தேடல்!


Jul 6, 2016

‘மாதொருபாகன்’[நாவல்] வழக்குகளுக்கான தீர்ப்பு...சில சந்தேகங்கள்!

இப்பதிவின் நோக்கம் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது அல்ல ; அது தொடர்பான எம் ஐயப்பாடுகளைப் பொதுவில் வைப்பது மட்டுமே. 
2015 ஆம் ஆண்டில் கடும் விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கு உள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனின், ‘மாதொருபாகன்’ என்னும் நாவல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் 05.07.2016 அன்று வழங்கியுள்ளார்கள்.

‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை இல்லை. பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன’ என்பவை தீர்ப்பின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

தீர்ப்பு குறித்து விமர்சிப்பதோ, நீதிமன்றத்தை அவமதிப்பதோ நம் நோக்கம் அல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஆனாலும், அதில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் குறித்த ஐயங்களை  முன்வைப்பது தவறில்லை என்பது எம் நம்பிக்கை.

சந்தேகம் ஒன்று:
‘சமுதாயத்தில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர்[பெருமாள் முருகன்] தனது நாவலில் பிரதிபலித்துள்ளார்’ என்பது தீர்ப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

இங்கே கலாச்சாரம் என்பது, திருச்செங்கோடு வட்டாரத்தைச் சார்ந்த குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு உரியதாகும். விளங்கச் சொன்னால்.....

குழந்தைப் பேறு இல்லாத ‘அந்த’ச் சாதிப் பெண்கள், தேர்த்திருவிழாவின்போது அறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் சேர்க்கை செய்து அப்பேற்றைப் பெறுவதாகும்.

இந்தக் கலாச்சாரம் வழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரம் எதையும் ஆசிரியர் தன் நாவலில் தரவில்லை என்பது நாவலை வாசித்த அனைவரும் அறிந்த ஒன்றாகும். உண்மை இதுவாக இருக்கையில், ‘சமுதாயத்தில் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் கலாச்சாரத்தைத்தான் ஆசிரியர்[பெருமாள் முருகன்] தனது நாவலில் பிரதிபலித்துள்ளார்’ என்று நீதிபதிகள் சொல்லியுள்ளார்கள். ஆதாரம் இல்லாமலா சொல்வார்கள்?

வழக்கு விசாரணையின்போது, நாவலாசிரியர் அந்த ஆதாரங்களை நீதிபதிகளிடம் ஒப்படைத்திருப்பார்தானே?

சந்தேகம் இரண்டு:
‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஆனால், நீ சொல்வதுதான் சரியென வாதிட்டால் அதற்காக எதிர்த்துப் போராடிச் சாகவும் தயங்கமாட்டேன்’ என்ற தத்துவஞானி வால்ட்டரின் வார்த்தைகளை நீதியரசர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இது ஓர் உணர்ச்சி மயமான சொல்லாடல். நீதிபதிகள் கையாளலாமா என்ற கேள்வி நம் போன்றவர்களுக்கு எழுவது இயல்பு. அது தவறு என்பது முழுத் தீர்ப்பையும் படித்தால் புரியும்தானே?

சந்தேகம் மூன்று:
‘தற்போது காலங்கள் மாறுகின்றன. முன்பு எது ஏற்கப்படவில்லையோ அதுதான் பின்னாளில் ஏற்கப்படுகிறது’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அது நடைமுறையாக இருக்கலாம். நடைமுறை சட்டம் ஆகுமா என்பது சட்ட அறிவு இல்லாத எம் போன்றவர்களுக்குப் புரியாதுதானே?

சந்தேகம் நான்கு:
‘ஒரு நாவலைப் படிக்க வேண்டுமா வேண்டாமா என்பது அதைப் படிக்கும் வாசிப்பாளரின் விருப்பம். பிடித்தால் படிக்கட்டும். இல்லையெனில் அதைத் தூக்கி எறியட்டும்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வெறுமனே பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிடலாம்தான். பிரச்சினை இல்லை. ஒரு நாவல் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தவரின் மனங்களைக் குத்திக் குத்தி ரணமாக்கினாலும்.....

‘சும்மா இருப்பதே சுகம்’ என்று அந்த மக்கள் நினைக்க வேண்டும். இனியேனும் நினைப்பார்களா?

சந்தேகம் ஐந்து:
‘ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதைச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது’ - இதுவும் நீதியரசர்கள் சொன்னதுதான்.

பெரும்பான்மை மக்களின்  எண்ணங்கள்தான் பின்னர் சட்டங்களாக வடிவெடுக்கின்றன எனினும், ஒரு சட்டம்  இயற்றப்படும்வரை அவர்கள் அந்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களே என்று நீதிபதிகள் கருதியிருப்பார்கள். சரிதானே?
***********************************************************************************************************************
‘தி இந்து’[06.07.2016] நாளிதழில் வெளியான சம்பந்தப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இப்பதிவு.