தேடல்!


Apr 1, 2016

தமிழ்மணத்திற்கு என் நன்றியும் விரும்பத்தகாத ஒன்பது கேள்விகளும்!

நன்றி.....2012ஆம் ஆண்டிலிருந்து வேறு வேறு தலைப்புகளிலான வலைத்தளங்களில் நான் எழுதிய 350க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தன்[தமிழ்மணம்] இடுகைப் பட்டியல்களில் இணைத்துச் சிறப்பித்தமைக்கு. 
கேள்விகள்:

ஒன்று:
பதிவை இணைத்துக்கொண்டதாக அறிவித்துவிட்டு, முகப்புப் பக்கத்தில் இடம்பெறாமல்  தடுத்து, அடுத்த பக்கத்தில் வெளிவருவதற்கு அனுமதிப்பது ஏன்? 

இரண்டு:
முகப்புப் பக்கத்தில் வெளியாக அனுமதித்துவிட்டு, ‘பார்வை’கள் அதிகம் பெறுவதன் மூலம் ‘சூடான’ இடுகைப் பட்டியலில் இடம்பிடித்து, முதல் பத்து இடுகைகளில்[முகப்புப் பக்கத்தில்] ஒன்றாக முன்னிலை பெறும் நிலையில், அதை இருட்டடிப்புச் செய்வதன் நோக்கம் என்ன?

மூன்று:
பதிவின் ‘தலைப்பு’ வாசகத்திலோ, தொடக்க வரிகளிலோ தமிழ்மணம் பட்டியலிட்டுள்ள விரும்பத்தகாத வார்த்தைகளில் ஒன்றோ பலவோ இடம்பெற்றிருப்பது மேற்குறிப்பிட்ட இருட்டடிப்பிற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.  பட்டியல் என்று ஒன்று இருந்தால் அதை வெளியிட்டுப் பதிவர்களை எச்சரிக்கை செய்யலாமே! ஏன் செய்யவில்லை?

நான்கு:
என்னுடைய ஒருபதிவுக்கு, ‘எழுத்தாளர் கல்கி நாத்திகரா?’ என்று தலைப்பிட்டதற்காக, அந்தத் தலைப்பு, வெறும் புள்ளிகளால் மறைக்கப்பட்டது. அது ஏன்? தலைப்பில்லாத பதிவை எத்தனை பேர் படிப்பார்கள்? அது எப்படிச் சாத்தியமாகும்?

ஐந்து:
இறையன்பு, I.A.S. அவர்களின், குமுதத்தில் வெளியான ஒரு சிறுகதையைச் சற்றுக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன். அதுவும் மேற்குறிப்பிட்டாற்போல இருட்டடிக்கப்பட்டது. ஏன் இந்தத் தற்சார்பு நடவடிக்கை?

ஆறு: 
இன்று முற்பகலில், நான் எழுதிய, ‘நடிகர்களின் ‘கட் அவுட்’களுக்கு பால் அபிஷேகம் செய்வது குற்றமா?’ என்ற பதிவும் முகப்புப் பக்கத்தில் வெளியாகவில்லை. பதிவின் தொடக்கத்தில் இடம்பெற்ற, ‘கட் அவுட்களுக்குப் பாலபிஷேகம் செய்வது குற்றம் என்றால், கடவுள்களின் [கற்]சிலைகளுக்கு அதைச் செய்வதும் குற்றமே’ என்ற வாசகம் காரணமா? பதிவுகளில், இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவதே குற்றம் என்று தமிழ்மண நிர்வாகிகள் நினைக்கிறார்களா?

ஏழு:
பொதுத் தலைப்பிட்டு, தமிழ்மணத்தில் இணைக்கப்படும் பதிவுகளில் சில, ‘நடிகர்’, ‘நடிகையர்’ என்பன போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பின், அவை திரைமணத்தில் சேர்க்கப்படுகின்றன. இது நியாயமா?

எட்டு:
காரணம் குறிப்பிடாமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு பதிவரின் மனதை நோகடிக்கும் என்பதை நிர்வாகிகள் எண்ணிப்பார்த்ததே இல்லையா?

ஒன்பது:
மேற்குறிப்பிட்ட முறைகளிலெல்லாம் ஒரு பதிவரை நோகடிப்பதற்குப் பதிலாக, அவருடைய பதிவுகளையே நிராகரித்துவிடுவது உத்தமம் அல்லவா?

மேற்கண்ட வினாக்களுக்கு விடை கிடைக்காது என்பதை நான் அறிவேன். இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்படும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் ‘ஏதோ ஒன்று’ இதை எழுதத் தூண்டியது. அது எது என்பது எனக்குப் புரியவில்லை!

ன்றி தமிழ்மணம்...மிக்க நன்றி!
=============================================================================================