'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Wednesday, July 20, 2016

விமானத்தில் பறக்கும் தமிழனின் தன்மானம்!

நடிகர் ரஜினியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! இதைச் செய்ய இருப்பவன் தமிழன்...தமிழன் மட்டுமே!

மேற்கண்ட ‘சத்திய வாக்கு[!!!]’ என் நாவில் ஜனிக்கக் காரணமாக அமைந்தது பின்வரும் இன்றைய நாளிதழ்[தி இந்து, 20.07.2016]ச் செய்தி.
‘ஒரு படத்துக்காகச் சிறப்பு விமானம் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறது ‘தி இந்து’.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து, விமானத்தில் பறந்து சென்று, படம் திரையிடப்படும் முதல் நாளிலேயே பார்த்திட வேண்டுமா? அந்த அளவுக்குச் சமுதாயத்தைச் சீர்திருத்தவல்ல, அல்லது மக்கள் மனங்களைப் பண்படுத்தக்கூடிய  ஒப்புயர்வற்ற அற்புதப் படைப்பா இது? என் களிமண் மண்டைக்குப் புரியவில்லை! 

படம் வெளியாவதற்கு முன்னரே அதன் தரத்தை மதிப்பிட்டது எப்படி? இதுதான் தமிழனின் தனித்தன்மையோ? ‘முன்னுணர்தல்’ திறனோ?

22ஆம் தேதி வெளியாகும் ரஜினியின் இப்படத்தைக் காண்பதற்காக, ரஜினி ரசிகர்களைச் சிறப்பு விமானத்தின் மூலம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு அழைத்துவரும் அரும்பெரும் பணியைச் செய்வது ‘ஏர் ஏசியா’ நிறுவனமாம்.  

குறிப்பிட்ட ஒரு நடிகரின்  படத்தைப் பார்ப்பதற்காக, விமானம் இயக்கப்பட்டது  போல ரயில்களும் பேருந்துகளும் இதற்கு முன்னர் இயக்கப்பட்டிருக்கின்றனவா? பதில் எதுவாயினும், ‘கபாலி’ வெளியாகாத ஊர்களுக்கெல்லாம் அவற்றை இயக்குவது குறித்து நடுவணரசும் தமிழ்நாடு அரசும் யோசிக்கலாம்தானே?

ஏனெனில், ‘கபாலி வெறும் சினிமா மட்டுமல்ல; தமிழனின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடவிருக்கும் ஒரு புரட்சிப் படைப்பு’ என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

‘தானுண்டு; தன் குடும்பம் உண்டு’ என்றிருப்பதோடு, சமூகப் பணியிலிருந்து ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு தனி மனிதனை...நடிகனைத் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவனாக்கியே தீருவது என்று சபதம் மேற்கொண்டிருக்கிற தமிழனைப் போல் தன்மானம் அற்ற இனம் வேறு இல்லை இந்த மேதினியில்!

பிற இனத்தவருக்கு அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்ட இனம் இது. இன்னும் பற்பல நூற்றாண்டுகளுக்கு இவனின் அடிமை வாழ்வு தொடரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை!
===============================================================================No comments :

Post a Comment