அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 11 அக்டோபர், 2021

உரசல் சுகம்!![பொழுதுபோக்கு]


குமுதம் இதழில் 33 ஆண்டுகளுக்கு [12.03.1987] முன்பு வெளியான பழைய கதை இது. ஆடவரின் பலவீனத்தை அச்சு அசலாய்ப் படம் பிடிப்பதால் இன்னும் 200 ஆண்டுகள் கழித்துப் படித்தாலும் படிப்பவர் இதழ்களில் புன்னகை மலரும்! 

ருணுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.

“இந்த மாதிரிக் காட்டான்களெல்லாம் ஏன்தான் பஸ்ஸில் ஏறுகிறார்களோ? சே!” என்று முணுமுணுத்தான்.

அவன் அமர்ந்திருந்தது இருக்கையின் ஓரத்தில். நின்று பயணம் செய்பவர்கள் அவன் மீது சாய்வதும் இடிப்பதுமாக இருந்தார்கள். அவன் மிகவும் சங்கடப்பட்டான். இப்படி ஒருவர் மீது ஒருவர் இடிப்பதும் உரசுவதும் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது.

வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொண்டு கையில் இருந்த வார இதழில் மூழ்கினான். ஆனாலும், நிற்பவர்கள் சும்மா இருக்கவில்லை; அவனை ஒரு சுமை தாங்கியாகவே நினைத்துச் செயல்பட்டார்கள்.        

அவன் மூக்கருகில் ஏதோ ஒன்று உரசி, ‘கிச்சு...கிச்சு’ மூட்டியது! சமாளிக்க முடியாமல் இரண்டு மூன்று தும்மல்கூடப் போட்டுவிட்டான். ஆத்திரத்துடன் பக்கவாட்டில் கவனித்தபோது, ஒரு கிராமத்து ஆசாமி அவன் தோளின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார்.

அவர் தோளில் கிடந்த துண்டு, காற்றில் பறந்து அவன் முகத்தில் உரசி மூக்கில் நமைச்சலை உண்டுபண்ணியது. அந்த நபரின் அசிங்கமான கோலத்தையும் அழுக்குத் துண்டையும் பார்த்தவனுக்கு வயிற்றைக் குமட்டியது.

தோளில் கிடக்கும் தனது துண்டு அருணுக்குத் தொந்தரவு தருகிறது என்பதையோ, அவனின் கனல் தெறிக்கும் கோபப் பார்வையையோ அந்த ஆசாமி உணர்ந்ததாகத் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல், “யோவ், இந்தத் துண்டைக் கொஞ்சம் மடிச்சித் தோளில் போடய்யா” என்று குரலில் அழுத்தம் கொடுத்துச் சொன்னான் அருண்.

அந்த ஆள், முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல், துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டார்; சண்டைகிண்டையெல்லாம் போடவில்லை.

அருண், மீண்டும் வார இதழில் பார்வையை மேயவிட்டான். ஆனாலும், வண்டி குலுங்கிச் சாய்ந்து நிமிரும்போதெல்லாம் அவன் மீது விழுவதும் விலகுவதுமாக இருந்தார் அவர்.

பேருந்தில் கூட்டம் குறைய ஆரம்பித்தது. ஒரு சிலர் மட்டுமே நின்றுகொண்டிருந்தார்கள்.

அருண் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனாலும், அது நீடிக்கவில்லை.

மீண்டும் அவன் முகத்தில் துணியின் உரசல். அவன் கோபம் எல்லை கடந்தது.

அந்த ஆசாமியின் துண்டைப் பிடுங்கி வெளியே எறிந்துவிடுவது என்ற தீர்மானத்துடன் பக்கவாட்டில் பார்வையை ஓட்டினான்.

அவனுள் பொங்கி வழிந்த கோபம் முச்சூடும் அடங்கிப்போனது.

இப்போது அவன் முகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டிக் ‘கிளுகிளுப்பு’த் தந்துகொண்டிருந்தது ஓர் அழகிய இளம் பெண்ணின் முந்தானை!

“ஆஹா...ஆஹா...என்ன சுகம்!” -அவன் உள் மனசு சிலாகித்தது. உடம்பு சிலிர்த்தது! அந்த லொடலொடா அரசுப் பேருந்தில் சொர்க்கத்துக்குப் பயணம் போவதாக உணர்ந்தான்.

தான் பேருந்தைவிட்டு இறங்கும்வரை அவள் தன்னருகிலேயே நின்றுகொண்டிருக்க வேண்டும் என்று தனக்குத் தெரிந்த கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டான் அருண்!!!

==========================================================================

கதையை நான் எழுதியதாகச் சொல்லிக்கொள்ளவே ஆசைப்பட்டேன். என் மனசாட்சி முரண்டு பிடித்ததால், கதையை[கொஞ்சம் மாற்றங்களுடன்] எழுதியவர் பெயரைக் கீழே தந்திருக்கிறேன்.

எழுதியவர்:                  ப.முருகேசன்.