கங்களில் முக்கிய பதவி பெற முயன்று தோற்றுப் போய், சுயமாய் ஒரு ஜாதிச் சங்கம் ஆரம்பித்து, திருமண விழாக்களில், ஏன், இழவு வாசல்களிலும்கூட தன் கட்சிக்கு ஆள் பிடிக்கும் காட்சிகளையெல்லாம் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன்.
இம்மாதிரி சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து அமைதி விரும்பிகளான மக்களை விடுவிக்க அறிஞர்களும் பொதுநல விரும்பிகளும் முயல வேண்டுமே தவிர, ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை எனலாம்.
இம்மாதிரி நச்சுப் பிறவிகளைச் சட்ட நடவடிக்கைகள் மூலமோ, சமுதாயப் புறக்கணிப்பு வாயிலாகவோ திருத்த முயல்வதே புத்திசாலித்தனம் ஆகும்.
எவ்வகையிலேனும் இவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இவர்களின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்டால், ஜாதிச் சங்கங்களை ஒழிக்கும் பணி தேவையற்றதாகி, சங்கங்கள் தாமாகவே அழிந்து ஒழிந்து போகும். மக்களின் ஜாதிப் பற்று படிப்படியாக மறையத் தொடங்கும். ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்னும் நல்லவர்களின் கனவு நனவாகும் என்பது திண்ணம்.
இது என் நம்பிக்கை. வருகை புரிந்த உங்களின் நம்பிக்கையும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
*****************************************************************************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக