வெள்ளி, 18 அக்டோபர், 2024

‘கடவுளின் குரு’[ஜக்கி]வை அவமதித்த தமிழ்நாடு காவல்துறை! தண்டனை?!

கோவை ‘ஈஷா யோகா மையம்’ தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தன்வசம் எடுத்துக்கொண்ட நிலையில், ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறையினர் நடத்திய விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய த.நா. காவல்துறைக்கு உத்தரவிட்டது.

உத்தரவுக்கிணங்க த.நா.காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையில்.....

ஈஷா மையத்திற்குச் சென்ற பெண்களில் பலர் காணவில்லை என்றும், அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை[ஜக்கியால் அவர்களுக்குத் தீங்கு நேர்ந்திருப்பதை அனுமானிக்க நேர்கிறது] என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இது, கடவுளின் குருவானவரும், உலகின் நம்பர் 1 ஆன்மிக நெறி பரப்புபவருமான ஜக்கி வாசுதேவ் அவர்களைப் பெரிதும் அவமதிக்கும் இழி செயலாகும்.

மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜக்கி வாசுதேவரின் மனைவி விஜி, ஜக்கியிடம் கற்ற ‘மகா சமாதி’ அடையும் நெறியின்படி, தியானத்தில் ஆழ்ந்தபடியே சமாதியானார்[இறைச் சக்தியுடன் கலந்தார்] என்பது ஜக்கியைக் கடவுளாக மதிக்கும் அத்தனைப் பொதுமக்களுக்கும் தெரியும்; ஒன்றிய அரசுக்குத் தெரியும்; அந்நாள் நிதிபதிகளுக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும், மகாசமாதி அடைதல் என்பது அறிவியல் ரீதியாக சாத்தியப்படக்கூடியதா என்று ஒன்றிய அரசோ, உ.நீதிமன்றமோ[சில நேரங்களில் தானாக முன்வந்து விசாரிக்கும்] கேள்வி எழுப்பவில்லை; ஜக்கி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

மௌனம் சுமந்திருந்தன.

அந்த மௌனம், ஜக்கி கொலைகாரக் குரு அல்ல என்று அரசும் உ.நீதிமன்றமும் நம்புவதை உய்த்துணர வைத்தது.

ஆகவே, த.நா.காவல்துறையினரால், காணாமல்போனார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் பலரும், விஜியைப் போலவே ஜக்கியின் அருளாசியுடன் மகாசமாதி அடைந்தார்கள் எனலாம். அவர்களையெல்லாம் எரித்து ஆதியோகியுடன் இரண்டறக் கலக்கச் செய்திடவே ஜக்கி மிக அருமையானதும் அபூர்வமானதுமான தகன மேடையை உருவாக்கினார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

கடவுளின் குருவான ஜக்கியின் கருணையைப் புரிந்துகொள்ளாத தமிழ்நாடு காவல்துறையினருக்கு நம் கடும் கண்டனங்கள்!