அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 25 நவம்பர், 2021

'வல்வில் ஓரி'க்குச் சாதிச் சாயம் பூசும் சங்கங்கள்!!!

 [இன்றிரவு[08.00] இத்தளத்தில் வெளியானதொரு பதிவின் திருத்தியமைக்கப்பட்ட பிரதி இது என்பது அறியத்தக்கது]

மிழ் மண்ணைப் பொருத்தவரை, கடந்தகால வரலாறு என்பது, கணிசமான அளவுக்குப் புனைந்துரையும் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட பழம் பாடல்களையும், அதே மாதிரியான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றையும், செவிவழிச் செய்திகளையும் சார்ந்து எழுதப்பட்டதாகும். இந்த வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு சங்க காலத்தில் சாதியமைப்பு இருந்தது என்று நிறுவுவது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை.

இந்த உண்மையை மறந்து சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு மன்னனான 'வல்வில் ஓரி'யை, 'அவர் எங்கள் சாதியைச் சார்ந்தவர்' என்று தமிழ்நாட்டுச் சாதிச் சங்கத்தவர்கள் சிலர் தற்பெருமை பேசிவருவது ஏற்கத்தக்கதல்ல.

அச்சாதியாருள் குறிப்பிடத்தக்கவர்கள்: 

கொங்கு வேட்டுவக் கவுண்டர்கள், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், வேளாளர்கள், முத்தரையர்கள், வன்னியர்கள் முதலானவர்கள். 

'வேட்டையாடுவதைக் குலத் தொழிலாகக் கொண்டிருந்ததால், வேட்டுவக் குலத்தவர் என்று சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படுகிற 'வல்வில் ஓரி'யின் பரம்பரையை/சாதியைச் சார்ந்தவர்கள் இன்றைய வேட்டுவக் கவுண்டர்களாகிய நாங்கள்' என்று இன்றைய வேட்டுவக் கவுண்டர்கள் சொல்கிறார்கள். 


அக்காலச் சொல்வழக்கான 'வேளிர்' என்பது இன்றைய 'வேளாளர்'களைச் சுட்டுகிறது என்பது 'வேளாளர்' & கொங்கு வேளாளர் சாதிக்காரர்களின் வாதமாக உள்ளது[இவை பற்றி இன்னும் விரிவாக, உரிய ஆதாரங்களுடன் எழுதலாம். தேவையின்மை கருதி இங்குத் தவிர்க்கப்படுகிறது]. 

இன்றிருக்கும் இந்தச் சாதிப் பாகுபாடு சங்க காலத்தில் இல்லவே இல்லை என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உரிய ஆதாரங்களுடன் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மை இதுவாக இருக்கையில், 'வல்வில் ஓரி'யைத் தத்தம் ஜாதிக்காரராக இவர்கள் நிறுவிட முயல்வது எள்ளி நகையாடுதற்குரிய செயலாகும்.

வல்வில் ஓரியை, 'வல்வில் ஓரிக் கவுண்டர்',  'வேட்டுவக் கவுண்டர் வல்வில் ஓரி', 'வல்வில் ஓரி வன்னியர்' என்றிவ்வாறெல்லாம் பேசியும் எழுதியும் பரப்புரை செயவது அந்த மன்னனை இழிவுபடுத்தும் செயல்.

இவர்கள் இவ்வாறு தொடர்ந்து பேசுவதையும் எழுதுவதையும் அனுமதித்தால், ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிற்க மாட்டார்கள்; "ஓரி எங்களவர். நாங்கள் மட்டுமே அவருக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்து விழா எடுப்போம்" என்று ஆளாளுக்கு முழங்கலாம்; போராட்டங்களும் நடத்தக்கூடும்.

'இவர்களின் இம்மாதிரியான செயல்பாடுகள் பெரும் கலவரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே,  எழுதியும் பேசியும் சாதிச் சங்கங்கள் 'வல்வில் ஓரி' மன்னருக்கு உரிமை கொண்டாடுவதைத் தடுத்திடத் தமிழ்நாடு அரசு ஆலோசிப்பது மிகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும் என்பது நம் எண்ணம்.

அரசு இது குறித்து உடனடியாக ஆராய்தல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள் ஆகும்.

==========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக