புதன், 15 ஜூலை, 2015

ஆந்திரா மகாபுஷ்கர விழாவில் 29 பேர் சாவு! யாரெல்லாம் குற்றவாளிகள்?

#.....கோதாவரி நதியில்[ஆந்திரா] 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதாவரி புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாபுஷ்கர விழா சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
25 ஆம் தேதிவரை 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவின்போது கோதாவரியில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்பமேளாவுக்குச் சமமாக நடக்கும் இந்த விழா, ராஜமுந்திரி கோதாவரி நதியில் கோடகும்பம் என்ற இடத்தில், நேற்று காலை 06.26 மணிக்குத் தொடங்கியது.

காஞ்சி சங்கராச்சாரியர்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோதாவரித் தாய்க்கு ஆரத்தி எடுத்து, புனித நீராடி விழாவைத் தொடங்கி வைத்தார்கள்.

அதைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தன் குடும்பத்துடன் புனித நீராடினார். பின்னர், அமைச்சர்கள், அதிகாரிகள், மடாதிபதிகள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் நீராடினர். அதன் பிறகே பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். 

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நதியில் இறங்கியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு இறங்கியதால், நெரிசலில் சிக்கி, வயதானவர்கள், பெண்கள் என பலர் கீழே விழுந்தனர்; மிதிபட்டனர்; மூச்சுத் திணறி 13 பெண்கள் உட்பட 29 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.....

.....இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடும்பத்துக்குப் பத்து லட்சம் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறார்.....

.....இந்திய நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அம்மையாரும் அன்னாரின் புதல்வர் ராகுல் காந்தியும், தங்களின் கட்சி சார்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் சிரஞ்சீவி, ‘சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட வி.ஐ.பி.களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலேயே போலீசார் கவனம் செலுத்தினர்; லட்சக்கணக்கான பக்தர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதனால்தான் இந்த விபத்து நடந்துள்ளது’ என்று கண்டித்துள்ளார்.#

மேற்கண்டவை இன்றைய நாளிதழ்ச் செய்திகள்.

25 ஆம் தேதிவரை 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவின்போது கோதாவரியில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம். 

இந்த மூடநம்பிக்கையை வளர்த்துவிட்டவர்களே கோதாவரி என்னும் ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து, புனித நீராடி விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எதற்குப் புனித நீர் ஆடினார்கள்?

மக்கள் புனித நீராடுவது அவர்கள் சுமக்கும் பாவங்களைக் கரைப்பதற்காக. இவர்கள் நீராடியது?

தாம் சுமந்த பாவங்களைக் கரைப்பதற்காகவா?! அடக் கடவுளே!

29 பேர்கள் பலியாகவும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடையவும் காரணமான இந்தச் சம்பவம் எதிர்பாராத விபத்து என்கிறார் சந்திரபாபு நாயுடு.

உண்மையில், இதுவொரு அசம்பாவித நிகழ்வல்ல; ஆறுகளுக்குப் புனிதம் கற்பித்து, அவற்றில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்னும் பொய்யான நம்பிக்கையை  மக்கள் மனங்களில் வளர்த்துவிட்டதால் விளைந்த விபரீதம் ஆகும்.

இப்படியொரு நம்பிக்கையை பக்தர்களின் மனங்களில் இன்றளவும் விதைத்துக்கொண்டிருப்பவர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் போன்றவர்கள்.

இவர்கள் குற்றவாளிகள்.

“நீர் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. அதில் தெய்வாம்சம், புனிதம் என்று போற்றி வழிபடுவதற்கு ஏதுமில்லை.  அப்படி இருப்பதாக நினைப்பது மூடநம்பிக்கை” என்று அறிவித்து, உயிர்ப்பலி கொள்ளும் இம்மாதிரி விழாக்களுக்குத் தடை விதித்திருக்க வேண்டும். அல்லது, பிரச்சாரங்கள் வாயிலாக, அப்பாவிகளின் மனங்களின் படிந்திருக்கும் அழுக்குகளைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இவற்றில் எந்த ஒன்றையும் செய்யாதது பெரும் குற்றம்.

இக்குற்றத்தை மத்திய மாநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்களும் குற்றவாளிகளே!
=============================================================================================








  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக