திங்கள், 13 ஜூலை, 2015

கடவுளா, அணுக்களா?...‘பிரபஞ்சப் புதிர்’ குறித்த ஒரு புதிய பார்வை!

மையப்புள்ளி இல்லாத, நீளம் அகலம் சுற்றளவு விளிம்பு என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாத அதிசயிக்கத்தக்க அதிபிரமாண்டமான ‘வெளி’யில் இடம் கொண்டிருக்கும் அத்தனை பொருள்களுக்கும் உயிர்களுக்கும், அதாவது ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் மூலமானவர் என்று சொல்லப்படும் ‘கடவுள்’ ஒற்றை நபர்[?]தானா?

அனைத்திற்கும் ‘தனிப் பெரும் சக்தியே’ அல்லது ‘தனியொரு கடவுளே’ மூலகாரணம் என்று தீர்மானிப்பதற்கான அடிப்படை என்ன? ஆழ்ந்து சிந்தித்திருப்பீர்கள்தானே?

‘ஒன்று...ஒருவர்’...இதெல்லாம் என்ன கணக்கு? 

இப்படிக் கணக்கிட்டதற்கான அடிப்படை என்ன? ஆதாரங்கள் எவை?

பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் எழுந்த போட்டியால் மூண்ட பெரும் போரில் ஏனையோர் அழிந்துவிட ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?

இவ்வாறு கேள்விகள் கேட்பதும் பதில் தேடுவதும் பயனற்ற செயல் என்பது என் எண்ணம். காரணம்.....

காரணம், கடவுளின் ‘இருப்பே’ இன்றுவரை உறுதிப்படுத்தப் படவில்லை. அப்படியொருவர் இருப்பதாகச் சொல்வது வெறும் அனுமானமே. 

அனுமானத்தின் மூலம் கடவுளின் ‘இருப்பை’ உறுதிப்படுத்துவது தவறல்ல என்றால், அதே அனுமானத்தின் அடிப்படையில், ‘இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது. இதில் நிகழும் மாற்றங்களுக்கும் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் கணக்கிலடங்கா அணுக்கூட்டமே காரணம்; கடவுளல்ல’ என்று முடிவெடுப்பதும் தவறல்ல எனலாம்.

புதியனவற்றை உருவாக்கவும், இயக்கவும் கடவுளுக்கு இருப்பது போல் அணுக்களுக்குப் பேரறிவு தேவை என்றால், அவற்றிற்கு அது இயற்கையாகவே அமைந்துள்ளது எனக் கொள்வதிலும் தவறில்லை.

இங்கே, ‘அணுக்கள் கணக்கற்றவை என்றால் அவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படச் செய்வதற்கு ஏதோ ஒன்று தேவையல்லவா?’ என்ற கேள்வி எழுவது இயல்பே. பதில்.....

“தேவையில்லை” என்பதே.

ஒரு கடவுள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு நியதியின்படி செயல்படுவாரென்றால், அது அணுக்களுக்கும் பொருந்தும்.

ஆழ்ந்து சிந்தித்தால்.....

‘ஒவ்வோர் அணுவும் சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பிரபஞ்சப் பொருள்களையும் உயிர்களையும் உருவாக்குவதும் இயக்குவதுமான செயல்களில் பங்கு கொள்கிறது. படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளுக்கான அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக்கூட்டங்கள் ‘வெளி’யில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம்’ என்றொரு முடிவை  நம்மால் எளிதில் எட்டிவிட முடியும்!

இவ்வாறெல்லாம் சிந்தித்து முடிவெடுப்பதும்கூட வெறும் அனுமானம்தான். கடவுள் என்று ஒருவரை ஆன்மிகவாதிகள் அனுமானம் செய்தது போல.

காலப் போக்கில் எது உண்மை எது பொய் என்பதை அறிவியல்தான் நிரூபிக்க வேண்டும். அதுவரை, புரிந்து கொள்ள முடியாத எதையும், “புரியவில்லை” என்று ஒப்புக்கொள்வது அறிவுடையோர்க்கு அழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக