தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jul 22, 2016

நடிகர் ரஜினிகாந்த் கடவுளானார்!!! கோயில் கட்டிக் குடமுழுக்குச் செய்வது எப்போது?

நேற்றைக்கு முந்தைய[20.07.2016] நாள் பதிவில்,  ‘ரஜினியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தேன். 

என்ன ஆச்சரியம்! இப்போதே அவர் கடவுள் ஆக்கப்பட்டுவிட்டார்!
நன்றி: கூகிள்
இன்று[22.07.2016] காலையில், ‘கபாலி’ திரைப்படம் வெளியான பல்வேறு திரையரங்குகளின் முன்னால் ஸ்டைல் நடிகரின் ரசிகர்கள், கூட்டம் கூட்டமாய்ப் பட்டாசு வெடித்துக் கொட்டம் அடிப்பதையும், ‘கும்பம்’ ஏந்தி நிற்கும் பரவசக் கோ[அவ]லங்களையும் காட்சிப்படுத்திக் கலைச்சேவை செய்துகொண்டிருந்தன தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்கள்.

நடிகரின் வகை வகையான வண்ண விளம்பரப் படங்களுக்கி்டையே, ‘கபாலீஸ்வரரே வருக!’ என்று, அவரைக் கடவுளாக்கி வரவேற்கும் படங்களையும் காண முடிந்தது[‘பாலிமர்’ தொ.க. செய்தியில்]. [நாளைய தினசரிகளில் கலியுகக் கபாலீஸ்வரர் காட்சி தருவார் என்று நம்புகிறேன்].

கடவுள் நம்பிக்கை இல்லாத என் ஒட்டுமொத்த சதைப் பிண்டமும் சில கணங்கள் சிலிர்த்து அடங்கியது.

அடுத்த கணமே, என் நாவிலிருந்து அருவியெனப் பெருகி வழியலாயிற்று ஒரு ‘போற்றி’க் கவிதை! அது.....

போற்றி போற்றி ரஜினி போற்றி

கலியுகக் கபாலீஸ்வரக் கடவுள் போற்றி 

போற்றி அன்னார் திருநாமம் போற்றி

போற்றி அவர்தம் திருவடி போற்றி

போற்றாத கயவர் நரகம் எய்துவர்

போற்றி வாழ்வோர் புண்ணியம் சேர்ப்பர்

மாந்தர் வாழ்ந்திட பிறஉயிரினம் வாழ்ந்திட

மக்கள் கடவுளாம் ரஜினி போற்றி!
********************************************************************************************************************