சனி, 29 மார்ச், 2014

என் ‘கற்பனைக் கதை’க்கு ‘உயிர்’ கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி!

18.03.2014 இல் ‘.....இவ்வாறாகக் கடவுள் காப்பாற்றப்படுகிறார்!!! என்னும் [http://kaamakkizaththan.blogspot.com/2014/03/blog-post_6552.html] தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தேன்.

தீராத நோய்க்கு ஆளான ஓர் இளைஞன்,  “சாவை விரட்டியடிக்கணுங்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’ என்று சபதம் மேற்கொண்டேன். போராடி வென்றேன்; குணமடைந்தேன்” என்று தன் நண்பனிடம் கூறுவதான ஒரு காட்சியை உள்ளடக்கிக் கதை பின்னியிருந்தேன்.

இன்று காலையில், பழைய பருவ இதழ்களில் சிலவற்றை நுனிப்புல் மேய்ந்த போது, கண்ணில் பட்ட ஓர் இளைஞரின் ‘அசுர சாதனை’ பற்றிய செய்தி [விகடன் 24.08.2003] நான் செய்த கற்பனைக் கதைக்கு உயிரூட்டுவதாக இருப்பது கண்டு மனம் சிலிர்த்தேன். 

உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் அதீத ஆர்வம் காரணமாக அதைக் கீழே பதிவு செய்திருக்கிறேன்.

தவறாமல் படியுங்கள்; இயன்றால் பிறருடன் பகிருங்கள்.



விகடன்:      ஆம்ஸ்ட்ராங்கின் கதை தெரியுமா உங்களுக்கு? 
                                       [சுருங்கிய வடிவம்]

மீபத்தில், சைக்கிள் ஓட்டுவதில் தொடர்ந்து ஐந்தாவது முறையாகச் சாம்பியன் ஆகி உலக சாதனை படைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். அவர் ஒரு கான்ஸர் நோயாளி.

‘இது தேறாத கேஸ்’ என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட ஆசாமி இவர்!

அந்த நோயைப் போராடி  ஜெயித்து, அதிலிருந்து மீண்டு, உலக சாதனை படைப்பதென்பது சாதாரணமா என்ன? அதன் பின்னேதான் எத்தனை எத்தனை ரணங்கள்!

குடும்பச் சூழ்நிலை, ஆம்ஸ்ட்ராங்கை விளையாட்டு மைதானத்துக்கு விரட்டியது. டிரையத்லான் போட்டிகளில் பிரபலம் ஆகியிருந்தும் அதைப் புறக்கணித்து சைக்கிள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார்.

அடுத்தடுத்து, பத்து டைட்டில்களை வென்ற நிலையில், அவரது மூளையையும் நுரையீரலையும் புற்று நோய் தாக்கியது. கீமோதெரப்பி சிகிச்சையின் விளைவாக அவர் உடல் பலவீனம் ஆனது. ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார்.

எதிர்பாராத நிலையில், உத்வேகம் பெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபடலானார்.

21 நாட்கள் நடைபெறும் Tour de France போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.

அந்தப் போட்டியில் பங்கு பெறுவதே பெரிய விசயம். கிட்டத்தட்ட பிரான்ஸ்ஸையே ஒரு சுற்றுச் சுற்றி, 2130 மைல் சைக்கிள் ஓட்ட வேண்டும். செங்குத்தான மேடு, கிடுகிடு பள்ளம் என கடுமையான பாதைகளைக் கடக்க வேண்டும். இதில் பங்கேற்று, கீழே விழுந்து கைகால்களை முறித்துக்கொண்டவர்கள், உயிரை இழந்தவர்கள் ஏராளம்!

ஆர்ம்ஸ்ட்ராங் அதிகம் ரிஸ்க் எடுப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.சக வீரர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

அத்தனையையும் மீறி, போட்டியில் கலந்துகொண்டார் ஆர்ம்ஸ்ட்ராங்; வெற்றியும் பெற்றார்!

“நான் சைக்கிள் சாம்பியன் ஆவதற்காகவே பிறந்தவன். புற்று நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பலரும் வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள். அது தவறு.

இந்தப் புற்று நோய், என் மன உறுதியைப் பல மடங்கு உயர்த்தியது. நான் வெற்றியாளனாகத் திகழ்வதற்கு இதுதான் காரணம்” என்று உறுதிபடச் சொல்கிறார் ஆர்ம்ஸ்ட்ராங்.

புற்று நோய் தாக்குவதற்கு முன்பு, ஒரு முறைகூட இந்தப் போட்டியில் இவர் ஜெயித்ததில்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx




வியாழன், 27 மார்ச், 2014

நான் ஒரு.....ஒரு.....ஒரு.....!!!

இது நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது எத்தனை பெரிய அவலம்?

அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

‘சே, என்ன மனிதர்கள்!’

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.

இந்த மண்ணில் ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?

லட்சத்திற்கு பத்துபேர் தேறுவார்களா?

கோபிக்காதீர்கள்..........அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?

யோசிக்கிறீர்கள்?

ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.

“இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது?” என்கிறீர்களா?

ஆறு மாசம் முந்தி.

“எங்கே?”

சேலத்தில்.

“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?””

இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.

“அட!...வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”

அது வந்து.......

“என்னய்யா வந்து போயி, பத்தோட பதினொன்னா நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே. அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”

அது வந்து.....அது வந்து.....வந்து.....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$










செவ்வாய், 25 மார்ச், 2014

முட்டாள் தமிழா, ஜப்பானைப் பாருடா!!!

சற்று முன்னர், இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழில் [25.03.2014] ‘தினம் ஒரு தகவல்’ பகுதியில் வழங்கப்பட்டுள்ள தகவலைப் படித்துப் பிரமித்தேன். தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை என்னை வேதனையில் ஆழ்த்தியது. தந்தித் தகவலை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள்.


தலைப்பு:           ஆங்கிலம் இல்லாத ஜப்பான்

ம் நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள் உலகில் வாழ முடியாது என்பது போல் இங்கு ஆங்கிலம் போதிக்கப்படுகிறது. ஆனால், ஜப்பானில் அனைத்துமே ஜப்பான் மொழியில்தான்.

ஆங்கிலம் இல்லாத நாடுகளில், ‘நோ’, ‘தேங்க்ஸ்’, ‘எஸ்’ என்ற வார்த்தைகளை எப்போதாவது பயன்படுத்துவார்கள். ஆனால், ஜப்பானில் அதுவும் இல்லை. அந்த நாட்டில் ஆங்கில வார்த்தைகளைக் கேட்கவே முடியாது.

ஜப்பானில், அவர்களின் தாய்மொழி மட்டுமே தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி.

அங்கு பேச்சு மட்டுமல்ல, ஹைக்கூ முதல் ஆராய்ச்சி வரை அத்தனைக்கும் தாய்மொழி ஜப்பானைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இது எப்படி சாத்தியம்?

மருத்துவம், தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட ஆங்கில ஆராய்ச்சி நூல்களும், உலக அளவில் வெளிவரும் வார, மாத ஆராய்ச்சி இதழ்களும் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

இவர்களிடம், “ஆங்கிலம் தெரியாமல் எப்படித் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜெயிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினால், “யாருக்கு ஆங்கிலம் அவசியம் தேவைப்படுகிறதோ அவர்கள் மட்டும் அதைக் கற்றுக்கொள்ளலாம். சிலருக்கு ஆங்கிலம் தேவை என்பதற்காக எல்லோருக்கும் அதைக் கட்டாயம் ஆக்கும் பழக்கம் இங்கு இல்லை” என்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரேயொரு ஆங்கில நாளிதழைத் தவிர, பிற அனைத்தும் ஜப்பான் மொழியிலேயே வெளிவருகின்றன. தாய்மொழியிலேயே அனைத்தும் கிடைக்கும்போது கடைக்கோடிக் குடிமகனும் தன் முழுத் திறமையை எளிதாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறான்.

ஜப்பானில் கோயில்களை அரிதாகத்தான் பார்க்க முடியும்.

“நாங்கள் வருடத்துக்கு ஒரு முறை...புது வருடம் பிறக்கும்போதுதான் கோவிலுக்குச் செல்வோம். மற்றபடி, கோவிலுக்குச் சென்று பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பது இல்லை. கடவுள் நம்பிக்கையைவிட எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம்” என்கிறார்கள் ஜப்பானியர்கள்.


நன்றி:      தினத்தந்தி.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜப்பானியரிடமிருந்து தாய்மொழிப் பற்றை நம்மால் கடன் வாங்க முடியுமா?!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



திங்கள், 24 மார்ச், 2014

பெட்டைக் கோழியும் பெண்ணின் சினை முட்டையும்!!

நீங்கள் நாட்டுக் கோழியின்[பெட்டைக் கோழி] வயிற்றை அறுத்துப் பார்த்திருக்கிறீர்களா? சுமார் 300 முட்டைகள் [எண்ணிக்கை 200 வரை குறையவும் செய்யலாம்] பச்சை மிளகுக் கொடிபோல ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருப்பதைக் காணலாம். இவற்றைப் ‘போட்டு’ முடித்துவிட்டால் அதற்கப்புறம், ஆயுளுக்கும் அந்தப் பெட்டைக்கோழி முட்டையே போடாதாம்.

நம் பெண்களின் நிலையும் இதுதானாம்.

ஒவ்வொரு பெண்ணின் உடம்பிலும் சுமார் 6000 சினை முட்டைகளை உருவாக்கக் கூடிய தாதுக்கள், ரசங்கள், திரவங்கள் உள்ளன. எத்தனை இருந்தும், முழுமையாக உருப்பெறுவது ஏறத்தாழ 400 சினை முட்டைகள்தான்.

முட்டைகள், மாதம் ஒன்று வீதம் ‘ஃபெலோப்பியன் ட்யூப்’ வழியாகக் கருப்பை வாசலுக்கு வந்து ஆணின் உயிரணுவை எதிர்பார்த்துக் காதலோடு காத்திருக்குமாம். உயிரணு கலந்தால் கரு உருவாகிக் கருப்பை வாய் மூடிக்கொள்ளும்; உயிரணு வருகைபுரியாவிட்டாலோ, அதன் வருகை தடைபட்டாலோ, காத்திருந்து நொந்துபோன சினை முட்டை, காலனுக்கு இரையாகும். அதாவது, முற்றிலுமாய் அழிந்துபோகும்.

அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால்..........

மேற்சொன்ன 400 முட்டைகளும் மாதத்திற்கு ஒன்று வீதம் கருப்பை வாசலில் ஆஜராவது நிறைவு பெற்றால், அதன் பிறகு பெண்ணுக்குள் கரு முட்டை உருவாவது அறவே நின்றுபோகிறதாம்.

இந்நிலையில்தான் மாதவிலக்கும் தடைபடுகிறது.

ஹார்மோன் [ஈஸ்ட்ரோஜன்] நிகழ்த்தும் இந்தத் திருவிளையாடல் பெண்ணின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கிறது. சிலர் ‘ஹிஸ்டீரியா’ எனப்படும் மன அதிர்ச்சி நோய்க்கு உள்ளாகிப் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

ஆண்மகனைப் பொருத்தவரை இப்படிப்பட்ட அவலநிலைக்கு அவன் ஆளாவதில்லை.

90 வயதைத் தாண்டிய தொண்டுக் கிழவனாக இருந்தாலும் உயிரணு உற்பத்தி தடைபடுவதில்லை; தடைபட்டாலும் எவ்வித மனநோய்க்கும் அவன் ஆளாவதில்லை.

ஆண்பெண் படைப்பில் இம்மாதிரியான ‘பிழைகள்’ நேர்வதற்கு எது காரணம்? அல்லது, யார் காரணம்?

இயற்கையா, கடவுளா?

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

சினை முட்டை குறித்த தகவல் இடம்பெற்ற நூல்: ‘கலைஅரசு’ எழுதிய, ‘சித்தர்கள் சொல்லும் திராவிட ஆன்மிகம்’, அருண் பதிப்பகம், கோவை. முதல் பதிப்பு: நவம்பர், 2005.

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo



வியாழன், 20 மார்ச், 2014

'ஓசை...ஓயாத அலைகள்’ -----------வலைப்பதிவரிடம் ஒரு கேள்வி!

மேதகு, ‘ஓசை...ஓயாத அலைகள்’ வலைப்பதிவு உரிமையாளருக்கு,

காமக்கிழத்தனின் அன்பு வணக்கம்.

மார்ச் 20, 2014 தேதியிட்ட, ‘சாதி அரசியல் - வை. கோ.வையும் விட்டு வைக்காத பகுத்தறிவு...’   http://oosssai.blogspot.com/2014/03/blog-post_20.html என்ற தலைப்பிலான உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்தது.

#கற்பே தேவை இல்லை” என்ற பெரியார்தான் சீதை எப்படிக் கற்போடு இருந்திருப்பாள் என்று தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டார்.# என்றிப்படி இடுகையைத் தொடங்கியிருக்கிறீர்கள்.

பெரியாரைத் ‘ - தந்தை பெரியார்’ என்று உங்கள் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டதன் மூலம் [“நான் சொல்வதை அப்படியே நம்பாமல்.....உங்கள் புத்திக்குச் சரியென்று பட்டதை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளிவிடுங்கள் - தந்தை பெரியார் ] அவரை மிக உயர்வாக மதிப்பவர் நீங்கள் என்பதைப் பிரகடணப்படுத்தியிருக்கிறீர்கள்.

அவருடைய அறிவுரையையும் பதிவு செய்து வைத்திருக்கிறீர்கள்.

இதன் மூலம், பெரியாரின் அத்தனை நூல்களையும் கரைத்துக் குடித்ததோடு, அவர் வகுத்த கொள்கைகளை ஏற்று வாழ்பவர் நீங்கள் என்று உங்கள் வாசகரை நம்ப வைத்திருக்கிறீர்கள்.

அப்படி நம்பியவர்களில் நானும் ஒருவன்.

அத்தகையவர் என்று உங்களை நம்பியிருந்த காரணத்தால்.........

#கற்பே தேவை இல்லை” என்ற பெரியார்தான் சீதை எப்படிக் கற்போடு இருந்திருப்பாள் என்று தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டார்.# என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்துப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

உங்கள் எழுத்தின் போக்கை ஊன்றிக் கவனித்தால்.....தன் குடும்பப் பெண்களுக்குக் கற்பு தேவையில்லை என்று அவர்களிடமே பெரியார் சொல்லியிருக்கிறார்’ என்று பரப்புரை செய்வீர்கள் போலிருக்கிறது!!!

கற்பு பற்றிப் பெரியார் என்ன சொல்லியிருக்கிறார்?

 "குடிஅரசு" [8-11-1928] இதழில் பெரியார் எழுதிய ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். [‘சித்திரபுத்திரன்’ என்ற புனை பெயரில் அவர் எழுதியது]

#..........உண்மையாகப் பெண் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இருபிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுதுகொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாயவேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே, இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும், நிர்பந்தக் கற்பையும்தான் காணலாம் அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது...........#

பெரியாரின் ‘கற்பு’ குறித்த கருத்து இவ்வாறு இருக்கையில், இதை இருட்டடிப்புச் செய்துவிட்டு, அவர் கற்பே தேவையில்லை என்கிறார் என்பதாக நீங்கள் குறிப்பிடுவதன் உண்மை நோக்கம் என்ன?

பெரியாரை இழிவு படுத்துவதுதானே?

‘பெரியார் தீய ஒழுக்கத்தைப் போதித்த ஓர் அயோக்கியன்’ என்பது போன்ற எண்ணத்தை இன்றைய மக்கள் மனங்களில் பதியச் செய்வதுதானே?

உங்களுடைய இந்தச் செயல் எந்த வகை ஒழுக்கத்தைச் சார்ந்தது?

பெரியாரைப் போற்றுவதாகப் பாசாங்கு செய்து, அவரைப் பழி வாங்கும் ‘இழிகுணம்’ அல்லவா இது?

உங்கள் சுய உருவம் என்ன என்பதை வெளிப்படுத்தாமல், பெரியாரின் மனம் போலவே வெளுத்த, தூய்மையான வெண்ணிறத் தாடியின் பின்னால் ஒளிந்துகொண்டு, அவரின் புகழுக்கு மாசு விளைவிக்கும் இழி செயலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்களே, இது ஏன்?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$











புதன், 19 மார்ச், 2014

‘புத்திசாலிப் பெண்’ என்ற இக்கதை கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்!!!

தோழர்களே, இந்தக் கதை உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் ‘சராசரி’ ஆண்மகன். புரியாவிட்டால்.......... மன்னியுங்கள்.


கதை:                     புத்திசாலிப் பெண்

கதாசிரியர்?            ஹி...ஹி...ஹி...

"பக்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா” என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டுத் தெருவோரம் விழுந்து கிடந்த அவளோட கிழட்டுப் புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அப்போ அவ வீட்டில் இல்லையாம். நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை! இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; ஒரு கிழட்டு மொடாக் குடியனுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுப் பெருத்த சோகம் சுமப்பவள். அவளைப் பார்க்கும்போதெல்லாம்,  “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே நல்ல வேரில் பழுத்த பலா” என்ற பாவேந்தனின் பாடல் வரியை முணுமுணுப்பது புவியரசுவின் வழக்கம்.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“அவளோட அம்மாவைப் பார்க்கப் போயிருக்கா. நாளைதான் வருவா. நன்றி சொல்லணும்னு சொன்னயாம். அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு சொல்லணுமா?” என்றான் புவியரசு.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் சொல்லணும்னு வந்தேன்.”

“சொல்லு”

“என் புருஷன் உங்களை ரொம்பவே சந்தேகப்படுறாரு.”

“என்னையா?” கண்களில் வியப்பு விரியக் கேட்டான் புவியரசு.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” சொல்லிவிட்டு ஆவலுடன் அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் தாமரை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதையில் இடம் பெற்றுள்ள பெயர்கள் கற்பனையே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


செவ்வாய், 18 மார்ச், 2014

.................................இவ்வாறாகக் கடவுள் காப்பாற்றப்படுகிறார்!!!

தீராத நோய் அவனுக்குத் தீர்ந்தது. அதற்குக் காரணம் ‘தன்னம்பிக்கை’ என்றான் அந்த இளைஞன். “இல்லை. கடவுள் கண் திறந்தார்” என்றாள் அவன் தாய். நீங்கள் யார் கட்சி? கதையைப் படியுங்கள்.
                       

                                  சாமி குத்தம்? [சிறுகதை] 

ராசுவின் தந்தை ஒரு தனியார் வங்கி அலுவலர்.

அவர் கொச்சிக்கு மாறுதல் ஆன போது, தன் குடும்பத்தையும் அங்கே அழைத்துப் போனார்.

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தன் சொந்த ஊரான கோவைக்கு மாறுதல் பெற்றார்.

பிறந்த மண்ணுக்குத் திரும்பியதில் ராசுவுக்கு அளப்பரிய ஆனந்தம். நண்பர்களைத் தேடிப் போய் அளவளாவினான்.

பள்ளித் தோழன் அறிவழகனை ஒரு விளையாட்டு மைதானத்தில் சந்தித்த போது, அவன் விழிகளில் மகிழ்ச்சி கலந்த வியப்பு.

“நல்லா இருக்கியா?” என்று கேட்ட அறிவழகனிடம், “நான் நல்லா இருக்கேன். நீயும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன். அப்போ நீ குணப்படுத்த முடியாத விசித்திர நோய்க்கு ஆளாகியிருந்தே. டாக்டர்களுக்கே நோய்க்கான காரணம் புரியல. உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையறதால நீ இறந்துடுவேன்னு சொல்லியிருந்தாங்க. அது நடந்து அஞ்சாறு வருசம் ஆச்சு. நீ இப்போ திடகாத்திரமாவும் உற்சாகமாவும் இருக்கே. சாவை எப்படி ஜெயிச்சே?” என்று கேட்டான் ராசு. அவன் குரலில் ஏராள ஆர்வம்.

“ஒரு ‘சைக்கியாட்ரிஸ்டு’கிட்டே அப்பா அழைச்சுட்டுப் போனார். அந்த டாக்டரின் ஆலோசனைப்படி, சாவை விரட்டியடிக்கணுங்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’னு அப்பப்போ மனசுக்குள்ள சபதம் எடுத்தேன். தனிமையில், உரத்த குரலில் ஆவேசமா கூச்சலிடுறதும் உண்டு. இதன் மூலமா என் உடம்பில் எதிர்ப்புச் சக்தி கூடிச்சி. நோய் இருந்த இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சிடுச்சி. டாக்டர்கள் ஆச்சரியப்பட்டாங்க” என்றான் அறிவழகன்.

அறிவழகனைக் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராசு.

இருவரும் கைகுலுக்கிப் பிரிந்தார்கள்.



அறிவழகன் வீடு திரும்பிய போது, அவன் அம்மா, வந்திருந்த சொந்தக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்.

“டாக்டருங்க உன் மகன் செத்துடுவான்னு சொன்னாங்களே, அவன் எப்படித் தப்பிப் பிழைச்சான்?” என்றார் சொந்தக்காரர்.

“நான் போகாத கோயில் இல்ல; வேண்டாத சாமி இல்ல. ‘கடவுளே, என் மகனைக் காப்பாத்து’ன்னு நாளெல்லாம் கண்ணீர் விட்டு அழுதேன். கடவுள் கண் திறந்துட்டாரு”- மனம் நெகிழ்ந்து சொன்னார் அறிவழகனின் அம்மா.

“அம்மா, என் நோயைக் குணப்படுத்தக் கடவுளுக்கு இத்தனை வருசம் அவகாசம் எதுக்கு? நீ முதல் தடவை வேண்டிகிட்ட போதே அவர் ஏன் கண் திறக்கல? இனியும் சாமி காப்பாத்திச்சி. பூதம் காப்பாத்திச்சின்னு வர்றவங்க போறவங்ககிட்டேயெல்லாம் உளறாதே” என்று கடிந்துகொண்டான் அறிவழகன்.

“அப்படிச் சொல்லாதடா ராசா. அது சாமி குத்தம்.” அவசரமாக அவன் வாயைப் பொத்தினார் அம்மா.
***********************************************************************************

யுகங்கள் ‘நான்கு’ அல்ல; அவை ‘பதினைந்து’ என்றால் நம்புவீர்களா?!

பகவத்கீதையில், யுகங்கள் நான்கு என்கிறாராம் பகவான் கிருஷ்ணன். விஞ்ஞானம் தெரிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், யுகங்கள் பதினைந்து’ என்கிறார்கள். இவற்றில் எதை நீங்கள் நம்புகிறீர்கள்?

சுருக்கமான பதிவையே பெரும்பாலான வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிவேன். இதற்குமேலும் இப்பதிவைச் சுருக்க இயலவில்லை. வரிவரியாகப் படிக்காவிடினும் மேலோட்டமாகவேனும் படியுங்கள்


1. கேப்பிரியன் யுகம்:

இதுவே முதல் யுகம்; 80 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதற்கு முற்பட்ட காலத்து உயிர்களின் ஃபாசில்கள் கிடைக்கவில்லையாம்

அதென்ன ஃபாசில்?

முற்காலத்தில், வாழ்ந்து புதைந்த உயிர்களின் எச்சங்கள் [அதாவது, அழுகிய சதை அழிய, எஞ்சியிருக்கும் எலும்புக்கூடு போன்றவை.]

இந்த யுகத்தின் ஆரம்பத்திலேயே, உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன; உணவு தேடவும் எதிரியிடமிருந்து தப்பிக்கவும் தெரிந்து வைத்திருந்தன.


2. ஆர்டோவிசியன் யுகம்:

இந்த யுகத்தில்தான் கடல் பரப்புகள் தோன்றின. உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் பக்குவமடைந்தது இக்காலக் கட்டத்தில்.

உயிர்களுக்குக் கவச அமைப்புகள் [ஓடு] தோன்றியது.


3. சைலூரான் யுகம்:

36 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. இப்போதுதான் மீன்களுக்கு எலும்பு உருவானது.


4. டிவோனியன் யுகம்:

பெரிய பெரிய மலைகள் தோன்றின. நிலக்கரிப் படிவங்கள் உருவாயின.

இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிற ‘லான்ஸ்லெட்டு’ என்னும் புழு இந்த யுகத்தில்தான் அவதாரம் எடுத்ததாம்!!!


5. பெர்மியன் யுகம்:

ஏராளமான உயிரினங்கள் அழிந்துபோக, சில உயிரினம் மட்டுமே தப்பினவாம்.

மரவட்டை, பூரான், தேள், சிலந்தி போன்ற விஷ  ஜந்துக்களைத் தோற்றுவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது இந்த யுகமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


6.டிரையாசிக் யுகம்:

வறட்சி உச்சநிலையை அடைய, பூமியைக் கவ்வியிருந்த பனிப்படிவங்கள் காணாமல் போயின.

பிராணிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்த அதிசயமெல்லாம் இபோதுதான் நிகழ்ந்தது. பாலூட்டி இனங்களின் ஜனனமும் இதே காலக்கட்டத்தில்தான்.


7. ஜுராசிக் யுகம்:

‘ஜுராசிக் பார்க்’ மனத்திரையில் ஓடியிருக்குமே!

பெரிய பெரிய மலைகள் தேய்ந்து குன்றுகளாயின. சதுப்பு நிலக் காடுகள் தோன்றின.

கவனிக்கவும்.....இமயமலை தோன்றியது இந்த யுகத்தில்தானாம்!

மீன் இனங்களுக்குப் பல் முளைத்ததும், டினோசார் என்ற ராட்சத விலங்கு தோன்றியதும் இப்போதுதான்.

‘புரோட்டோஸிராடாப்பு’ என்ற கொம்பு முளைத்த டினோசாரின் முட்டை கிடைத்திருக்கிறதாம். [எங்கே வெச்சிருக்காங்கன்னு தெரிஞ்சா ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வரலாம்].

100 அடி நீளமுள்ள ஒரு பல்லி இனம், மற்ற உயிரினங்களையெல்லாம் பயமுறுத்தியதாம்!


8. மெஸோஸோய்க் யுகம்:

இந்த யுகத்தின் இறுதியில், டினோசார் இனம் முற்றிலுமாய் அழிந்தது. இதன் அழிவுக்கு, தட்பவெப்பத்தின் திடீர் மாற்றமும், சூறாவளிப் புயல்களும் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

நல்லா கவனிங்க............. பால் தரும் உறுப்புகள் தோன்றி வளர்ச்சி பெற்றதும், தாயன்பு அதிகரித்ததும் இந்த யுகத்தில்தான்.


9. கிரிடேசியன் யுகம்:

மாபெரும் கடல்கோள்கள் நிகழ்ந்து பேரழிவுகள் ஏற்பட்டன.


10. இயோசின் யுகம்:

இன்றைக்கு ஆறு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இன்று நாம் காணுகிற தாவரங்கள் இந்த யுகத்திலேயே தோன்றிவிட்டன.

பாலூட்டிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.

பூனை, ஒட்டகம், குதிரை போன்றவை பூனையின் வடிவத்தில்தான் இருந்தனவாம். மூன்றடி இருந்த யானைக்குத் துதிக்கை கிடையாது!

இதையெல்லாம் நம்பாதவர்கள், பல்வேறு நாடுகளில் உள்ள மியூஸியங்களுக்குச் சென்று, ஃபாசில்களைப் பார்த்து வரலாம் என்கிறார் நூலாசிரியர்.


11.ஒலிகோசின் யுகம்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி உருவான காலம் இதுவே.

பசும் புல்வெளிகள் இந்தப் பூமியை அழகுபடுத்தின.

யானைக்குத் துதிக்கை நீட்சி அடைந்தது.

ஆப்பிரிக்கக் காடுகளில் சிம்பன்ஸி குரங்கினம் வாழ்ந்தது இக்காலத்தில்.


12. மையோசின் யுகம்:

இமயமலை இன்றிருக்கும் நிலையை எய்தியது.


13.பிளியோசின் யுகம்:

தாவர, விலங்கினங்கள் முழு வளர்ச்சி பெற்றன.

பாலூட்டிகள் வெப்ப, குளிர் ரத்த ஓட்டங்களைப் பெற, மூளை வளரும் சூழல் உருவானது.


14. பிளைஸ்டோசின் யுகம்:

இது தோன்றி பத்து லட்சம் ஆண்டுகள் ஆகிறது.

மனிதன்  தோன்றியது இந்த யுகத்தில்தானாம்.

17,50,000 ஆண்டுகளுக்கு முந்தைய நம் மூதாதையரின் ஃபாசில்கள் கிடைத்திருக்கின்றனவாம்! படிப்படியாகப் பல்வேறு இனங்கள் தோன்றலாயின. தங்களுக்குள் வாழ்க்கைப் போராட்டங்களை நடத்தின.


15.ஹோலோசின் யுகம்:

இப்போது நடந்துகொண்டிருப்பது இந்த யுகம்தானாம்.

இது, கி.மு.8000 - 9000 இல் ஆரம்பித்தது.              -நன்றி: தினசரி 03.07.86

******************************************************************************************************************

நன்றி:

ராஜா பாலச்சந்தர். [நூல்: பாதை அமைக்கும் பரிணாமம்; மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம் 605602.]

*****************************************************************************************************************






திங்கள், 17 மார்ச், 2014

காணாமல் போன என் காளைப் பருவத்து இலட்சியம்!!!

இளமைப் பருவத்தில், காதலித்துக் கடிமணம் புரியும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், அழகான பெண்களைச் சந்தித்த போதெல்லாம் என் பார்வை அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் சஞ்சரிக்க, உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர, மனதில் காதல் அரும்பியதே இல்லை. “ஏன், எனக்கு மட்டும் இப்படி?” என்று கேட்டு நான் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு. இனி, மேலே படியுங்கள்.

ங்கே ‘காளைப் பருவம்’ என்று நான் குறிப்பிடுவது கல்லூரிகளில் படித்த நாட்களை.

பட்ட மேற்படிப்பை முடிக்கவிருந்த தருணத்தில் அந்த இலட்சியம் என்னைச் சிக்கெனப் பற்றிக்கொண்டது.

கலப்பு மணம்! “என் ஜாதிப் பெண்ணின் கழுத்தில் கனவிலும் தாலி கட்ட மாட்டேன்” என்று என்னைச் சபதம் மேற்கொள்ள வைத்தது இந்த இலட்சியம்தான்.

இப்படியொரு இலட்சியத்தை நான் சுமப்பதற்குக் காரணமாக இருந்தவர் எங்கள் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகர்.

இரண்டாம் ஆண்டின் இறுதி வேலை நாளில் நடைபெற்ற ‘பிரியா விடை’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர்தான் இப்படியொரு இலட்சிய நெருப்பை, நான் உட்படப் பல மாணவர்களின் அடிமனதில் பற்ற வைத்தார்.

“சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் பீடைகளில் சாதி வேறுபாடு மிக முக்கியமானது. அதை வேரோடு பிடுங்கி அழிக்கவேண்டுமென்றால் கலப்பு மணங்கள் பெருக வேண்டும். உங்களில் எத்தனை பேர் கலப்பு மணம் புரியப் போகிறீர்கள்? அந்த உயர்ந்த நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் எழுந்து நின்று மனம் திறக்கலாம்” என்று சொல்லி அமர்ந்தபோது மாணவர்கள் பலர் வீறுகொண்டு எழுந்து நெஞ்சு நிமிர்த்திச் சபதம் ஏற்றார்கள். அந்த ‘லட்சிய புருஷர்’களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

முதல்வர் மேடையிலிருந்து இறங்கி வந்து ஒவ்வொருவராகக் கை குலுக்க, மாணவிகள் [அவர்களில் யாரும் சபதம் ஏற்கவில்லை] கரவொலி எழுப்ப, அரங்கில் உற்சாகம் கரை புரண்டது.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் சக மாணவன் குணசீலனின் பேச்சால் கரை புரண்ட உற்சாகம் காற்றோடு கலந்து மறைய, இனம் புரியாத சோகம் பரவியது.

அவன் சொன்னான்: “எனக்கும் கலப்பு மணம் புரிய ஆசைதான். ஆனால்.....” என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி, எல்லோருடைய முகங்களிலும் கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கவனித்துத் தொடர்ந்தான்.......

“நான் ச.......ஜாதியில் பிறந்தவன். என் ஜாதியைக் காட்டிலும் அந்தஸ்து குறைந்த ஜாதி இந்த நாட்டில் இல்லை.  தாழ்த்தப்பட்ட மற்ற ஜாதிக்காரர்கள்கூட எங்களை  மதிப்பதில்லை. மண உறவும் வைத்துக்கொள்வதில்லை. நான் கலப்பு மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால் அது நிறைவேறுமா?”

முதல்வர் உட்பட அங்கிருந்தவர்களில் எவருக்குமே இதற்கான பதில் தெரிந்திருக்கவில்லை.

அனைவரும் சோகம் சுமந்து பிரியா விடை பெற்றோம்.

படிப்பு முடிந்து சொந்த ஊர் போய்ச் சேர்ந்தபோதே, நான் ஏற்றிருந்த ‘கலப்பு மண’ லட்சியம் என் அடிமனதின் எங்கோ ஒரு மூலையில் பதுங்கிவிட்டது. காரணம்.........

என் கல்யாண விசயத்தில் என் அப்பா போட்ட 'வெடிகுண்டு'.

“இதோ பாருடா பரமு, நிலத்தை அடமாணம் வெச்சுக் கடன் வாங்கித்தான் உன்னைப் படிக்க வெச்சேன். சீக்கிரம் ஒரு வேலையைத் தேடிட்டு இந்தக் கடனை அடைக்கிற வழியைப் பாரு. நிலத்தை மீட்ட அப்புறம்தான் உனக்குக் கல்யாணம் காட்சியெல்லாம்.”

இதற்கப்புறமும் கலப்பு மணக் கனவைச் சுமந்து திரிவது சாத்தியப்படுமா என்ன?

கல்லூரியில் காலடி வைத்தபோதே, ‘காதலித்துக் கல்யாணம் பண்ணுவது’ என்று ஒரு  இலட்சியத்தை ஏற்று, கால வெள்ளத்தில் அதைக் கரைந்து போக விட்டவன் நான்.

கணக்கு வழக்கில்லாமல் காதல் கவிதை படித்ததுண்டு. கதைகளும்தான். எழுதியுமிருக்கிறேன்.

காதலிப்பது என்று கோதாவில் இறங்கியபோது அந்தக் கவிதைகளும் கதைகளும் எனக்குக் கை கொடுக்கவில்லை.

நான் ஆசைப்பட்ட அழகுப் பெண்களுடன் நெருங்கிப் பழக முற்பட்ட போதெல்லாம், அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் என் பார்வை படர, என் உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர காதல் அரும்பியதே இல்லை.

அது தனிக்கதை. இப்போது வேண்டாம். கலப்பு மண லட்சியம் காணாமல் போன கதையை மட்டும் இப்போது சொல்லி முடித்துவிடுகிறேன்.

இரண்டு மாத கடின முயற்சியின் பலனாகக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். இரண்டு மாத ஊதியம் வாங்கியவுடனே அடிமனத்தில் பதுங்கியிருந்த கலப்பு மண லட்சியம், வெண்ணிற ஆடைத் தேவதையாய் என்னைச் சுற்றிவர ஆரம்பித்தது.

அப்பாவுக்குத் தெரியாமல், ஒரு தரகரைச் சந்தித்து என் இலட்சியத்தை எடுத்துரைத்தேன்.

”முடிச்சுடலாம்” என்றவர், சில கேள்விகளை முன் வைத்தார்.

“பொண்ணு ரொம்ப அழகா இருக்கணுமா, இல்ல ‘தேவலாம்’ போதுமா?”

“வேறு ஜாதின்னா..... தாழ்த்தப்பட்ட வகுப்பா இருந்தாலும் பரவாயில்லையா?”

“வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணுமா, வேண்டாமா?”

எனக்குள், இலட்சியம் இருந்த இடத்தை இப்போது குழப்பம் கைப்பற்றியது.

“யோசித்துச் சொல்வதாகத் தரகரை அனுப்பி வைத்தேன்.

அப்புறமென்ன, கல்லூரியில் பாடம் நடத்திய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் இதே சிந்தனைதான்.

சபதம் போட்ட சக மாணவர்களில் எத்தனை பேருக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்? எல்லாமே கலப்பு மணமாக இருக்குமா? என்ற கேள்விகளும் அவ்வப்போது தலை காட்டின. குணசீலனை நினைத்தும் மனம் வருத்தப்பட்டது.

மாதங்கள் கரைந்துகொண்டிருந்தன.

ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலைப் பொழுதில் தந்தை அழைத்தார்.

“பரமு, உனக்காக நான் பட்ட கடனை நீ அடைக்க வேண்டியதில்லை. அதுக்கு ஒரு வழி பிறந்துடிச்சி” என்று செல்லமாக என் முதுகில் தட்டினார்; சொன்னார்:

“பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பா. நமக்குத் தூரத்துச் சொந்தம். நீ மறுத்துப் பேச மாட்டேங்கிற நம்பிக்கையில் வாக்குறுதி குடுத்துட்டேன். வர்ற தையில் கல்யாணம். பொண்ணு அம்பது பவுன் நகையோட, அம்பதாயிரம் பொட்டிப் பணத்தோட நம்ம வீட்டு வாசல்படி மிதிக்கப் போறா. உன் எதிர்கால மாமனார் போன வாரமே உனக்காக ஒரு புல்லட் பைக் புக் பண்ணிட்டார். சந்தோசம்தானே?”

நான் ஒரு வாரம்போல மனத்தளவில் துக்கம் அனுஷ்டித்தது என்னவோ உண்மை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதைத் தேற்றிக்கொண்டேன்.

அடுத்த பிறவியில் என் கலப்பு மண இலட்சியத்தை நிறைவேற்றுவதாகச் சபதம் செய்துகொண்டேன். [சிரிக்கிறீங்கதானே? வேண்டாங்க. கடவுள் நமக்குப் பல பிறவிகளைக் கொடுத்தது வேறு எதுக்கும் இல்லீங்க. இந்த மாதிரி நிறைவேறாத இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளத்தான்].

அப்புறம்?

அப்புறமென்ன, ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் [அந்தக் காலத்தில் இதுக்கு இருந்த மவுசு சொல்லி மாளாதுங்க] புது மனைவியோடு ஒவ்வொரு விடுமுறையிலும் உல்லாசப் பயணம்தான். “உல்லாச உலகம் எனக்கே சொந்தம்னு” அப்போ அடிக்கடி முணுமுணுத்த பாடலை இப்பவும் முணுமுணுக்கிறேன்னா பாருங்களேன்.........

இங்கே ஒரு குறுக்கீடு..........

“ஏய்யா, ‘காணாமல் போன இலட்சியம்’னு தலைப்பே கொடுத்திட்டியே. அப்புறம் எதுக்கு இந்த வழவழா கொழகொழா கதை?"ன்னு நீங்க இப்போ கோப்படுறீங்கதானே?

கொஞ்சம் பொறுங்க. நான் சொல்ல வந்ததைக் கடைசியா சொல்லி முடிச்சிடுறேன். அதைச் சொல்லத்தான் நீட்டி முழக்கிய இந்த என் இலட்சியக் கதை.

ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில், என் இளம் இல்லக் கிழத்தியோடு ஏற்காடு மலையைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன்.

முதலில் லேடீஸ் சீட் போனோம். அங்கேதான் எதிர்பாராம குணசீலனை அவன் மனைவியுடன் சந்தித்தேன். கை குலுக்கிக் கொண்டோம்.

அவன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘உன் இலட்சியம் நிறைவேறிடிச்சிதானே?”

என்ன சொல்வது?

அசடு வழிய, “தோத்துட்டேன்” என்றேன்.

“அன்னிக்கே சொன்னேன் இல்லையா? எனக்கும் தோல்விதான். இவள் என் ஜாதிக்காரிதான்” என்றபடி தன் மனைவியைத் தொட்டுக்காட்டிச் சிரித்தான்.

படிப்பை முடித்த பிறகு ஏற்பட்ட அனுபவங்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டிருந்தபோது அதைக் கவனித்தேன்.

அவன் மனைவிக்கு ஒரு கால் ஊனம்.

“குணசீலன், நீ ஜெயிச்சுட்டே” என்றேன்.

முதலில் ஏதும் புரியாமல் விழித்தாலும் என் பாராட்டுக்கான காரணம் புரிந்தபோது, “இது இல்லேன்னா அது. அது இல்லேன்னா இது. வாழ்க்கையில் இலட்சியங்களுக்கா பஞ்சம்?” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தான்; விழிகளில் அன்பு பொங்க ஊனமுற்ற தன் துணைவியின் தோள்களை வருடிக் கொடுத்தான். இப்போது...........

என்னைவிடச் சற்றே உயரம் குறைந்த அவன், நான் அண்ணாந்து பார்க்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருந்தான்.

பிரிய வேண்டிய கட்டம் வந்ததும் இரு கரம் குவித்து வணக்கம் சொன்னேன்.

அது வெறும் சம்பிரதாயமான வணக்கம் அல்ல; லட்சியப் பிடிப்புள்ள ஓர் உன்னத மனிதனுக்கு நான் செலுத்திய மரியாதையின் வெளிப்பாடு.

000000000000000000000000000000000000000000000000






















வெள்ளி, 14 மார்ச், 2014

ஐன்ஸ்டீன் ‘முளை’யை மிஞ்சிய பெரிய சைஸ் ‘மூளை’ப் பெண்மணி!



ஐன்ஸ்டீன் மூளை ஆர்டினரி மூளையைவிடக் கொஞ்சம் பெரிய சைஸில் இருந்ததாமே? மெய்யாலுமா? இக்கேள்வி, 10.08.2003தேதியிட்ட விகடன் ‘ஹாய் மதன்’ பகுதியில் கேட்கப்பட்டது. அதற்கு ‘மதன்’ அளித்த சுவையான பதில் கீழே...........

ஐன்ஸ்டீன் மூளை சற்றுப் பெருசு என்பது உண்மையே. ஆனால், அவர் ஐன்ஸ்டீன் ஆவதற்கு அது காரணமில்லை.

தன் மூளையைத் தனியே எடுத்துச் சோதிக்க வேண்டும் என்று ஐன்ஸ்டீனே விருப்பப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. ஆனால், உயிலில் அப்படி அவர் எதையும் எழுதி வைக்கவில்லை.

அவர் மகன் கேட்டுக்கொண்டதால், ஐன்ஸ்டீன் இறந்த பிறகு, அவர் உடலைச் சோதித்த டாக்டர் தாமஸ் ஹார்வே, ஐன்ஸ்டீன் மூளையை ஒரு ஜாடியில் எடுத்து வைத்தார். இது நடந்தது 1955 ஆம் ஆண்டில்.

அப்புறம் முப்பது வருங்களுக்கு ஐ.மூளை ஜாடியிலேயே தேமேயென்று இருந்தது.

1985இல் ஒருவழியாக ஆராய்ச்சியை ஆரம்பித்தார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ந்தது சைஸை அல்ல; கனெக்ஸன்களை.

மனித மூளையின் சராசரி எடை சுமார் மூன்று பவுண்டு [சுமார் 1350 கிராம்ஸ்]. அதற்குள்ளே ஆயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. செய்திப் பரிமாற்றம் செய்யும் குதிரைகள் அவை.

அந்தக் குதிரைகளை இயக்கும் செல்கள் ஐன்ஸ்டீன் மூளையில் ரொம்ப அதிகமாக இருந்தன. அதாவது, மற்ற மூளைகளைவிட இன்னும் நிறைய நியூரான் குதிரைகள் அவர் தலைக்குள் இயங்கின.

உலகப் புகழ் பெற்ற கணித மேதை கே. எஃப்.காஸ் மூளை சராசரி [’டல்’லடிக்கிற] மனித மூளை சைஸ்தான்.

கணவன் உட்பட, பலரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த வெறி பிடித்த  [குறைந்த IQ கொண்ட] ஒரு பெண்ணைத் தூக்கிலிட்ட பிறகு அவளுடைய மூளை சைஸ் 1565 கிராம்ஸ் என்று தெரிய வந்தது. அதிக எடையைப் பொருத்தவரை இது கின்னஸ் ரெக்கார்டு!

************************************************************************************* 
[இப்பதிவு வெளியாவதற்குச் சற்று முன்னர் எழுதி வெளியிட்ட, //நடிகர் சத்தியராஜின் ‘தேர்தல் நேரச் சிந்தனைகள்’//[கிளிக்] என்ற பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படவில்லை. திரை மணம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அதையும் வாசிக்குமாறு வேண்டுகிறேன்.]

************************************************************************************

நடிகர் சத்தியராஜின் ‘தேர்தல் நேரச் சிந்தனைகள்’!!!

2004 ஆம் ஆண்டில், நடிகர் சத்தியராஜ் ஆனந்த விகடனுக்கு [01.08.2004] அளித்த ஓர் அதிரடிப் பேட்டி இது. சற்றேனும் பயன் தரும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் நடைபெறவுள்ள இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறேன்.


கேள்வி:
இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் ஓ.கே-வா?

பதில் [சத்தியராஜ்]:
காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க-னு பல கட்சிகள் மாறிமாறி ஆண்டு பார்த்தாச்சு. என்னத்தைக் கண்டோம்? இந்தியா முழுக்கக் கம்யூனிஸ்டுகள் கையில் கொடுத்துப் பார்த்தா என்னன்னு ஆசையா இருக்கு. இங்கே, சொத்து எல்லாம் குறிப்பிட்ட சிலரிடமே குவிஞ்சி கிடக்குது. எனக்கே தேவைக்கு அதிகமா சொத்து இருக்கு. இந்த நல்ல யோசனையை ஒரு பணக்காரனா இருந்துகிட்டே நான் சொல்றேன்.


கேள்வி:
அரசியலில் உங்களுக்கு யார் ‘ரோல் மாடல்’?

பதில்:
தமிழர்களின் அடையாளமான தந்தை பெரியார்தான். அவரைவிடப் பெரிய சிந்தனைவாதி யாருமில்லை. மேலும் என்னைக் கவர்ந்தவர் சிங்கப்பூரோட முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ. அவருக்கு முன்னாடி இருந்த சிங்கப்பூர் வேறு. பின்னாடி இருக்கிற சிங்கப்பூர் வேறு. நாட்டுக்கு நல்ல தலைமை இருந்தா ஒரு நாட்டை எப்படி வேண்டுமானாலும் மாத்தலாம். சிங்கப்பூரில் ஒன்னுமே கிடையாது. அது ஒரு குட்டித் தீவு. ‘எதை வெச்சி முன்னுக்கு வரலாம்?’னு யோசிச்சி, ‘வியாபாரச் சந்தையா மாத்தலாமே’ன்னு அவர்தான் முடிவு பண்ணினார். நமக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பாங்களான்னு தெரியல.


கேள்வி:
நடிகர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா?

பதில்:
இது தானா வர்றது. நாங்க மகான்களோ, பெரிய மேதைகளோ, தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி பெரிய விஞ்ஞானிகளோ கிடையாது. எங்க படம் பிடிச்சதுன்னா ஒரு தடவைக்கு நாலு தடவை பாருங்க. நடிகன்ங்கிற நிலையைத் தாண்டி யாராவது ஒருத்தர் அதி மேதாவியாத் தெரிஞ்சா, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல்வாதியாத் தெரிஞ்சா ஏத்துக்குங்க. ஆனா, அவ்வளவு உங்களுக்கு நாங்க சிரமம் வைக்கிறதில்லையே [சிரிக்கிறார்]. உண்மையைச் சொல்லணும்னா, நடிகர் என்ற லெவலுக்கு மேலே எங்களை நீங்க யாரும் மதிக்க வேண்டியதில்லை.


கேள்வி:
குட்டிச் சாமியார் [அப்போது பிரபலமாக இருந்த ஒரு பொடிச் சாமியார்] விஷயம் பரபரப்பாகிட்டிருக்கு.....பார்த்தீங்களா?

பதில்:
எல்லாச் சாமியார்களும் காமெடியன்கள்தான் [அரசியல் தொடர்பும் வைத்திருக்கிறார்கள்]. அவர்களில் குட்டிச் சாமியார் பெரிய காமெடியன். கடவுள் நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது. ஆனா, சாமியார்கள் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுதுன்னா என்ன அர்த்தம்? கடவுளை நம்பாமல் மக்கள் சாமியார்களை நம்புறாங்க. அப்படித்தானே? இது முட்டாள்தனம் இல்லையா? ஏதாவது ஒரு வடிவில் இந்த முட்டாள்தனம் இருந்துட்டே இருக்கு.


தலைப்புக்குத் தொடர்பற்றவை என்பதால் எஞ்சிய சில கேள்வி- பதில்கள் தவிர்க்கப்பட்டன.

தங்களின் வருகைக்கு மிக்க்க்க்க்க்க்க நன்றி.

##############################################################