புதன், 13 ஏப்ரல், 2016

கடவுள் மட்டும் ‘அது’க்கு விதிவிலக்கானவரா?


‘பிரபஞ்ச வெளியிலுள்ள அனைத்து  உயிர்ப்பொருள்களிலும் உயிரற்றனவற்றிலும் ‘மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன’ என்கிறது அறிவியல்.

எந்தவொரு பொருளும் நாம் பார்க்கிற நொடியில் இருப்பதுபோல் இதற்கு முன்பு இருந்ததில்லை; இனி இருக்கப்போவதும் இல்லை; இருக்கவும் முடியாது. இது இயற்கையின் நியதி.

உயிர்ப்பொருள்கள் இயங்குவதற்கு இந்த மாற்றங்களே காரணமாகும்.
உயிருள்ளவற்றிற்கு மட்டுமல்ல, உயிரற்ற பாறை போன்றவற்றுக்குள்ளும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பாறையானது, நம் பார்வைக்கு, அசைவற்று அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும், அதனுள் இருக்கும் துகள்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இடைவெளியின்றி இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மாற்றங்கள் இருப்பதால்தான், துகள்களின் தன்மைகளை ஆராய்ந்து அது எத்தனையாண்டுப் பழைமையான பாறை என்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்கிறார்கள்[‘சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என்னும் நூலில் அஸ்வகோஷ்].

உள்ளே மாற்றங்கள் நிகழ்வதால்தான், உயிருள்ள பொருள்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருள்களும்  இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ளவை இடம்விட்டு இடம் பெயர்ந்து இயங்குகின்றன. உயிரற்றவை, அசைவின்றி இருந்த இடத்திலேயே இயங்கிகொண்டிருக்கின்றன. 

மனிதன் இயங்குவதற்கும் சிந்திக்கும் திறனைப் பெற்றதற்கு அவனின் உடலுக்குள் நிகழும் மாற்றங்களே காரணமாம்.

ஏனைய பொருள்களைப் போலவே, மாற்றங்கள் நிகழ்வதால் இயங்குபவன் மனிதன். மாற்றங்கள் இல்லையேல், மனிதன் இல்லை; மனித மூளை இல்லை; சிந்திக்கும் திறன் இல்லை; அதன் மூலம் உருவாகும் படைப்புகளும் இல்லை

மனிதனுக்கு வாய்த்திருக்கும் படைப்பாற்றல் முழுக்க முழுக்க மாற்றங்களைச் சார்ந்ததே.

மாற்றங்கள் இல்லையென்றால், மனிதன் உட்பட அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களையும் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளும் இல்லை. கடவுளே ஆயினும் மாற்றங்கள் இல்லையேல் சிந்தித்துச் செயல்படுதல் என்பது சாத்தியமே இல்லை.

‘மாற்றங்களுக்கு உட்படாதவர் கடவுள்; அதாவது, ‘எல்லாம் கடந்தவர் அவர்’ என்று சொல்வது, ‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படுவதே தவிர, நிரூபிக்கப்பட்ட கருத்தன்று.

கடவுள் இருப்பது உண்மையென்றால், அவரின் இருப்பை உறுதிப்படுத்துவது எளிதல்ல; உண்மை கண்டறியும்  உயர் நோக்குடன் ஆழ்ந்து...மிக மிக ஆழ்ந்து சிந்திப்பது.....சிந்தித்துக்கொண்டே இருப்பது அறிஞர்தம் கடமை.

இந்த உண்மையை அறிந்து தெளிந்து, மக்களிடையே கடவுள் தொடர்பான அனுமானங்களையும் பொய்க் கதைகளையும் தொடர்ந்து பரப்பும் செயலை ஆன்மிகவாதிகள் நிறுத்துதல் வேண்டும்.

இது உடனடித் தேவை.
===============================================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக