செவ்வாய், 25 மார்ச், 2014

முட்டாள் தமிழா, ஜப்பானைப் பாருடா!!!

சற்று முன்னர், இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழில் [25.03.2014] ‘தினம் ஒரு தகவல்’ பகுதியில் வழங்கப்பட்டுள்ள தகவலைப் படித்துப் பிரமித்தேன். தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை என்னை வேதனையில் ஆழ்த்தியது. தந்தித் தகவலை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள்.


தலைப்பு:           ஆங்கிலம் இல்லாத ஜப்பான்

ம் நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள் உலகில் வாழ முடியாது என்பது போல் இங்கு ஆங்கிலம் போதிக்கப்படுகிறது. ஆனால், ஜப்பானில் அனைத்துமே ஜப்பான் மொழியில்தான்.

ஆங்கிலம் இல்லாத நாடுகளில், ‘நோ’, ‘தேங்க்ஸ்’, ‘எஸ்’ என்ற வார்த்தைகளை எப்போதாவது பயன்படுத்துவார்கள். ஆனால், ஜப்பானில் அதுவும் இல்லை. அந்த நாட்டில் ஆங்கில வார்த்தைகளைக் கேட்கவே முடியாது.

ஜப்பானில், அவர்களின் தாய்மொழி மட்டுமே தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி.

அங்கு பேச்சு மட்டுமல்ல, ஹைக்கூ முதல் ஆராய்ச்சி வரை அத்தனைக்கும் தாய்மொழி ஜப்பானைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இது எப்படி சாத்தியம்?

மருத்துவம், தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட ஆங்கில ஆராய்ச்சி நூல்களும், உலக அளவில் வெளிவரும் வார, மாத ஆராய்ச்சி இதழ்களும் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

இவர்களிடம், “ஆங்கிலம் தெரியாமல் எப்படித் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜெயிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினால், “யாருக்கு ஆங்கிலம் அவசியம் தேவைப்படுகிறதோ அவர்கள் மட்டும் அதைக் கற்றுக்கொள்ளலாம். சிலருக்கு ஆங்கிலம் தேவை என்பதற்காக எல்லோருக்கும் அதைக் கட்டாயம் ஆக்கும் பழக்கம் இங்கு இல்லை” என்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரேயொரு ஆங்கில நாளிதழைத் தவிர, பிற அனைத்தும் ஜப்பான் மொழியிலேயே வெளிவருகின்றன. தாய்மொழியிலேயே அனைத்தும் கிடைக்கும்போது கடைக்கோடிக் குடிமகனும் தன் முழுத் திறமையை எளிதாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறான்.

ஜப்பானில் கோயில்களை அரிதாகத்தான் பார்க்க முடியும்.

“நாங்கள் வருடத்துக்கு ஒரு முறை...புது வருடம் பிறக்கும்போதுதான் கோவிலுக்குச் செல்வோம். மற்றபடி, கோவிலுக்குச் சென்று பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பது இல்லை. கடவுள் நம்பிக்கையைவிட எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம்” என்கிறார்கள் ஜப்பானியர்கள்.


நன்றி:      தினத்தந்தி.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜப்பானியரிடமிருந்து தாய்மொழிப் பற்றை நம்மால் கடன் வாங்க முடியுமா?!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++