தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Nov 11, 2012

விகடன், குமுதம், குங்குமம் இதழ்களின் கவனத்திற்கு.....

இது, புதுமையான ஓர் ‘ஊடல் உறவு’க் கதை!

தரமான ஒரு பக்கக் கதை கிடைக்காமல் அல்லாடும், ’நம்பர் 1’ வார இதழ்களான குமுதம், விகடன், குங்குமம்  இதழ்களின் ஆசிரியர்களுக்கு எமது அன்பான அழைப்பு.

முற்றிலும் மாறுபட்டதும், தரமானதும், புதுமையானதுமான ஒரு ஒ.ப.க. இது.

ஊடலில் தொடங்கிக் கூடலில் முடியும் இந்தப் புத்தம் புதிய கதையை உங்கள் இதழ்களில் எம் அனுமதியின்றியே பிரசுரித்துக் கொள்ளலாம்.

சன்மானம் எதுவும் தேவையில்லை!

கதைத் தலைப்பு:           என்னைத் தொடாதே!

தன்னைத் தொட வந்த வினோதனின் கைகளைத் தட்டிவிட்டாள் அமுதா.

கட்டிலிலிருந்து இறங்கிப் பத்தடி தள்ளி, கட்டாந்தரையில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

“ஏண்டா இத்தனை கோபம்?” தயங்கித் தயங்கி அவளை நெருங்கி, பட்டும் படாமலும் அவளின் வழவழத்த இடையைத் தீண்டினான் வினோதன்.

“அடச்சீ...” என்று சீறிய அவள், மரவட்டை போல் தன் பொன் மேனியைச் சுருக்கிக் கொண்டு, மேலும் ஓரடி தள்ளிப் படுத்தாள்.

“நான் தப்பேதும் பண்ணலையே. ஏன் தண்டிக்கிறே?” என்றான் அவன்.

“ஏழெட்டு பொண்ணுகளைக் காதலிச்சிருக்கீங்க. அத்தனை பேரோடவும், பீச், பார்க், ஆத்தங்கரைன்னு டூயட் பாடியிருக்கீங்க. லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கூத்தடிச்சிருக்கீங்க. நினைச்சாலே குமட்டுது.”

வெறுப்புடன் நெருப்பு வார்த்தைகளைக் கக்கினாள் அவள்.

மருண்டான் அவன்; துவண்டான்.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” கவலை தொனிக்கக் கேட்டான்.

“உங்க டைரியில் படிச்சேன்.”

டைரிய எடுத்து வந்து, அவளிடம் நீட்டி, “முழுசும் படிச்சியா?” என்றான்.

வாங்க மறுத்த அவள்.....

“பாதி படிச்சதும் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சி. தூக்கி வீசிட்டேன்.”

“அமுதா, பெண்கள் விசயத்தில் ‘தில்’ உள்ளவன் கல்யாணத்துக்கு முந்தியே ஆசை தீர விளையாடி முடிச்சுடறான். என்னை மாதிரி கோழைங்க, ’அந்த சுகத்தை’க் கற்பனையில்தான் அனுபவிச்சுத் திருப்தி பட்டுக்கிறாங்க. என்னைப் பொருத்தவரைக்கும், டைரியில் குறிப்பிட்ட மாதிரி எந்தப் பெண்ணையும் நான் காதலிச்சதில்ல; கூடிக் களிச்சதும் இல்ல; சும்மா எழுதி வெச்சேன். அதைப் படிக்கிறதில் ஏதோ ஒருவித சுகம்.

நம் கல்யாணம் நிச்சயம் ஆனதும், டைரியில், ‘இவை அனைத்தும் கற்பனையே’ன்னு எழுதி வெச்சேன். நீ அதைப் படிக்கல.

இதை அழிச்சிருக்கணும். நான் ஒரு அடிமடையன். அதைச் செய்யல.

என் மனசைத் திறந்து நடந்ததையெல்லாம் சொல்லிட்டேன். நம்புவாயா செல்லமே.”

சொல்லி முடித்த வினோதன், அமுதாவின் முதுகுப் பக்கம் சரிந்து படுத்து, மென்மையாய் அவளின் கருங்கூந்தலை வருடிக் கொடுத்தான்.

பதில் ஏதும் தராத அமுதா புரண்டு படுத்தாள், அவனுடன் இணைந்தாள்; இழைந்தாள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ11 comments :

 1. ரொம்ப நல்லா இருக்கு பரமசிவம்.
  1000 த்தில் முதலாவதா இது?
  தொடரட்டும் சாதனை முயற்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. தாராள மனதுடன் பாராட்டியிருக்கிறீர்கள் முரளிதரன்.

  நன்றி மறவேன்.

  ReplyDelete
 3. அப்படியே கடைசியில், நல்லவேளை, இப்படி ஒரு பொய்யை சொல்லி அவன் மனைவியின் கோபப்பார்வையிலிருந்து அவன் தப்பித்தான் என்று முடித்திருந்தால் ஒரு ட்விஸ்ட் இருந்திருக்கும்.

  ReplyDelete
 4. அப்படியே கடைசியில், நல்லவேளை, இப்படி ஒரு பொய்யை சொல்லி அவன் மனைவியின் கோபப்பார்வையிலிருந்து அவன் தப்பித்தான் என்று முடித்திருந்தால் ஒரு ட்விஸ்ட் இருந்திருக்கும்.

  ReplyDelete
 5. நன்றி ரஹீம் கஸாலி.

  நீங்கள் தந்திருக்கும் முடிவு மிகவும் சுவையானது.

  கதையில் வரும் வினோதன் போன்ற கோழைகள்[?] நிறைய இருக்கிறார்கள் என்பதைச் சொல்லத்தான் இந்த முடிவு.

  ReplyDelete
 6. நண்பரே உங்கள் கதை என்னை ஈர்த்துவிட்டது, அதனால் மீண்டும் வந்திருக்கிறேன்.உங்கள் அனுமதியுடன் இன்னும் சில வரிகள் தொடர்கிறேன்

  ///காலையில் எழுந்த அமுதா தூங்கிக் கொண்டிருந்த வினோதனைப் பார்த்து. "அட என் முட்டாள் கணவனே! உண்மையில் நீ காதலித்ததற்காக நான் கோபித்துக் கொள்ளவில்லை.நீ கற்பனை என்று எழுதியது பொய் என்று எனக்குத் தெரியும்.அதை மறைக்கத் தெரியாத மண்டுவாக இருக்கிறாயே! உன்னுடன் எப்படி குப்பை கொட்டுவது?நானும்தான் காதலித்தேன்.ஆனால் உன்னைப் போல் முட்டாள் தனம் எதுவும் செய்யவில்லை." மனதுக்குள் சொல்லிக்கொண்டே கலைந்திருந்த போர்வையை கழுத்து வரை போர்த்தினாள்"
  ************************

  மன்னிக்கவும் நண்பரே! ஒரு ஆர்வக் கோளாறுதான்.

  ReplyDelete
 7. முரளிதரன்,

  மன்னிப்பு எதற்கு?

  உங்களைப் போன்றவர்கள், சுவாரஸ்யமான புதிய முடிவுகளைக் காணும் வகையில் இக்கதை அமைந்துள்ளதே!

  உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 8. நல்லா இருக்கு... உண்மையாக, மனதார தவறு செய்யவில்லை என்றால் சரி தான்... tm3

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. பாராட்டுகளுக்கும் தீபாவளி வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.

  தங்களுக்கு என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
 11. நண்பரே [Avargal Unmaigal],

  உள்ளன்புடன் கூடிய தங்களின் தீபாவளி வாழ்த்துகள் என்னை நெகிழ்வித்தது; மகிழ்வித்தது.

  மனம் கனிந்த நன்றி.

  ReplyDelete