Nov 8, 2012

குமுதம் தீபாவளி மலர்[14.11.2012] சிறுகதைகளும், குமுறும் ஒரு வாசகனும்! - பகுதி1

7 பிரபல கதாசிரியர்களின் சிறுகதைகளுக்கான ‘காரசார’ விமர்சனம்!

எஸ்.ராமகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், கவுதம சித்தார்த்தன், வெ.இறையன்பு, புஷ்பா தங்கதுரை, இந்திரா சவுந்திரராஜன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகிய  பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளைச் சிறப்பிதழாக்கித் தமிழ் வாசகர்களுக்குத் ’தீபாவளி’ப் பரிசு வழங்கியிருக்கிறது  குமுதம்[14.11.2012].

இந்தப் பரிசால், குமுதத்தின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி. பிரபலக் கதாசிரியர்கள் மேலும் பிரபலம் ஆவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

இவை பற்றியது அல்ல நம் சிந்தனை.

மாறுபாடுகளும் போராட்டங்களும் நிரந்தரம் ஆகிப்போன மனித வாழ்வில், தொல்லைகளும் துயரங்களும் பெருகிக் கொண்டே போகிற அவலம் நீடிக்கிறது.

இந்த அவலத்தைப் போக்க, இவர்களின் படைப்புகள் உதவுமா?

சாதி மதப் பிணக்குகள், மூட நம்பிக்கைகள் போன்ற பல்வேறு நோய்களால் நலிவுற்றிருக்கும் சமுதாயத்தை இவர்களின் எழுத்துகள் சீர்திருத்துமா?

மனித நேயத்தை வளர்க்குமா?

கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளைப் படிக்கும் போது, இத்தகைய கேள்விகள் நம் மனதில் எழுவது இயல்பாகிப் போன ஒன்று.

பயனுள்ள இத்தகைய வினாக்களுடன் மேற்கண்ட ஏழு பிரபலங்களின் சிறுகதைகளையும் படித்த போது முகிழ்த்த எண்ணங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

கதைத் தலைப்பு: மழையாடல்.

கதாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

இரவு நேரம்.

மழை கொட்டோகொட்டுன்னு கொட்டுது.

’பத்மவிகாரை’யில், தம்மசூத்திரம் படிக்கிற, சங்கவை முதலான ஏழு புத்த பிக்குணிப் [இளம்] பெண்கள், தங்களுடைய மழைக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் கதை. [உயிர் வாழும் இக்காலப் பெண்களை உரையாட விட்டுக் கதை சொல்லியிருக்கலாமே என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். இவர் தயாரித்த பட்டியலின்படி, நூறு சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இது பற்றிச் சிந்தித்திருக்க மாட்டாரா என்ன?]

பெண்கள் நிகழ்த்தும் உரையாடல் மூலம், மழை சார்ந்த தத்துவக் கருத்துகளையும் வாரி இறைத்திருக்கிறார் கதாசிரியர்.

’அபரா’ என்ற பெண்ணிடம், “மழையைப் பற்றி நீ  என்ன நினைக்கிறாய்?” என்று சங்கவி கேட்க, [இந்தக் காலத்து நவநாகரிகக் குமரிகளுக்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்கத் தெரியுமா என்ன?!] அவள் சொல்கிறாள்.....

“உலகிலேயே மிகப் பெரிய தியானம் மழை...”

‘மழை’...புரியுது.

தியானமும் புரியுது. உலகிலேயே மிகப் பெரிய தியானம்.....ஏதோ புரிகிற மாதிரி இருக்கு. சரி.....

அதென்னங்க ‘தியானம் மழை?

மழை என்பது தியானமா? தியானமே மழையா?

அதாவது, மழை என்பது மிகப் பெரிய தியானத்துக்குச் சமம்னு திரு. ராமகிருஷ்ணன் சொல்றாருங்களா?

எனக்குப் புரியல. உங்களுக்குப் புரிஞ்சா விளக்கமா ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.

அபரா தொடர்ந்து சொல்லுது: “வானிலிருந்து பெய்யும் போது மழை ஓசை எழுப்புவதில்லை. ஏந்திக் கொள்ளும் மண்தான் ஓசை எழுப்புகிறது. அப்படித்தானே மனமும்?

இங்கே மனம் என்பது மழையா, மண்ணா? மனம் எப்போதெல்லாம் ஓசை எழுப்பும்?

ஒரு மண்ணும் புரியலையே ஐயா!

இம்மாதிரி, கேட்டற்கரிய தத்துவங்களுக்கெல்லாம் விளக்கம் தர ஆரம்பிச்சா, ஆறு பக்கத்தில் முடிந்த இக்கதை அறுபது பக்கங்களுக்கு நீளும்னு படைப்பாளர் பயந்துட்டாரோ?

’ஹரிகா’ என்கிற துறவிப் பொண்ணு சொல்லுது: “மழையை நான் வெறுக்கிறேன். “அது புதையுண்ட ஆசைகளைக் கிளரச் செய்கிறது...”

சிறுசிறு குழைந்தைகளிலிருந்து குடுகுடு கிழங்கள் வரை அத்தனை பேர் ஆசையையும் கிளறிவிடுமா?

.”மழை ஒரு தண்டனை. மழை ஒரு ரகசிய உரையாடல். மழை ஒரு பிதற்றல்.”

இப்படி ஏதேதொ சொல்லுதுங்க அந்தப் பொண்ணு.

இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்குத்தாங்க புரியும். நான் ஒரு மரமண்டைங்க.

’பிரஜா’ங்கிற பொண்ணு, ”இருட்டு நம் அந்தரங்க முடிச்சை அவிழ்க்குது”ன்னு சொல்லுது.  மழையைப் பற்றி அல்ல; இருட்டைப் பற்றிய தத்துவம் இது. ஆனாலும் புரியுது.

அப்புறம், ஒரு பொண்ணு, மழைக் காலத்தில் தன் அப்பா செத்துப் போனதைச் சொல்லுது. அதுக்கப்புறம் அம்மா உபவாசம் இருந்து மறைந்து போனதெல்லாம் சொல்லி வருத்தப்படுது.

இப்படி, மத்த பருவங்களில் நடப்பதற்குச் சாத்தியமான சம்பவங்களையும் மழைக் காலத்தில்  நடக்குற மாதிரி ’நிகழ்ச்சித் திணிப்பு’ம் செய்திருக்கிறார் எழுத்தாளர்.

மழைக்கு ஒதுங்கின ஒரு பிச்சைக்காரன், ”மழை பின்னாடியே வருது. நான் அதைத் துரத்துறேன்”ன்னு தத்துவம் பேசுறதை இன்னொரு பெண் மூலமா சொல்லி நம்மை விழி பிதுங்க வைக்கிறார் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன்!

கதையில்........

மழைக்குள் சக்கரம் மாட்டிக் கொள்ள, மாடு இழுக்க முடியாமல் கீழே விழ, மாட்டுக்காரன் அதை ஓங்கி ஓங்கி அடிக்க, மாடு அவலக் குரல் எழுப்புகிற ஒரு காட்சி மட்டுமே நம் நெஞ்சைப் பிசைவதாக இருக்கிறது.

மற்றபடி, கதை முழுக்க, எவருக்கும் புரியாத தத்துவ மழைதான்!

எஸ்.ராமகிருஷ்ணன் விரும்பினால், இந்தத் தத்துவங்களை விளக்கி ஒரு தனிக் கட்டுரை எழுதலாம்.

செய்வாரா?


                      *                                                  *                                          *


அடுத்து வருபவர், ‘முன்னணி’ எழுத்தாளர் ‘சுப்ரபாரதி மணியன்’.

சுய புத்தியோடு இருக்கிற ஒருவருக்குப் புத்தி பேதலிக்கணும்னா, இவருடைய, ‘தங்கமே தங்கம்’ சிறுகதையைப் படிக்கலாம்.

அரை லூஸாக இருப்பவர் படித்தால் முழு லூஸாவர் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை!

அந்த அளவுக்கு அரை வேக்காட்டுக் கதை இது.

அன்றாடம், தங்கத்தின் விலை அறிவதில் ஆர்வம் காட்டும் சந்தானலட்சுமியின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது கதை.

இவளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கிறாள் சந்தியா. இருவருக்குமிடையே உரையாடல்.

இருவருக்கும் என்ன உறவு என்பது கதையின் முடிவு வரை சொல்லப்படவில்லை.

கதையின் இறுதிப் பகுதியில் வருகிற செண்பகலட்சுமிக்கும் இதே சந்தியா வெற்றிலை மடித்துத் தருகிறாள். இங்கேயும் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

கதையின் ஆரம்பப் பகுதியில், சந்தானலட்சுமி, பேருந்தில் போகும் போது, காதுத் தோடு கழன்று விழ ஒரு பெரியவர் எடுத்துத் தருகிறார்.

சந்தானலட்சுமி தொடர்பான இந்த நிகழ்வுகளுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை!

இதனை அடுத்துத் தொடங்கும் காட்சியில்.....

செண்பகலட்சுமியை அறிமுகப் படுத்துகிறார்.

‘இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் செய்து வைத்ததில், அவளுடைய சம்பாத்தியம் முழுதும் போய்விட்டது’ என்று குறிப்பிடுகிறார்.

ஒரு அக்கா, ’கலா’ என்பது தெரிகிறது. இன்னொரு அக்கா யார் என்பது கதை முடிந்த பிறகும் புரியாத புதிராகவே உள்ளது.

அக்காக்களைக் கரையேற்றுவதற்காகப் பொட்டு நகைகூட அவள் போட்டுக் கொள்ளவில்லை என்று படிப்பவர் காதுகளில் பூச்சுற்றுகிறார் ஆசிரியர்.

குளியலறையில் கிடந்த மோதிரத்தைத் தன் விரலில் போட்டுக் கொள்கிறாள் செண்பகவல்லி. சித்தப்பா மகள் வந்து கேட்க, அவளிடம் கொடுத்துவிடுகிறாள்.

’செண்பகலட்சுமிக்குப் பிடித்திருந்தது அந்த மோதிரம்’ என்று முடிகிறது கதை.

”இரண்டு தமக்கைகளுக்கு மணம் செய்து வைத்தவளுக்கு இத்தனை காலமும் ஒரு மோதிரம் போட்டுக் கொள்ளக்கூட வக்கில்லையா? மனம் இல்லையா?” என்னும் நம் கேள்விகளுக்குக் கதையில் எங்கேயும் விடையில்லை.

கதையில் கருவே இல்லை. நிகழ்ச்சியமைப்பிலும் தெளிவான திட்டமிடல் இல்லை. பாத்திரப் படைப்பிலும் குழறுபடி.

‘பரவாயில்லை’ என்று சொல்லத்தக்க குறைந்தபட்ச இலக்கியத் தகுதிகூட இல்லாத இந்தக் கதையைக் குமுதம் பிரசுரம் செய்தது எப்படி ?

குமுதம்தான் பதில் சொல்ல வேண்டும்.


                               *                                             *                                  


அடுத்து, கவுதம சித்தார்த்தனின்,  ’எப்படிச் சொல்வது முதல் காதலை’ என்னும் 
சி.கதை.

இது சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கதையின் முதல் அத்தியாயம்!

இவரிடம், வலியப் போய், தீபாவளி மலருக்குக் கதை கேட்டதால், நிராகரிப்பது நாகரிகம் அல்ல என்று கருதிக் கதையை வெளியிட்டுவிட்டது குமுதம்!

ஆண்டுதோறும்,  சித்திரை மாதத்தில், ’வேட்டைக்காரன்கோயில்’ என்னும் ஊர்வாசிகள் பக்கத்தில் இருக்கும் காட்டிற்கு வேட்டையாடச் செல்வது வழக்கம்.

பெண்களுக்கு அனுமதி இல்லை. [இது எங்கும் உள்ள வழக்கம்தான்]

ஒரு காட்டுப் பன்றியின் நெற்றியில் திலகம் வைத்து ஓடவிட்டு, வானத்தில் அம்பெய்து வேட்டையைத் தொடங்கி வைக்கிறார் கோயில் பூசாரி.

பன்றியை விரட்டிச் செல்கிறது ஆடவர் கூட்டம்.

சிலம்பனும் தனியனாகப் பன்றியைத் தொடர்கிறான்.

கதை நாயகனான சிலம்பனுக்குப் போட்டியாகத் தலைப்பாகை கட்டிய ஓர் இளைஞன்!

பன்றியை வீழ்த்தியதில் இருவருக்கும் பங்கு.

வீழ்த்தப்பட்ட பன்றிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வாக்குவாதம் செய்கையில் தலைப்பாகை வாலிபன் ஒரு பெண் என்பது தெரிகிறது.

இருவருமே, மற்றவருக்கு விட்டுக் கொடுக்க முன் வந்த நிலையில், வேட்டை நேரம் முடிந்ததற்கான சங்கநாதம் ஒலிக்கிறது.

அப்புறம்..........மீதிக் கதை..........?

[வெள்ளித் திரையில் காண்க!]

ஒரு சினிமா கதையின் முதல் சீன்,  நம்பர் 1 வார இதழின் தீபாவளிச் சிறப்பிதழில் ’சிறுகதை’யாக இடம் பெற்றது எவ்வகையில் என்று கேட்க நினைக்கிறீர்களா?

இதோ விடை...........

கதை எழுதியவர், உயர்ரகச் சிறுகதைப் படைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கவுதம சித்தார்த்தன்!

                            *                                       *                                            *

குறிப்பு:  எஞ்சிய நான்கு சிறுகதைகள் பற்றிய விமர்சனம், நாளை[09.11.2012] வெளிவரும்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ