வெள்ளி, 8 ஜூலை, 2016

இது என்ன மூடர்களின் தேசமா!?

“மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் என்பது மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. -இப்படிப் பேசியிருப்பவர் கர்நாடக சட்ட மேலவை பாஜக தலைவர்[தலைவர்தான்!!!] ஈஸ்வரப்பா. 
காலங்காலமாக, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றின் தூண்டுதலால் அப்பாவிக் குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். ஏழைகளுக்கும் பாமர மக்களுக்கும் ஏராளமான பொருள் இழப்பு ஏற்படுகிறது....

.....மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் போராட்டத்தில் அறிவுஜீவிகளும் பொதுநல ஆர்வலர்களும் தாக்கப்படுகிறார்கள். இதைக் கண்டிக்க வேண்டிய ஊடகங்கள், மூடநம்பிக்கையை வளர்க்கும் ராசிபலனுக்கும், சனிப்பெயர்ச்சிக்கும், ஜோதிடத்துக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன. 

எனவே, மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் வகையில்,  ‘மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்’[கடந்தமுறை நிறுத்திவைக்கப்பட்டது] தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்[இன்றைய நாளிதழ்ச் செய்தி].

சித்தராமையாவின் இந்த அறிவிப்புத்தான் ஈஸ்வரப்பாவின் மேற்கண்ட கூற்றுக்குக் காரணமாக அமைந்தது.

பொது மக்களின் நம்பிக்கைகளில் தலையிட சித்தராமையாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மத நம்பிக்கைகளில் தலையிடுகிறார். அவர் நிறைவேற்ற நினைக்கும் இந்தச் சட்டத்தை பாஜக எதிர்க்கும்; சட்ட மேலவையில் அந்த மசோதாவைத் தோல்வியுறச் செய்வோம் என்றெல்லாம் குமுறியிருக்கிறார் ஈஸ்வரப்பா. இது, பாஜக அனுதாபிகளையே முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

இவருடைய இந்த ஆவேசப்  பேச்சு பிரதமர் மோடியின் கவனத்திற்குச் செல்லும்தானே?

மோடி என்ன செய்யப்போகிறார்?

ஈஸ்வரப்பாவைக் கண்டிப்பாரா? 

கண்டித்தால்...அவரின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தால் அறிவுஜீவிகளும் மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பாடுபடுவோரும்  அவரைப் போற்றுவார்கள்.

ஈஸ்வரப்பாவை அரவணைத்து, அவரின் மூடநம்பிக்கைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவாரேயானால்.....

‘புண்ணிய பூமி’ என்று போற்றப்படும் இந்த இந்தியத் திருநாடு, ‘மூடர் தேசம்’ என்று எள்ளி நகையாடப்படும்.

நம் பிரதமர் யோசிப்பாரா?
===============================================================================
மன்னிப்பு வேண்டல்:
‘பாஜக’, தமிழ்மணம் இணைப்புப் பட்டியலில், ‘பஜக’ என்றுள்ளது. பிழை பொறுத்தருள்க.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக