சனி, 9 அக்டோபர், 2021

'போக்சோ'[Pocso]வின் பிடியில் பெண்கள்!!!


'போக்சோ'[pocso] சட்டம் குறித்து நம்மில் பெரும்பாலோர் ஓரளவுக்கேனும் அறிந்திருப்பார்கள். அந்த ஓரளவுக்கேனும் அறிந்திருந்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

இன்று செய்தி ஊடகத்தில் பரபரப்பூட்டும் வகையில் வெளியாகியிருந்த ஒரு நிகழ்வு[2 ஆண்டுகளுக்கு முந்தையது] 'போக்சோ' குறித்து மேலும் அறிந்துகொள்ளத் தூண்டியது. அந்த நிகழ்வு.....

//கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயதுச் சிறுவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. 17 வயதுச் சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயதுத் தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான்.

இதுகுறித்து, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார், இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாவதற்குப் 'ப்ரீகோசியஸ்' என்னும் 'பருவமடைதல்' காரணமாகும் (Precocious puberty)  என்று விளக்கம் அளித்துள்ளார்.

"இப்படிச் சிறு வயதிலேயே பருவமடைதல் பெண் குழந்தைகளுக்கு 8 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிலும் நடக்கிறது.

இச்சிறுவன், மிகச் சிறிய வயதிலேயே பருவமடைந்துள்ளான். மேலும் டிஎன்ஏ பரிசோதனையின் மூலமும் இவன்தான் அந்தப் பெண், குழந்தை பெறுவதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், POCSO (The Protection of Children From Sexual Offences) சட்டத்தின் கீழ் போலீசார் இச்சிறுவனைக் கைது செய்துள்ளனர்//[https://www.dailythanthi.com/News/TopNews/2017/03/23145813/12YearOld-Booked-For-Impregnating-A-17YearOld-Becomes.vpf]. 

இச்செய்தியைப் படித்தவுடன், இந்தக் குற்ற நிகழ்வில், 17 வயதுச் சிறுமிக்கும் பங்கிருக்கும்போது, அவளை ஏன் கைது செய்யவில்லை என்னும் கேள்வி என்னுள் எழுந்தது. "பெண்கள் போக்சோவில் கைது செய்யப்படுவதில்லையா?" என்னும் கேள்வியும் உடன் எழுந்தது.

தேடலைத் தொடங்கினேன்.

நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக, 'போக்சோ'வில் பெண்கள் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வரிசைகட்டி நின்றன.

அவற்றில் சிலவற்றின் முகவரிகளைக் கீழே பதிவு செய்திருக்கிறேன்.

அவற்றுள்ளும் ஒரு நிகழ்வு மட்டும் உங்களின் பார்வைக்கு.

//பொள்ளாச்சிப் பகுதியில் 19 வயது இளம் பெண் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்துவருகிறாள். அந்தப் பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயதுச் சிறுவனுடன் அவளுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவனை அவள் காதலிப்பதாகக் கூறினாள்.....

.....திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி, பொள்ளாச்சிப் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாயத் திருமணம் செய்தாள்.

அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையப் போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயதுச் சிறுவனைக் கட்டாயப்படுத்தி இளம்பெண் திருமணம் செய்தது தெரியவந்தது.

அந்த 19 வயது இளம் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்//[https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-district-police-arrested-a-young-woman-who-married-a-minor-boy-hrp-547027.html]  -AUGUST 29, 2021, 13:01 IS

மகளிரும் 'போக்சோ'வில் கைதாகிறார்கள் என்பதை, நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்களோ என்னவோ, என்னைப் பொருத்தவரை இதை அறிந்திட நேர்ந்தது புத்தம் புதிய அனுபவம்.

இந்த அனுபவம் என்னைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிட இல்லை என்பது உண்மை. காரணம்.....

பாலுணர்வைப் பொருத்தவரை ஆணுக்குள்ள பலவீனம் பெண்ணுக்கும் உண்டு. அதை இத்தனை காலமும் பெருமளவில் அடக்கி ஆண்டிட அவர்களால் முடிந்தது. மாறிவரும் சமுதாயச் சூழல் அந்த ஆளுமையைச் சற்றே குறைத்திருக்கிறது என்பது என் எண்ணம்.

ஆக, சமுதாயத்தில் பாலியல் குற்றங்கள் நாளும் பெருகிவருகின்றன என்பது மறுக்க இயலாததும், மறைக்க இயலாததுமான உண்மை.

இவற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகளின் பங்கு மிக அதிகம்.

பாலுறவுச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், உடலியல் மருத்துவர்கள், உளவியல் மருத்துவர்கள், சமூக இயல் அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுக்களை அமைத்து, உடலுறவு குறித்த குற்றங்களுக்கான காரணங்களை ஆராய்வதோடு, அவை குறித்த விழிப்புணர்வை உண்டுபண்ணுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதும், அவை தொடர்பான சட்டங்களை இயற்றி  நடைமுறைப்படுத்துவதும் மிக மிக மிக அவசரத் தேவையாகும்.

==========================================================================

https://tamil.news18.com/news/national/married-20-year-old-woman-booked-under-pocso-aru-490635.html

https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/29050042/Allure-of-Love-With-a-17-year-old-boy-26-year-old.vpf

https://www.bbc.com/tamil/india-46399495

https://tamil.asianetnews.com/crime/a-boy-raped-by-a-women-in-kerala-pmsko3