அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 23 ஜூலை, 2015

அடச்சீ...ச்சீ...ச்சீ...இவன்தானா தமிழன்!?

மொழியால் தமிழனைத் தேடினேன். அவன் ஆங்கிலத்தைக் கொஞ்சிக்கொண்டிருந்தான். 

பண்பாட்டால் அவனைத் தேடினேன். ‘பர்த் டே’ பார்ட்டியில் ‘கேக்’ வெட்டிக்கொண்டிருந்தான்.

நாட்டால் தமிழனைத் தேடினேன். அவன் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ‘ஏதிலி’யாய் நின்றுகொண்டிருந்தான்.

இனத்தால் அவனைத் தேடினேன். காணவில்லை.

அன்று.....

இவன், பண்டைக் கிரேக்க-ஐரோப்பிய-இலத்தீன் நாகரிகம் அனைத்துக்கும் மூலமான பாபிலோனியாவில் வாழ்ந்தவனாம். அந்த மண்ணிலுள்ள, ‘ஊர்’ என்ற சொல் பச்சைத் தமிழ்ச் சொல்லாம். இப்படிப் பாவாணர் கூறுகிறார்.

இசுப்[ஸ்]பெயின் நாட்டில் இன்று விடுதலை கோரிப் போராடிவரும் பாசுக்கு[Basque] மக்கள் குமரியிலிருந்து போன பழைய தமிழனின் வழித் தோன்றல்கள்தானாம். பாசுக்கு மொழி தமிழுக்கு மிக நெருக்கமானதாம். ஆய்வாளர் இலாகோவாரி[Dr.N.Lahovary] சொல்கிறார்.

ஆப்பிரிக்கா, பண்டைத் தமிழனின் நாடுதானாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அங்குண்டாம். இவ்வாறு செனகல் நாட்டுத் தமிழறிஞர் செங்கோர் முழங்குகிறார்.

எடின்பரோ[Edinborough], கன்ரர்பரி[Canterbury] ஆகிய ஊர்ப் பெயர்களில் உள்ள ‘புரி’ தமிழ்ச் சொல்தானாம். சின்ன மனிதர்கள் வாழ்ந்ததால்தான் சீனா என்றாயிற்றாம். அரிசி என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து பிறந்ததுதானாம் ‘ஒரிசா’. இப்படி இன்னொரு பேராசிரியர் அடுக்கிக்கொண்டே போகிறார்.

சரி.

அங்கெல்லாம் வாழ்ந்த தமிழன் எங்கேதான் போய்த் தொலைந்தான்?
சிந்துவெளியில் தமிழன் வாழ்ந்தான் என்கிறீர்கள். அவன் பயன்படுத்திய சட்டி இருக்கிறது; பானை இருக்கிறது; செம்பினால் செய்த ஊசிகூட இருக்கிறது. தமிழனை மட்டும் காணவில்லை.

தமிழன் அடையாளம் இழந்தது எப்படி? மொழியாலும் பண்பாலும் நடையாலும் பிறழ்ந்தது எப்படி?

தமிழன் தன்னைத் தானே மறந்தான்! தன்னைத் தானே தாழ்த்தினான்! தன்னைத் தானே பிரித்தான்! தன்னைத் தானே காட்டிக் கொடுத்தான்! தன்னைத் தானே அழித்தான்!

இதுதான் அவன் வரலாறு.

பைந்தமிழ் ஈழத்தில் மீன் பாடும் தேன் நகராம் ‘மட்டு’ நகரில் 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியமர்ந்த பரங்கியர்கள்[போர்த்துக்கீசர்] வாழ்கிறார்கள். இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்த்துக்கீய மொழியிலேயே உரையாடுகிறார்கள்.

ஆனால்.....

150 ஆண்டுகளுக்கு முன்பு ‘மொரிசியஸ்’ தீவுக்குப் போன தமிழன் தன் தாய்மொழியாம் தமிழை முற்றிலுமாய் மறந்துபோனான். மொரிசியஸ் தீவில் தமிழன் கிரியோல் மொழிக்காரனாய், ஆங்கில மொழிக்காரனாய் முகம் இழந்து நிற்கிறான்.

வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் இருந்து, அவனுக்குத் தொழும்பு செய்த காலத்தில், அவனைப் பார்த்து, “சார்” போட்ட தமிழன், இன்னும் ‘சார்’ போடும் வெட்கங்கெட்ட பழக்கத்தை விட்டொழித்ததாகத் தெரியவில்லை.

ஆங்கிலம் பேசுவது நாகரிகம் என்றும், தமிழ் பேசுவது பட்டிக்காட்டுத்தனம் என்றும் தன்னையும் தன் மொழியையும் தாழ்வாக இவன் கருதும் பாங்கினை-தீங்கினை எவரிடம் சொல்லி அழுவது?

தன்னைத் தாழ்வானவன் என்றும் அடுத்தவனை உயர்வானவன் என்றும் கருதியதால் தன் மொழியையும் பண்பாட்டையும் இழந்து இவன் அழிந்தான்.

தொல்காப்பியம் கி.மு. 500இல் எழுதப்பட்டது. தமிழ் முளைத்து, வளர்ந்து, பூத்துக் கனிந்த நிலையில்.....

கி.பி.500இல்தான் ஆங்கிலமும் சிங்களமும் தோன்றின.

ஆங்கிலேயனுக்கும் சிங்களவனுக்கும் இன்று அரசுகள் உண்டு.

தமிழனுக்கு?
=============================================================================================

உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் அவர்கள், ‘தமிழனைத் தேடுகிறேன்’ என்னும் தலைப்பில் ‘ராணி’ இதழில்[28.11.1993] எழுதியது.

கவிஞருக்கும் ராணி இதழுக்கும் என் நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக