திங்கள், 24 ஜூலை, 2017

‘அது’க்கு ஏது காலமும் நேரமும்!!!

மீனாட்சியின் நடவடிக்கை  குணசீலனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.

தொட்டுத் தழுவிப் படுக்கைக்கு இட்டு வந்தால், தட்டிக் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு வெளியெ போகிறாளே! கொஞ்சம் முன்னால், என்னைத் தொடு; இன்பத்தில் துவட்டி எடு என்று அழைப்பு விடுத்த அவளின் ஏக்கப் பார்வை எங்கே போனது?
குழப்பத்துடன் படுக்கையில் புரண்டான் குணசீலன்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த மீனாட்சி, தெரு முனைக் கடையில் காய்ச்சல் மாத்திரை வாங்கியாந்தேன் என்று ஒரு தம்ளரில் சுடுநீருடன் மாத்திரையும் நீட்டினாள்.

எனக்குக் காய்ச்சல்னு யார் சொன்னது?” எரிந்து விழுந்தான் குணசீலன்.

உன் உடம்பு சொல்லிச்சி. நம்மளோடது திடீர்க் கல்யாணம்; சொந்த பந்தங்கள் எதிர்த்ததால போலீஸ் ஸ்டேசனில் மாலை மாத்திகிட்டோம். முதலிரவிலாவது என்னைப் பட்டுச் சேலையில் பார்க்கணும்னு ராத்திரி பகலா ஆட்டோ ஓட்டினே. உடம்பு கெட்டுப் போச்சு. முதலிரவை இன்னொரு நாள் வெச்சுக்கலாம்.”

இன்னிக்கி ரொம்ப நல்ல நாள்னு சோதிடர் சொன்னாரு. அதில்லாம விடிஞ்சா ஆடி மாசம் பொறக்குது.”

மீனாட்சி, முகத்தில் குறும்பு கொப்பளிக்கச் சிரித்தாள். ஆடி மாசத்தில் ராத்திரியே வராதா?”

அப்படியில்ல. ஆடி மாசம் ’அதுக்கு’ ஆகாத மாசம்னு சொல்லுவாங்க.”

ஆன மாசம் ஆகாத மாசம்; கெட்ட நேரம் நல்ல நேரம்; ராகு காலம் எமகண்டம் இதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான். உழைச்சிச் சம்பாதிக்கிற நமக்கு எதுக்கய்யா? சந்தோசம் நம்மைத் தேடி வர்றதில்ல; நாமதான் அதைத் தேடி அலையறோம். அது கிடைக்கும்போது தவற விட்டுடக் கூடாது. உடம்பு குணமானதும்அது வெச்சுக்கலாம்என்றாள் மீனாட்சி.

குண்சீலனை இழுத்து அணைத்து மடியில் கிடத்தி மாத்திரையை ஊட்டினாள்; அவன் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்; நெஞ்சில் இதமாகத் தட்டிக் கொடுத்தாள்; ஆராரோ...ஆரிரரோ...” என்று கிறங்கடிக்கும் குரலில் சிரித்துகொண்டே தாலாட்டுப் பாடினாள்.

ஐம்புலன்களின் ஆர்ப்பாட்டம் இல்லாத, உணர்ச்சிப் போராட்டம் இல்லாத ஒருவித இன்ப சுகத்தில் மிதந்து உறங்கிப் போனான் குணசீலன்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக