வெள்ளி, 17 ஜூலை, 2015

ஒரு ‘புதிர்'[suspense] & ‘அதிரடி’ சிரிப்புக் கதை! [புத்தம் புதுசு!!]

‘உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி? என்ற நூலைப் பூங்காவின் கடைக்கோடியில், சிதிலமடைந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்கத் தொடங்கியபோது, “வணக்கம் ஐயா. நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்
பார்வை சுழற்றிக் குரலுக்குரியவரைத் தேடினேன். தொலைவில் சில மனித உருவங்கள் தென்பட்டன. பேச்சுச் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னைச் சுற்றி ஆட்களின் நடமாட்டமே இல்லை. என் அந்தரங்க வாசிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அங்கே ஒருவர் குரல் கொடுத்தது எப்படிச் சாத்தியமாயிற்று? யாருமில்லை என்று உறுதிப்படுத்தித்தானே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்!

“பார்த்து ரொம்ப நாளாச்சி...பார்த்து...சார்த்து...கோர்த்து...போர்த்து... வார்த்து...” 

எதுகை மோனைச் சொல்லடுக்கு எனக்குள் குழப்பம் விளைவித்தது. புத்தகத்தைக் கைப்பையில் திணித்துக்கொண்டு எழுந்து நின்று செவிப்புலனைக் கூர்மையாக்கினேன்.

“அவனா? அவன் பெரிய எத்தன் ஐயா. எத்தன்...வத்தன்...கொத்தன்...வத்தல்...தொத்தல்...மொத்தல்...”

சில வினாடி இடைவெளிக்குப் பிறகு மர்மக் குரல் தொடர்ந்து ஒலித்தது. “க் ச் ட் த் ப் ற்...க ச ட த ப ற...ய ர ல வ ழ ள...ல ள ழ ...ஒன்னு ரெண்டு மூனு... அஞ்சு பத்து... அம்பது நூறு...ஆறு...ஆறடா அவன்...?”

என் அடிமனதில்  பயம் பரவியது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெஞ்சில் ஏறி நின்று, வரிசை கட்டியிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினேன்.

செடிகளின் மறைவில் அறுபது வயதைக் கடந்த ஒரு ஜிப்பா உடுத்த மொழுமொழு மண்டை மனிதர் நின்றுகொண்டிருந்தார்.

பைத்தியம்!

‘அடப் பாவமே...’ மனதுக்குள் அனுதாபத் தீர்மானம் போட்டுவிட்டு, வேறு தனியிடம் தேட முடிவெடுத்துப் பெஞ்சிலிருந்து இறங்க யத்தனித்தேன்.

பைத்தியம் என்னைக் கவனித்திருக்க வேண்டும். “மிஸ்டர்...” என்று விளித்தது. ஒரே தாவலில் என்னை நெருங்கிவிட்டது. “தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்” என்றது.

கடந்த வாரம் என் நண்பருக்கு இதே பூங்காவில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்து என்னை மிரள வைத்தது. ஓசிப்பீடி கேட்டுவந்த ஓர் ஆளிடம், அவர் “இல்லை” என்று சொல்ல, “உள்ளே ஒளிச்சி வெச்சிருக்கே” என்று நயமாய்ச் சிரித்துக் கண்மூடித் திறப்பதற்குள் அவருடைய வேட்டியை உருவிவிட்டதாம் அது!

“தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்.” என் முன்னால் நின்றுகொண்டிருந்த பைத்தியம் மறு கோரிக்கை வைத்தது.

சந்தேகமில்லை. இந்தக் கிழவன்தான் அந்தப் பைத்தியம்!

நான் ஓடிவிட நினைத்து, பெஞ்சிலிருந்து தாவிக் குதித்து இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்.

“மிஸ்டர், சத்தியமா இந்தப் பூங்காவில் உலவுற பைத்தியம் நான் அல்ல. நான் தனிமையில் பிதற்றினதைப் கேட்டா அப்படித்தான் நினைக்கத் தோணும். புதுசா பல்செட் போட்டிருக்கேன். சரியாப் பேச வருதான்னு தனியான இடம் தேடிவந்து சோதிச்சிப் பார்த்திட்டிருந்தேன். நீங்க இங்கே வந்ததைக் கவனிக்கல. சந்தேகம் இருந்தா பார்த்துக்கோங்க” என்று வாய் திறந்து புதிய பல்செட்டைக் கழற்றிக் காட்டினார் வழுக்கை மனிதர்.

“ஹி...ஹி...ஹி...” அசடு வழியச் சிரித்துவிட்டு புத்தகப் பையுடன் மீண்டும் தனியிடம் தேடி நகர்ந்தேன்.
*****************************************************************************************************************************************************
கதை சொல்லும் ‘நான்’, நான்[‘பசி’பரமசிவம்] அல்ல!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக