நான் நானாகவும் நீங்கள் நீங்களாகவும் அவர்கள் அவர்களாகவும் அவரவர் இயல்புக்கேற்ப இருந்துவிடலாம். எல்லோரையும் இணைப்பதற்கு 'மனிதநேயம்' ஒன்று போதும்!

Wednesday, July 5, 2017

ஒரு கருமா[தி]ந்தரக் கதை!

அண்மையில் நாமக்கல்லில் நடந்த சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறேன். ‘போலி கௌரவம்’ எங்கள் ஊர்க்காரர்களுக்கு ரொம்பவும் பிடித்தமானது; பழகிப்போனதும்கூட!
கட்டட ஒப்பந்தக்காரர் கந்தசாமியை அன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலருகே சந்தித்தது முற்றிலும் தற்செயலானது. என் பள்ளிப் பருவ நண்பர். படிப்பில் படு மட்டம். கோவையில் கட்டட ஒப்பந்தக்காரராக இருந்த தன் சொந்தக்காரரிடம் எடுபிடியாய்ச் சேர்ந்து, தொழில் கற்றுக் காண்ட்ராக்டர் ஆனவர்; இப்போது கோடீஸ்வரர். எங்களிடையே, எதிர்பாராத சந்திப்புகள் அதிசயமாய் நிகழ்வதுண்டு.

“வீட்டில் எல்லாரும் சௌக்கியமா? அம்மா நல்லா இருக்காங்களா?” -விசாரித்தேன்.

“அம்மா காலமாகி ஆறு மாசம் ஆச்சு” என்றார் கந்தசாமி.

“அடடா, தெரியாம போச்சே.” -உண்மையான வருத்தத்துடன் சொன்னேன்.

“தினசரிகளில் முழுப்பக்க விளம்பரமே கொடுத்திருந்தேனே. நீங்க பார்க்கலை போல. அவங்க சடலத்தைச் சந்தனக் கட்டையில் தகனம் பண்ணினேன். கருமாதிச் சடங்கெல்லாம் கோவையிலேயே செஞ்சி முடிச்சிட்டேன். அஸ்தியைத் தலைக்காவேரியில் கரைச்சேன். என் பங்களாத் தோட்டத்தில் அவங்க நினைவா ஒரு பெரிய நினைவு மண்டபமும் கட்டி முடிச்சிட்டேன்.” -கந்தசாமியின் குரலில் பெற்ற தாயை இழந்த துக்கத்தைக் காட்டிலும் தற்பெருமை மேலோங்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“ரொம்பத்தான் செலவு பண்ணியிருக்கீங்க.”

“செலவைப் பார்த்தா முடியுமா? குடும்ப கௌரவம்னு ஒன்னு இருக்கே.”

“அம்மா உடம்பு  சுகமில்லாம இருந்தாங்களா?”

“அதெல்லாம் இல்ல. ராத்திரி பூரா ‘லொக்கு லொக்’குன்னு இருமிட்டிருப்பாங்க. மருந்துக்கும் கட்டுப்படல. நீள நீளமா கொட்டாவி வேற போடுவாங்க. பிள்ளைகள் படிக்க முடியல. பெரிய நியூசன்ஸ் ஆகவும் இருந்திச்சி. பங்களாவை ஒட்டியிருந்த பழைய ‘கூரைக் கொட்டாயி’ல தங்க வைத்தேன். என்ன மனக்குறையோ தெரியல. ஒரு நாள் ராத்திரி தூக்கில் தொங்கிட்டாங்க.”

செயற்கையான மன வருத்தத்துடன் சொல்லி முடித்தார் கந்தசாமி.

“அடப்பாவி!” 

காதுபடச் சொல்ல முடியுமா? மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

அப்புறம்?

அப்புறம் என்ன, என் வீட்டுக்கு வருமாறு நான் அழைக்க, அவசர வேலை இருப்பதாக அவர் சொல்ல, இயந்திர கதியில் வணக்கம் சொல்லிப் பிரிந்தோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


12 comments :

 1. Replies
  1. மற்ற பகுதிகளில் எப்படியோ, எங்கள் வட்டாரத்தில் இம்மாதிரி ஆட்களை நிறையவே பார்க்கலாம்!

   நன்றி தனபாலன்.

   Delete
 2. உண்மைதான் கௌரவத்துக்காக ஆள்வைத்துப்பார்த்துகொள்பவர்கள் நிறைய உண்டு!

  ReplyDelete
  Replies
  1. கௌரவத்துக்காகவாவது செய்கிறார்களே, அது போதும்.

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இமயவரம்பன்.

   Delete
 3. இருக்கும் வரை ஏசியவர்கள் செத்த பிறகு ஏசிப் பெட்டியில் வைப்பார்களாம் :)

  ReplyDelete
  Replies
  1. ‘ஏசியவர்கள்...ஏசிப் பெட்டி’...வெகுவாக ரசித்தேன்.

   நன்றி பகவான்ஜி.

   Delete
 4. இப்படிப்பட்டவர்கள் எல்லா ஊர்களிலும் உண்டு நண்பரே
  இப்படியான தற்பெருமையாளர்களை எனக்கு கண்ணுல கண்டாலே ஆகாது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பிடிக்காததால்தான் அப்படிப்பட்ட ஒருவரை அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

   நன்றி நண்பர் கில்லர்ஜி.

   Delete
 5. இருக்கும்போதே செய்யனும். அப்புறம் கட்டை சுவத்துக்கு வச்சு பிரயோசனமில்லைன்னு என் அப்பா அடிக்கடி சொல்வார்.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் பிள்ளைகளை இப்படிச் சொல்லித்தான் வளர்த்திருக்கிறோம். ஆனாலும், இறுதி நாள்வரை பிள்ளைகளைப் பாரம் சுமக்க வைக்காமல் வாழ்ந்திடவே முயற்சிக்கிறோம்.

   நன்றி ராஜி.

   Delete
 6. குடும்ப கௌரவம்னு ஒன்னு இருக்கே

  ReplyDelete
  Replies
  1. இருக்கு. அதுக்காக இப்படியா?!

   நன்றி mohamed althaf.

   Delete

எழுதுகையில், கருத்துப் பிழைகளும் மொழிப் பிழைகளும் நேர்தல் இயற்கை. பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள். இயலாதெனின், பொறுத்தருளுங்கள்.