திங்கள், 29 நவம்பர், 2021

நீதியரசர் 'ரமணா'வின் உரையும் மருத்துவர் ராமதாஸின் உரிமைக் குரலும்!

அதில் பங்கேற்றுப் பேசிய தலைமை நீதியரசர் என்.வி. இரமணா, “உயர்நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வழக்காடும் மொழி, அதிக வழக்குச் செலவு ஆகியவைதான் நீதிமன்ற அமைப்பிலிருந்து சாதாரண மக்களை அந்நியப்படுத்துகின்றன. இந்நிலையை மாற்ற, நடைமுறை முட்டுக்கட்டைகளை நீக்கியும், உள்ளூர் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தும் நீதி வழங்குவதற்கான ஒட்டுமொத்த நடைமுறையையும் எளிதாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதை வரவேற்ற 'பாமக' நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,

'சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளாலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த  2006ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக, தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  மு.கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால், 15 ஆண்டுகள் ஆகியும் அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்ட நிலையிலேயே முடங்கிக் கிடக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க இயலாது என்றும் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்தது. ஆனால், அதிகாரப்பூர்வமான வகையில் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு மத்திய அரசுகளிடமிருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பதில் இல்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக ஹிந்தி[நடுவணரசின் செல்லப்பிள்ளை] அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழை நீதிமன்ற மொழியாக்க முட்டுக்கட்டை போட வேண்டும் என்று நினைத்த அப்போதைய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு தமிழுக்குத் தடை போட்டது' என்று கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்திய மருத்துவர் ராமதாஸ் அவர்கள், 

'இப்போது தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உயர் நீதிமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களே கூறியிருக்கிறார். அதனால், தமிழை, சென்னை உயர் நீதிமன்ற மொழியாக்குவதற்கு எந்தத் தடையுமில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டப்பேரவையின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி அவரின் பரிந்துரையைப் பெற்று, குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கை வெளியிடச் செய்யுமாறு மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பேரவையில் புதிய தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.' 

                                                *  *  *

இந்த அறிவுறுத்தல் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் முதல் மனிதராகத் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் இவருக்குத் தமிழுலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இவர்தம் பரிந்துரையை ஏற்று, தமிழை நீதிமன்ற மொழியாக்கும்  கடமையைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

==========================================================================

நன்றி:

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chief-justice-supreme-court-gives-confidence-action-needed-declare-tamil     - 27/11/2021