செவ்வாய், 28 ஜூலை, 2015

கொலைகார ஜோதிடர்கள்!

கடவுளை நம்புகிறவர்களைவிடவும் ஜோதிடர்களை நம்புகிற மூடர்களின் எண்ணிக்கை மிக அதிகம்[பதிவின் இறுதியில் உள்ள குட்டிக் கதையைத் தவறாமல் படித்திடுக!]. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல், இவர்களை நம்பிக் கெட்டவர்கள் ஏராளம். இவர்களில் எவரும் திருந்துவதாகத் தெரியவில்லை; திருத்தவும் ஆளில்லை.


‘சேலம் இரும்பாலை மோகன்நகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 55). இவர் தனது மகள்களுக்குத் திருமண ஏற்பாடு செய்தார். ஆனால், ஜாதகத்தில் தோஷம் உள்ளதாகவும், குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார். அதன்படி, பாண்டியன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சாமி கும்பிடக் குடும்பத்துடன் சென்றார்.

அங்கு அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு ஒரு காரில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் இருந்து சேலத்துக்குத் திரும்பினார்கள்.

இவர்களது கார் நள்ளிரவு 12 மணி அளவில் நாமக்கல்லுக்கு அடுத்து உள்ள என்.புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பாண்டியனின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த ஒரு கிணற்றுக்குள் பாய்ந்தது. 80 அடி ஆழம் கொண்ட அந்தக்  கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் கிணற்றுக்குள் விழுந்த கார் நொறுங்கியது.

இந்த விபத்தில் பூங்குழலி, அவரது மகள் மங்கையர்கரசி ஆகியோர் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.’

இது, 27.07.2015 இல் நாளிதழ்களில் வெளியான செய்தி.
இம்மாதிரியான சோகச் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காரணம், மக்களின் அசைக்க முடியாத மூடநம்பிக்கை.

இதை வளர்த்துவிட்டவர்கள்/வளர்த்துக்கொண்டிருப்பவர்கள் ஜோதிடர்கள்.

நேரிடையாக ஒருவரைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்வது மட்டும்தான் குற்றச் செயலா? இம்மாதிரி விபத்துகளுக்குக் காரணமாக இருப்பதும் குற்றம்தானே?

ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகச் சொல்லி, பாண்டியனைக் குடும்பத்துடன் கோவிலுக்குச்செல்லத் தூண்டியவர் ஒரு ஜோதிடர். அவர் பேச்சைக் கேட்டுக் கோயிலுக்குச் சென்றதன் பலன் இருவர் சாவு; இருவர் காயம்.

எந்தவொரு தொழிலைச் செய்வதாயினும் அதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும். ஜோதிடர்களைப் பொருத்தவரை எந்தவொரு கட்டுப்பாடும் இங்கு இல்லை. 

ஜோதிடச் சக்ரவர்த்தி, ஜோதிடர் திலகம், ஜோதிட சிரோமணி, ஜோதிட பூஷன், ஜோதிட விபூஷன், ஜோதிட ரத்னா, நவக்கிரக ஜோதிடர், ஜோதிடக்கலை ஏந்தல் என்பன போல் தமக்குத்தாமே பட்டம் சூட்டிக்கொண்டு, அறியாமையுள்ள மக்களிடம் கதையளந்து காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இவர்களால், மூடத்தனமான செயல்பாடுகளும் உயிர்ப்பலிகளும் நேர்ந்தவண்ணம் உள்ளன.

உயிர்ப்பலிகளுக்குக் காரணமான ஜோதிடர்களைக் குற்றம் புரிந்தவர்களாகக் கருதி, அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் .

அதற்கு முன்னதாக, ஜோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்பன போன்ற பித்துக்குளித்தனமான அறிக்கைகள் வெளியிடுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். 

செய்வார்களா?
*****************************************************************************************************************************************************
                                     கடவுளின் கவலை [குட்டிக் கதை]
சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டு, “பித்துப் பிடிச்ச மாதிரி, பிது பிதுன்னு முழிச்சிட்டிருக் கீங்க. என்னாச்சு உங்களுக்கு?” என்று கேட்டுப் பரிவுடன் அவரின் முன் நெற்றி நீவினார்.

“மோனத்தவம் புரிய அமர்ந்தேன். மனசை ஒருமுகப் படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தொனிக்கும் குரலில்.

“ஏனாம்?”

“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலம் எல்லாம், கடவுள் எப்போ தோன்றினார்? அல்லது, யாரால் தோற்றுவிக்கப்பட்டார்?  'அவர் தோன்றியவரல்ல; தோற்றுவிக்கப்பட்டவரும் அல்ல. அவர் ஆதி அந்தம் இல்லாதவர்.....அதாவது, எப்போதும் இருப்பவர்'னா அது எப்படிச் சாத்தியம் ஆச்சுன்னு கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரங்கள்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. உடனடியா பதில் வேணும்னு கோரிக்கை வெச்சுட்டே இருக்காங்க. எனக்கும் பதில் தெரியல. ரொம்பவே பதற்றமா இருக்கு.”

“கவலையை விடுங்க. எமதர்மன்கிட்ட சொல்லி, பூலோகத்திலிருந்து ஒரு ஜோதிடரை வரவழைச்சி, கோடி கோடி கோடியோ கோடிப் பிரபஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால், இன்ன நட்சத்திரத்தில் கடவுள் தோன்றினார்; யுக யுக யுக யுகாதி யுக ஆண்டுகளுக்கு அப்புறம், இன்ன நட்சத்திரத்தில் மறைவார். மறைந்த அதே கணத்தில் மீண்டும் தோன்றுவார். இப்படி, கிஞ்சித்தும் இடைவெளியின்றித் தோன்றுவதும் மறைவதுமாக இருப்பவரே கடவுள்னு ஊடகங்களுக்கு அறிக்கை தரச் சொல்லிடறேன்” என்றார் இறைவி.

“மனித குலம் நம்புமா?” என்றார் இறைவன்.

“என்ன நீங்க, உலகம் புரியாத கடவுளா இருக்கீங்க. உங்களை நம்புறதை விட ஜோதிடர்களைத்தான் மனுசங்க அதிகம் நம்புறாங்க” என்று அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் இறைவி.

இறைவனின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
*********************************************************************************************

*கனவுகள் கண்டதோடு, தாம்கண்ட கனவுகளை நனவுகளாக்கிப் பற்பல சாதனைகள் நிகழ்த்திய அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் பற்றிய நினைவுகளை என்றென்றும் போற்றிப் பாதுகாப்போம்*

*********************************************************************************************












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக