வியாழன், 20 ஜூலை, 2017

'கடவுள்!’...சிறு சிறு சிறு குறிப்புகள்!!

நேற்றிரவு, நான் தேர்வு எழுதுவதுபோல் ஒரு கனவு கண்டேன். தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில், ‘கடவுள்...சிறு குறிப்புகள் வரைக’ என்பதும் ஒன்று. அதற்கான என் விடை கீழே!
கடவுள்:
*இந்தச் சொல் இடம்பெறாத  மொழி அகராதி எதுவும் இல்லை. ஆனால் இதற்கான, புரிந்துகொள்ளும்படியான முழுமையான விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை.

*அண்டசராசரத்திலுள்ள அணுக்கள், கோள்கள், மனித இனம், பிற உயிரினங்கள் என்று அனைத்திற்குமே தோற்றமும் அழிவும் உண்டு. இவை இல்லாதவர் இவர் மட்டும்தானாம்!

*அனைத்துப் பொருள்களும் உயிர்களும் அஃறிணை, உயர்திணை, ஆண்பால், பெண்பால் என்று ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும். எந்த ஒன்றிலும் அடங்காத பெருமைக்குரியவர் இவர் என்கிறார்கள்[இதனால்தான், ஞானிகள் ‘கடவுள் அவனாகவும் அவளாகவும் அதுவாகம் எதுவாகவும் இருப்பார். அவ்வாறு இல்லாமலும் இருப்பார்’  என்று தாமும் குழம்பி மக்களையும் குழப்பினார்கள்].

*கோள்கள் பல. உயிர்கள் பல. அணுக்கள் பல பல பல. ஆனால், இவர் மட்டும் ஒரே ஒருவர்தான் என்கிறார்கள்.

*எந்தவொரு அளவுகோளுக்கும் கட்டுப்படாத விரிந்து பரந்த பிரபஞ்ச வெளியில் இருந்துகொண்டிருக்கும் அல்லது இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்தும்  இவருக்கு மட்டுமே சொந்தம். உரிமை கொண்டாட வேறு எதுவோ எவையுமோ எவரோ எவர்களுமோ இல்லாதது இவரின் அதிர்ஷ்டம்.

*அன்பு, பாசம், நேசம் என்று அனைத்துப் பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக விளங்குபவர் இவர் மட்டுமே என்பதும், இவரிடமிருந்துதான் இப்பண்புகள் நம்மால் பெறப்பட்டன என்பதும், வரம்பு கடந்த பேரறிவும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர் என்பதும்  அளப்பரிய இவர்தம் பெருமையின் அடையாளங்கள் என்றியம்புகிறார்கள்.

*உடல் உழைப்பையும் அறிவாற்றலையும் பயன்படுத்திப் பிற மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்க, கணக்குவழக்கில்லாமல் பொய்யான [கடவுள்]கதைகள் சொல்லிச் சிலபேர் பிழைப்பு நடத்துவதற்குக் காரணமாய் அமைந்தவர் இவர்.

*இவரால் நல்லது ஏதும் நடக்காவிட்டாலும், இவரை நம்பும் மனிதர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது புரியாத பெரும் புதிர்.

*இவர் சொன்னதாக, மதவாதிகள் இல்லாதது பொல்லாதது என்று மதப்புத்தகங்களில் எதை எதையோ எழுதி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்கும் திராணி கொஞ்சமும் இல்லாதவர் இவர்.

*இவர் படைத்ததாகச் சொல்லப்படும் அனைத்திலும் எத்தனை குறைகள்/குளறுபடிகள் இருப்பினும், இவரின் புகழ் பாடுவதற்கென்று எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டிருப்பது இவர் பெற்ற பேறு.

மேலும்.....

அதிகாலையில் என் மனைவி தயாரித்துக்கொண்டிருந்த காபியின் ‘கம கம’ வாசனை என் தூக்கத்தைக் கலைத்ததால், கண்டுகொண்டிருந்த கனவை, முழுமையாகப்  பதிவு செய்வது தடைபட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
===============================================================================
தளத்தின் தலைப்பில்[Header] உள்ள கழுதைக் கூட்டத்துக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய வேண்டாம். கழுதைகளின் அழகு என்னைக் கவர்ந்தது. அவ்வளவுதான். அதோடு, அந்தக் கூட்டத்துக்குள் நான் இல்லை என்பதையும் அறிந்திடுக!










10 கருத்துகள்:

  1. #எவர்களுமோ இல்லாதது இவரின் அதிர்ஷ்டம்#
    இவரே இல்லை ,இவருக்கு அதிர்ஷ்டம் வேறா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளை நம்புகிறவர்களுக்கான குறிப்புகள்தானே இவை!!!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. கனவு நனவாகக்கடவது நண்பரே...
    வீட்டில் காஃபி போடாமல் டீ போட்டிருந்தால் கனவு சட்டசபை போல் கலைக்கப்பட்டு இருந்திருக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபியோ டீயோ என் தூக்கம் கலைந்த பிறகுதான் போட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பேன்!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. "இவரால் நல்லது ஏதும் நடக்காவிட்டாலும், இவரை நம்பும் மனிதர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது புரியாத பெரும் புதிர்".
    "இவர் படைத்ததாகச் சொல்லப்படும் அனைத்திலும் எத்தனை குறைகள்/குளறுபடிகள் இருப்பினும்...."

    "இதைத் தட்டிக் கேட்கும் திராணி கொஞ்சமும் இல்லாதவர் இவர்".

    மேலே உள்ள மூன்று இடங்கள் தவிர மற்ற விடைகள் ஏற்கத்தக்கது என் மதிப்பெண்கள் 70/100

    காபி போட்டவர்களுக்கு நன்றி இல்லையேல் உங்கள் மதிப்பெண்கள் மேலும் குறைந்திருக்கும்.

    தொடர்ந்து கனவுகண்டு பதிவில் எழுதுங்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் மதிப்பெண்கள் 70/100//

      நன்றி Koil Pillai.

      நீக்கு
    2. //காபி போட்டவர்களுக்கு நன்றி இல்லையேல்.....//

      ஹ...ஹ...ஹ! நன்றி.

      நீக்கு