மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Wednesday, April 6, 2016

‘தலைவெட்டி’ பாபா ராம்தேவுக்கு ஒரு தமிழனின் அறிவுசார் மடல்!

இந்தப் பதிவை எழுதியதற்காக நீர் என் தலையை வெட்ட விரும்பினால்.....

‘நள்ளிரவு பன்னிரண்டிலிருந்து காலை ஆறு மணி’வரை நான் உறங்குவது வழக்கம். வெட்டரிவாள்களுடன் உமது தொண்டர்கள் வரும் நாளை அறிவித்தால், அன்றைய தினம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்து உறங்குவேன். ‘சதக்’...ஒரே வெட்டு. வலியில்லாமல் நான் செத்துப்போவேன்!

யோகா குரு அவர்களே, //‘பாரத மாதாகீ ஜே’ சொல்ல மறுக்கும் தொப்பி போட்ட லட்சக்கணக்கானவர்களை வெட்டியிருந்திருப்பேன், அரசியல் சட்டத்தை மதிப்பதால் அதைச் செய்யவில்லை// என்கிறீர்கள். தங்களின் இந்த ஆவேசப் பேச்சு நேற்றைய தமிழ் நாளிதழ்களில்[தமிழ் இந்து, 05.04.2016] வெளியானது.

தொப்பி வைக்காத,  உம்மைப் போல் அடர்ந்த கருகரு தாடி வளர்க்காத, “பாரத மாதாகி ஜே” சொல்லாத...சொல்ல விரும்பாத இந்தியக் குடிமக்கள், நீங்கள் நினைப்பது போல் லட்சக்கணக்கானவர்கள் அல்ல, கோடிக்கணக்கானவர்கள் இருக்கக்கூடும். அத்தனைபேர்களின் தலைகளையும் வெட்டித் தள்ளுவீர்களா ராம்தேவ்?
நாடு என்பது ஒரு நிலப்பகுதி. நாட்டை இழந்தால், அங்கு வாழும் மக்கள் நாடோடிகள் ஆவார்கள் என்பது உண்மை.

இதை உணர்ந்து, மிக்க நாட்டுப் பற்றுடன் மக்கள் வாழ்தல் வேண்டும் என்பதற்காகத்தான், வாழும் நாட்டைத் தாய்நாடு என்றும் தந்தை நாடு என்றும் வாழ்ந்து முடித்தவர்கள் சொல்லிப்போனார்கள்.

பாரத தேசம், ‘பாரத மாதா’[உருவகம்] என்று சொல்லப்பட்டதும் இந்த நோக்கில்தான். 

காலங்காலமாக, இப்படிச் சொல்லப்படுகிற காரணத்தினாலேயே நாம் வாழும் நாடும்  ஈன்ற தாயும் ஒன்றாகிவிடா. எனினும்.....

நாட்டை இழந்தால் அங்கு வாழும் மக்கள் அனாதைகள் ஆவார்கள் என்பதால், பிறந்த ‘மண்’ணின் மீது பற்றுக்கொள்வதும், தேவைப்பட்டால் அதைப் பாதுகாக்க அரிய உயிர்களைத் தியாகம் செய்வதும்கூட வரவேற்கத்தக்கவையே. இதன் பொருட்டு மக்களின் மனங்களை உரிய முறையில் பக்குவப்படுத்துதல் இன்றியமையாப் பணியாகும்.

இப்பணி செய்வதை விடுத்து, பிறந்த நாட்டைப் ‘புண்ணிய பூமி’ என்று புனிதப்படுத்துவதும், "பெற்ற தாயெனப் போற்றி ‘ஜே’ போடு" என்று வலியுறுத்துவதும் அச்சுறுத்துவதும் அறிவுடையார் செயல்களல்ல. எனவே.....

பாபாஜி,

இனியேனும், தொப்பி போட்டவரோ போடாதவரோ, உம்மைப் போல் தாடி வளர்த்தவரோ வளர்க்காதவரோ, “பாரத மாதாக்கி ஜே சொல்லு. சொல்லாவிட்டால் உன் தலையை வெட்டுவேன்” என்று மிரட்டுவதை நிறுத்துங்கள். தவறினால்..........

முடிவு, உங்கள் சிந்தனைக்கு!
=============================================================================================
இன்று[06.04.2016] பிற்பகல், 02.14 மணிக்குப் ‘பிழை திருத்தம்’ செய்யப்பட்டது.
  

No comments :

Post a Comment