கீழே இடம்பெற்றுள்ள 'காணொலி'[2020இல் வெளியானது. இதற்கும் 'ஜெய் பீம்' திரைப்படப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை] தமிழ்த் திரையுலகில் உள்ள வன்னிய ஜாதியினரைப் பட்டியலிடுகிறது. இதைப் போல, பிற ஜாதிப் பிரபலங்களைப் பட்டியலிடும் காணொலிகளும் இருத்தல்கூடும். என் கண்ணில் பட்டது இது மட்டுமே.
காணொலியைத் தயாரித்தவர், 'இதற்கான உள்நோக்கம் எதுவுமில்லை; தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்' என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார்.
'உள்நோக்கம்' பற்றி அவர் குறிப்பிடவில்லையென்றாலும், காணொலிக் காட்சி மூலம் வன்னிய ஜாதி நடிக நடிகையரை ஒருங்கிணைப்பதும், தம் ஜாதி மக்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதும்தான் அவரின் நோக்கம் என்பதை மிக எளிதாக அறிய முடிகிறது.
இதைக் காணும்போது, வன்னிய சங்கத்தவருக்கும் பிறிதொரு சாதிச் சங்கத்தவருக்கும் இடையே, ஏதேனும் பிரச்சினை மூண்டால், வன்னிய ஜாதியரிலுள்ள 'ரவுடி'களுக்கான[அனுமானம்தான்] ஒரு காணொலியையும் இவர் வெளியிடுவாரோ என்னும் சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாததாக உள்ளது.
இவர்களுக்கும் பிறிதொரு சாதியாருக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் எழக்கூடாது என்பதே நம் மனப்பூர்வமான விருப்பமாகும்.
இந்தக் காணொலிக்காரருக்கு நாம் வைக்கும் கோரிக்கை ஒன்று உண்டு. அனைத்துச் சாதிச் சங்கத்தினருக்கும் இது பொருந்தும்.
உங்கள் இளைஞர்களுக்கு முன்னோடிகளாக இருக்கும் தகுதி, பட்டியலில் உள்ள நடிகர்களுக்கு இல்லை என்பதை உணருங்கள்.
உங்கள் சாதியிலுள்ள பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிடுவதில் பெரும் பித்துடையவர் நீங்கள் எனின், கீழ்க்காண்போர் குறித்த காணொலிகளை வெளியிட்டு மனநிறைவு பெறலாம்.
*சாதி வேறுபாடுகளைக் கடந்து சமுதாயப் பணி செய்யும் உங்களின் சாதிக்காரர்கள்.
*சாதி பற்றிய சிந்தனைக்கு இடம் தருதற்கு நேரமே இல்லாமல் பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் தீவிரம் காட்டும் உங்களின் சாதியைச் சார்ந்த விஞ்ஞானிகள் அல்லது, விஞ்ஞானி ஆவதற்குக் கடுமையாக உழைப்பவர்கள்.
*சாதியை மறந்து ஏதேனும் ஒரு துறையில் சாதனை நிகழ்த்தியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சாதிக்கத் துடிக்கும் உங்கள் சாதி இளைஞர்கள்.
சிந்தித்தால், இவை தவிர வேறு துறைகளில் சிகரம் தொட்டவர்களின் பட்டியலடங்கிய காணொலிகளையும் உங்களால் தயாரித்திட முடியும்.
இம்மாதிரிக் காணொலிகள் உங்களின் சாதி இளைஞர்களை இலட்சியவாதிகளாக ஆக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்பது நம் நம்பிக்கை.
இதற்கான முயற்சியில் நீங்கள் உடனடியாக இறங்குவது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.
நன்றி.
பின்வருவது, அனைத்து ஜாதியைச் சார்ந்த நடிகர் பட்டியல்.
'நடிகை'யருக்கான தனிப் பட்டியலையும், 'அதிக எண்ணிக்கையிலான 10 சாதி'க்காரர்களுக்கான பட்டியலையும் உள்ளடக்கிய காணொலிகளும்கூட 'யூடியூப்'இல் இடம்பெற்றுள்ளன.
==========================================================================