வியாழன், 20 மார்ச், 2014

'ஓசை...ஓயாத அலைகள்’ -----------வலைப்பதிவரிடம் ஒரு கேள்வி!

மேதகு, ‘ஓசை...ஓயாத அலைகள்’ வலைப்பதிவு உரிமையாளருக்கு,

காமக்கிழத்தனின் அன்பு வணக்கம்.

மார்ச் 20, 2014 தேதியிட்ட, ‘சாதி அரசியல் - வை. கோ.வையும் விட்டு வைக்காத பகுத்தறிவு...’   http://oosssai.blogspot.com/2014/03/blog-post_20.html என்ற தலைப்பிலான உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்தது.

#கற்பே தேவை இல்லை” என்ற பெரியார்தான் சீதை எப்படிக் கற்போடு இருந்திருப்பாள் என்று தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டார்.# என்றிப்படி இடுகையைத் தொடங்கியிருக்கிறீர்கள்.

பெரியாரைத் ‘ - தந்தை பெரியார்’ என்று உங்கள் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டதன் மூலம் [“நான் சொல்வதை அப்படியே நம்பாமல்.....உங்கள் புத்திக்குச் சரியென்று பட்டதை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளிவிடுங்கள் - தந்தை பெரியார் ] அவரை மிக உயர்வாக மதிப்பவர் நீங்கள் என்பதைப் பிரகடணப்படுத்தியிருக்கிறீர்கள்.

அவருடைய அறிவுரையையும் பதிவு செய்து வைத்திருக்கிறீர்கள்.

இதன் மூலம், பெரியாரின் அத்தனை நூல்களையும் கரைத்துக் குடித்ததோடு, அவர் வகுத்த கொள்கைகளை ஏற்று வாழ்பவர் நீங்கள் என்று உங்கள் வாசகரை நம்ப வைத்திருக்கிறீர்கள்.

அப்படி நம்பியவர்களில் நானும் ஒருவன்.

அத்தகையவர் என்று உங்களை நம்பியிருந்த காரணத்தால்.........

#கற்பே தேவை இல்லை” என்ற பெரியார்தான் சீதை எப்படிக் கற்போடு இருந்திருப்பாள் என்று தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டார்.# என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்துப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

உங்கள் எழுத்தின் போக்கை ஊன்றிக் கவனித்தால்.....தன் குடும்பப் பெண்களுக்குக் கற்பு தேவையில்லை என்று அவர்களிடமே பெரியார் சொல்லியிருக்கிறார்’ என்று பரப்புரை செய்வீர்கள் போலிருக்கிறது!!!

கற்பு பற்றிப் பெரியார் என்ன சொல்லியிருக்கிறார்?

 "குடிஅரசு" [8-11-1928] இதழில் பெரியார் எழுதிய ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். [‘சித்திரபுத்திரன்’ என்ற புனை பெயரில் அவர் எழுதியது]

#..........உண்மையாகப் பெண் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இருபிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுதுகொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாயவேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே, இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும், நிர்பந்தக் கற்பையும்தான் காணலாம் அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது...........#

பெரியாரின் ‘கற்பு’ குறித்த கருத்து இவ்வாறு இருக்கையில், இதை இருட்டடிப்புச் செய்துவிட்டு, அவர் கற்பே தேவையில்லை என்கிறார் என்பதாக நீங்கள் குறிப்பிடுவதன் உண்மை நோக்கம் என்ன?

பெரியாரை இழிவு படுத்துவதுதானே?

‘பெரியார் தீய ஒழுக்கத்தைப் போதித்த ஓர் அயோக்கியன்’ என்பது போன்ற எண்ணத்தை இன்றைய மக்கள் மனங்களில் பதியச் செய்வதுதானே?

உங்களுடைய இந்தச் செயல் எந்த வகை ஒழுக்கத்தைச் சார்ந்தது?

பெரியாரைப் போற்றுவதாகப் பாசாங்கு செய்து, அவரைப் பழி வாங்கும் ‘இழிகுணம்’ அல்லவா இது?

உங்கள் சுய உருவம் என்ன என்பதை வெளிப்படுத்தாமல், பெரியாரின் மனம் போலவே வெளுத்த, தூய்மையான வெண்ணிறத் தாடியின் பின்னால் ஒளிந்துகொண்டு, அவரின் புகழுக்கு மாசு விளைவிக்கும் இழி செயலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்களே, இது ஏன்?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$