செவ்வாய், 7 ஜூலை, 2015

நான் ‘புத்திசாலி’ என்றால் நம்புவீர்களா?!

எனக்குத் தற்பெருமை பேசுவது பிடிக்கும். ஆனாலும், இந்தக் கதை அதற்கானதல்ல; இது நடந்த கதை!


கதைத் தலைப்பு:                             சமயோசிதம்

நிறை மாத கர்ப்பிணியாய்த்  ‘தம்’ பிடித்து நகர்ந்துகொண்டிருந்தது நகரப் பேருந்து.

எனக்கு முன்னே அறுபதைக் கடந்த ஒரு முதியவர்; 

ஒடிசலான தேகம்; பராமரிக்கப்படாத நரைத்த தலை; சட்டைப் பையில் துருத்திக்கொண்டிருந்த ரூபாய் நோட்டுகள் எந்த நேரத்திலும் பறி போகலாம் என்ற சிந்தனையே இல்லாமல் ‘பராக்’ பார்த்துக் கொண்டிருந்தார்.

“உங்க பணம்...” என்று நான் சொல்ல ஆரம்பித்தேன். முன்னால் நகர்ந்துவிட்டார்.

சில நிமிடங்களில், நான் எதிர்பார்த்தது நடந்தது.
என்னைக் கடந்துபோய் அவரை ஒட்டி நின்றுகொண்ட ஒரு வாலிபனின் கை இரண்டுமுறை பெரியவரின் சட்டைப் பையைத் தடவிவிட்டுப் பின்வாங்கியது. பேருந்தின் அடுத்த குலுக்கலுக்காக அந்தப் பிக்பாக்கெட் பேர்வழி காத்திருந்தான்.

தொடர்ந்து கண்காணித்து, பணத்தைக் களவாடும்போது அவனைக் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டிப்பது என் வயதுக்கும் உடல்வாகுக்கும் ஒவ்வாத காரியம்.

நான் பயந்த சுபாவி வேறு. பெரியவரை அணுகி எச்சரிக்கை செய்யவும் தயக்கம். காரணம், பாக்கெட் அடிக்கும் வாய்ப்புப் பறிபோன ஆத்திரத்தில்  ‘அவன்’ என்னைப் பின் தொடர்ந்து தாக்கலாம் அல்லவா?

ஆனாலும், நமக்கென்ன என்று இருந்துவிட விரும்பவில்லை; யோசித்தேன்.

என் பர்ஸிலிருந்த பணத்தை சட்டைப்பையில் பத்திரப்படுத்திக்கொண்டு, காலி பர்ஸை நழுவவிட்டேன்; “கண்டக்டர் என் பர்ஸ் திருடு போயிடிச்சி” என்று கூச்சலிட்டேன். என்னைச் சுற்றி நின்றவர்கள் சற்றே விலகி நிற்க, காலடியில் கிடந்த பர்ஸை எடுத்து, “உங்களுடையதா பாருங்க” என்று ஒருவர் நீட்டினார். 

“கைக்குட்டையை எடுக்கும் போது நழுவியிருக்கும்” என்று அசட்டுச் சிரிப்புடன் பெற்றுக்கொண்டேன்.

நெருங்கி வந்த நடத்துனர், “ஏன் இப்படிக் கழுத்தறுக்கிறீங்க?” என்று கடுப்படித்துச் சென்றார்.

பெரியவரை நோட்டமிட்டேன். அவரது ஒரு கை பணம் இருந்த சட்டைப் பாக்கெட்டை அழுத்தமாகப் பற்றிக்கொண்டிருந்தது.
===========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக