“என் குடிகாரப் புருஷன் பத்தாயிரம் கடன் வெச்சிட்டு மண்டையைப் போட்டுட்டான். வீட்டு வேலை செஞ்சி சம்பாதிக்கிறது வயித்துப்பாட்டுக்கே கட்டுபடியாகல. எப்படித்தான் கடனை அடைக்கப்போறனோ?” என்று என் இல்லத்தரசியிடம் அவள் புலம்புவது வழக்கம். அந்தப் பத்தாயிரத்தைக் கொடுத்தால் படிந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
கார்காலத்தின் ஒரு இதமான காலைப்பொழுது.
வீடு பெருக்கிக்கொண்டிருந்தாள் அம்சவேணி.
“அம்சா.” -அழைத்தேன்.
“என்னங்கய்யா?” -நெருங்கி வந்தாள்.
“பத்தாயிரம் இருக்கு. வெச்சிக்கோ” -பணக்கட்டை நீட்டினேன்.
“எதுக்குங்க?”
“உன் கடனை அடைக்கத்தான். திருப்பித் தரவேணாம்.” -என் ஒரு கை ஆறுதலாய் அவள் தோளைத் தொட்டுச் சரிந்து வழவழப்பான இடையைத் தடவியது.
என்னை ஏறிட்டுப் பார்த்த அம்சவேணி, “இது ஒரு தடவைக்கா, ஒரு நைட்டுக்கா, ஒரு மாசத்துக்கா?” என்று கேட்டாள்.
அவளின் இந்தக் கேள்வி என்னை நிலை தடுமாற வைத்தது.
“உடம்பை வித்துப் பிழைக்கறவகூட, ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு வாங்குறா. என் புருஷன் கை தவிர இன்னொரு கை என்னைத் தொட்டதில்லை. கட்டுக் குலையாத கவர்ச்சியான உடம்பும் எனக்கிருக்கு. பத்தாயிரம் தர்றேன்னு சொல்லாம, பத்து லட்சம் தர்றேன். எனக்கு ‘வைப்பாட்டியா இரு’ன்னு சொல்லியிருந்தா ரொம்பப் பெருமைப் பட்டிருப்பேன். ஒரு வேலைக்காரிதானேன்னு ரொம்பச் சீப்பா நினைச்சிட்டீங்க." -வாய்விட்டுச் சிரித்தாள் அம்சவேணி. அது கட்டுப்படுத்தப்பட்ட கடுங்கோபத்தின் வெளிப்பாடு.
“கிராமத்துக்குப் போன அம்மா வந்ததும், ‘நீ இல்லாத நேரத்தில் அம்சவேணி பத்தாயிரம் பணம் கேட்டா. அவள் நல்ல நடத்தையுள்ளவளாத் தெரியல. இனி வேலைக்கு வராதேன்னு விரட்டிட்டேன்னு சொல்லுங்க. தனக்கு வாய்ச்சவர் உத்தம புருஷன்னு அம்மா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதனால எனக்கொன்னும் பாதிப்பு இல்ல. ஏன்னா, நான் வேலைக்காரிதானே.”
கையிலிருந்த துடைப்பத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள் அம்சவேணி.
===============================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக