ஞாயிறு, 16 ஜூலை, 2017

வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் ‘அகோரி’கள்!...“அபச்சாரம்...அபச்சாரம்”!!

இன்றைய, மண்டை காயவைக்கும் ஒரு செய்தி: ‘தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் நடத்திவரும் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் இரண்டு அகோரிகள்[மனித மாமிசம் உண்பவர்கள்; வீரபத்திரரையும் பைரவரையும் வழிபடுபவர்கள்] நுழைந்தனர்’[தினகரன் நாளிதழ் 16.07.2017]
“அகோரிகள் உற்சவர் முன்பு நிர்வாண[கண்கொள்ளாக் காட்சி!] நிலையில் அமர்ந்து வணங்கினார்கள். இதனால் கோயிலின் புனிதத்திற்குத் தீங்கு நேரிட்டுவிட்டது” -பட்டாச்சாரியர்கள்.

அந்தத் தீங்கைப் போக்குவதற்காக,  15.07.2017 அதிகாலை கோயிலின் நடை சாத்தப்பட்டு, 05.00 மணி முதல் 08.30 வரை ‘சுத்தி யாகம்’ நடத்தப்பட்டதாம். யாகம் செய்வதற்கு முன்பு கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்யப்பட்டதாம்

யஜூர் வேதத்தில் 30 வகையான யாகங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அவற்றில் இதுவும் ஒன்றா அல்லது இதுவொரு புதுவகையான யாகமா தெரியவில்லை.  கடவுள் சொன்னதாக வேதம், ஆகமம் என்று எதையெதையோ எழுதிவைத்துக்கொண்டு இன்றளவும் அவற்றின் பெருமை பேசிக்கொண்டிருக்கும் மகானுபவர்களுக்கே வெளிச்சம். ஒரு காலத்தில், கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்லி, பொருட்களையும் விலங்குகளையும், ஏன்... மனிதர்களையும்கூட நெருப்பிலிட்டார்கள். இப்போதெல்லாம் குடம் குடமாக நெய்யை வீணாக்குவதோடு சரி.

இந்தச் 'சுத்தி யாகம்' என்னும் புனித யாகத்தைச் செய்யாமல் இருந்திருந்தால் பெரும் தீங்குகள் விளையும் என்றார்களாம் பட்டாச்சாரியர்கள்.

கடவுள் அணுவிலும் இருக்கிறார்; தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்...அதாவது, அவரால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

இவர்களின் கூற்றுப்படி, அகோரிகளுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது உறுதியாகிறது. கடவுளைச் சுமந்துகொண்டிருக்கும் அவர்களால் புனிதம் கெட்டதாகச் சொல்வது பேதைமை. அதோடுகூட, அவர்கள் அற்ப மானிட வடிவில் நடமாடுபவர்கள். அவர்களின் நுழைவால் கடவுள் குடிகொண்டிருக்கிற கோயில் வளாகம் தூய்மை இழந்தது என்று சொல்வதை எவ்வகையிலும் ஏற்க இயலாது.

பட்டாச்சாரியர்கள் சொல்வது உண்மையே எனின்.....

அகோரிகளின் நுழைவால் கெட்டுப்போன புனிதம் ஒரே ஒரு முறை 'சுத்தி யாகம்' செய்வதால் நீங்கிவிடாது. யஜூர் வேதம் சொல்லுகிறபடி[எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்பது பட்டாச்சாரியர்களுக்குத் தெரியாதா என்ன!!!] நடையைச் சாத்திவிட்டுத் தினம் தினம் கோயிலைச் சுத்தம் செய்து ’சுத்தி யாகம்’ செய்துகொண்டே இருத்தல் வேண்டும்.....கடவுள் அண்டவெளியில் தோன்றியோ அசரீரியாகவோ “போதும்” என்று சொல்லும்வரை.

ஆம். அனைத்து மக்களும்[வேத ஆகமங்களை மகான்களுக்கு மட்டும் சொன்னார்] கேட்டறியும் வகையில் அவர்  சொல்லுவார்! இது சர்வ நிச்சயம்!

வாழ்க திருப்பதி வெங்கடேசப் பெருமாள் திருநாமம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எச்சரிக்கை!
வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் புகுந்த அகோரிகள். மனித மாமிசம் உண்பவர்கள். இப்போதைய இவர்களின் உணவு உயிருள்ள மனிதர்களின் மாமிசமா, செத்த மனிதர்களின் மாமிசமா  தெரியவில்லை. எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள்!!














6 கருத்துகள்:

  1. நிர்வாணமாக உர்கார்ந்ததே ''தீட்டு'' என்றால் ? காஞ்சிபுரம் கோவிலின் உள்ளே தேவராஜன் குருக்கள் நடத்தினாரே.............................................................. அதற்காக அந்த கோவிலை இடிக்க வேண்டுமோ ? என்று கேட்டால் ''திட்டு''வார்கள் வேண்டாம் சாமி நான் ஒன்னும் கேட்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நாளிதழில் படிச்சதைக் கொஞ்சம் மாத்தி ஏதோ கிறுக்கியிருக்கேன். தப்பா ஏதும் சொல்லல!

      உடன் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அகோரிகள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  3. அகோரிகள் எவ்வளவோ பரவாயில்லை ,யாரையும் ஏமாற்றாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,கடவுளின் ஏஜென்ட் போல் நடிப்பதில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஜெண்ட்டுகள் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு