வெள்ளி, 8 அக்டோபர், 2021

"உப்பு வாங்கலையோ... உப்பு... உப்பு"![குடும்பத் தலைவிகளுக்கான சிறப்புப் பதிவு]


சந்திரனிலும் செவ்வாயிலும் குடியேறிவிட மனிதர்கள அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் யுகத்திலும், மகாலட்சுமியும், தேவர்களும், பித்ருக்களும்[மண்டையைப் போட்ட நம் மூதாதையர்கள்] காலை நேரத்தில் நம் வீடு தேடி வருகிறார்கள் என்று சொல்லுகிற ஆன்மிகப் பிரச்சாரகர்கள் இன்றும்[அக்டோபர் 08, 2021] இருக்கிறார்கள் என்பதற்குக் கீழ்க்காணும் நாளிதழ்க் கட்டுரையே சான்று.

வழக்கம்போல, நமக்கு எழும் சந்தேகங்களையும் பதிவு['அடைப்புக்குறி'க்குள்] செய்திருக்கிறோம்.

                                              *  *  *

#வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க, குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:

*பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக்கூடாது[தேவர்கள்... சரி, தேவதைகள் வருவதில்லையா?].

*காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும்போது "மகாலட்சுமியே வருக" என்று 3 முறை கூற வேண்டும்[ஒன்னு, ரெண்டு தடவையோடு நிறுத்திட்டா, திரும்பிப் போயிடுவாங்களோ?].

*காலையில் 4.30 மணிலிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்[கோதுமை மாவு, ராகி மாவிலெல்லாம் போடுறது தப்பா?].

*காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாகவும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்[மாலை இருட்டுக்கு விளக்கு. காலையில் விளக்கு எதுக்கு? 

*விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது[இதெல்லாம் பொண்ணுக சமாச்சாரம். இதுல ஏய்யா தலையிடுறீங்க?]. 

*பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது[காசு கொடுத்தோ கைமாத்தாவோ வாங்குவதில் தப்பில்லையே?].

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக்கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்[சுமங்கலிகளுக்குக் குங்குமம்... சரி. 'சுமங்கலன்கள்'[ஆண்களில் பெண்டாட்டியை இழக்காதவர்கள்] வந்தா எதைக் கொடுக்கிறதாம்?]

*பால் பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்[பொம்மணாட்டிகளுக்கு இதுகூடவா தெரியாது?].

*வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்[கல் உப்பா, தூள் உப்பா?

*வெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடாது[கடன்தானே கூடாது; கைமாத்து?]

*அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது[வறுத்தா வறுபடாதா? புடைத்தால் புடைபடாதா?].

*செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்[ எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது[சில பெண்கள், தினசரி குளிப்பதே இல்லை['மேக்கப் மட்டும்] மகாலட்சுமி கோபிப்பாரா?]

*வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்[கொடுத்துடலாம். குமரிகளிலிருந்து கிழவிகள்வரை கழுத்தில்(மட்டும்!) துப்பட்டாவைச் சுத்திக்கிறாங்க. வருபவர் சுமங்கலியா அமங்கலியான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதாம்?]#

=========================================================================

உதவி: https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/10/08101035/3080429/Mahalakshmi-worship.vpf  -