வெள்ளி, 26 நவம்பர், 2021

'இந்த' நம்பிக்கையைத் திணித்தவர்கள் அயோக்கியர்களா, அறவாணர்களா?!

இந்தவொரு அசிங்க நிகழ்ச்சி நடந்தது, அறிவியல் வளர்ச்சி பெறாத இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அல்ல; 2015ஆம் ஆண்டில்.

நிகழ்ச்சி இடம்பெற்றது உலகின் எங்கோ ஒரு நாட்டில் அல்ல; தமிழ்நாட்டின் 'கரூர்' மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில்.

எச்சிலைகளில் உருண்டு எழும் திருவிழா ஆண்டுதோறும் இங்கு நடைபெறுவது வழக்கமான ஒன்று. அது, 2015ஆம் ஆண்டிலும் நடைபெற்றது.

வழக்கம்போல, அக்கிரகாரத்தில் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ், பிராமணர்களும், அவர்தம் குடும்பத்தாரும், சிறப்பு அழைப்பாளர்களும் பந்தியில் அமர்ந்து பரிமாறப்பட்ட உணவுகளை உண்டு முடித்துவிட்டு, எச்சிலைகளை எடுக்காமல் எழுந்து சென்றார்கள்.

அந்த ஆண்டு[2015], 38 ஆண்கள், 20 பெண்கள் என 58 பேர் அந்த எச்சிலைகள் மீது முட்டி மோதி விழுந்து உருண்டு புரண்டு எழுந்தார்கள். 

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தில் வாழ்ந்து 'ஜீவ சமாதி' அடைந்த  'சதாசிவ பிரமேந்திராள்' என்று ஒரு மகான் நினைவாகத்தான் அங்கே 'எச்சிலையில் உருளும்' விழா நடைபெற்று வந்ததாம்.

எச்சிலையில் உருளும் திருவிழா நாட்டில் ஆங்காங்கே உள்ள பல கோயில்களில் நடைபெற்றதும், அண்மைக்காலம்வரை அரிதாகச் சில இடங்களில் நடைபெறுவதும் தெரிந்ததே. அவற்றில் இதுவும் ஒன்றுதானே தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இதில் என்ன இருக்கிறது என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம். பதில்.....

எச்சிலைகளுக்குச் சண்டை போடும் அந்த ஜீவன்கள் போல, எச்சிலைகள் மேல் உருளுவதற்கு முட்டி மோதிக்கொள்வார்களாம் பக்தர்கள்.

எதற்காக இந்தப் போராட்டம்?

அன்னதானத்தின்போது, ஏதாவது ஒரு எச்சிலையில்[உண்பவருக்கு எதிரே அமர்ந்து] சதாசிவ பிரம்மேந்திராள்' என்னும், ஜீவசமாதியடைந்த அந்த மகானும் உணவு உண்பாராம். அந்த இலையின் மீது[அது எது என்பது தெரியாவிட்டாலும், உருளும் இலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை] உருண்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப்பெற்று, உருளுபவர் வாழ்க்கையில் சுபிட்சம் நிலவுமாம்.

இவை போன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்திருப்பதை நினைத்தால் உண்டாகும் மன வேதனையைக் காட்டிலும், இந்த அறிவியல் யுகத்திலும் நடபெறுகிறதே என்று எண்ணும்போது நாம் பெறும் வருத்தத்திற்கு வரம்பே இல்லை.

இம்மாதிரியான நிகழ்வுகளைக் கண்டித்தால், கண்டிப்பவனை..... 

மூடநம்பிக்கைகளைத் திணித்தவர்கள் மட்டுமல்ல, இவற்றைச் சுமந்து திரிபவர்களும் நிந்திக்கிறார்கள் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது!

==========================================================================http://pathivuthokupukal.blogspot.com/2015/09/blog-post_50.html