ஞாயிறு, 10 மே, 2015

சொர்க்கம் இங்கே...இங்கே...இங்கே!

அவர்களுக்கு அது முதலிரவு.

அறைக் கதவு தாளிடப்பட்டு அரை மணி நேரம் ஆகியும் அவனும் அவளும் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை!

அவன் கத்தியால் ஆப்பிளைக் கீறிக்கொண்டிருந்தான். அவள் ஜடைப்பின்னலால் உள்ளங்கையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.
“ஏன் இந்தத் திரை? ஏதாவது சொல்லு” என்றான் அவன்.

“நீங்க சொல்லுங்க” என்றாள் அவள்.

“அதான், சொல்லுன்னு சொல்லிட்டேனே” கண் சிமிட்டிச் சிரித்தான் அவன்.

அவள் சொன்னாள்: “இன்னிக்கி அது வேண்டாங்க.”

“பயமா இருக்கா?”

“ம்ம்ம்...ஊகூம்.”

“மூடு இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்ல.”

“பின்னே...?”

“அது வந்து...வந்து...” ஏதோ ஒருவிதத் தயக்கம் தொண்டைக்குழி வாசலில் வார்த்தைகளை வழி மறித்தது.

“சும்மா சொல்லு.” தைரியம் சொல்லி, அவளின் கன்னக் கதுப்பில் ஓர் ஆப்பிளை உருட்டி அழகு பார்த்தான் அவன்.

அரை நிமிட யோசனைக்குப் பின்னர் அவள் சொன்னாள்: “என் ஜாதகத்தில் தோஷம் இருக்கு. வரன் அமையவே இல்ல. பொய் ஜாதகம் தயார்ப் பண்ணி என் அப்பா உங்களை ஏமாத்திட்டார். என்னால தடுக்க முடியல.”

அவன் ஒரு 'குபீர்'ச் சிரிப்பைப் பிரசவித்தான். ஆப்பிளை அவளின் மார்பகப் பிளவில் உரசுவதுபோல் போக்குக் காட்டிவிட்டுச் சிரித்தான்;

“ஏன் சிரிக்கிறீங்க?”

“என் ஜாதகமும் போலிதான்.”

“உங்க ஜாதகத்திலும் தோஷமா?”

“எனக்கு ஜாதகமே இல்ல. பெத்தவங்க எழுதி வைக்கல. ஜாதகம் இல்லேன்னா, எனக்குப் பெருசா ஏதோ குறை இருக்குன்னு பெண் வீட்டார் சந்தேகப்படுவாங்களே. அதனாலதான் இந்தப் பித்தலாட்டம். இதைச் சொல்லத்தான் நானும் தயங்கிட்டிருந்தேன். நீ துணிஞ்சி சொல்லிட்டே. அது சரி, இதுக்கும், அது இப்போ வேண்டாம்னு சொன்னியே, அதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்குங்க. என் மெய்யான ஜாதகத்தில் தோஷம் இருக்கில்லியா? அது உங்களுக்குக் கெடுதல் பண்ணும். அதனால, ஒரு ஜோதிடர் மூலமா பரிகாரம் பண்ணனும். அதுக்கப்புறம்தான் அது.”

“பரிகாரமே இல்லேன்னா?”

“நமக்குள்ள அது எப்பவும்  வேண்டாம். நீங்க இன்னொரு கல்யாணம் செய்துக்குங்க.”

அவன் சிலிர்த்தான். “உண்மையாத்தான் சொல்றியா?” என்றான்.

“சத்தியமாங்க.”

‘ஆகட்டும்’ என்பது போலத் தலையசைத்துவிட்டு, “என் தோஷத்துக்கும் பரிகாரம் பண்ணனும்” என்றான் அவன்.

“உங்களுக்குத்தான் ஜாதகமே இல்லையே?”

“ஜாதகம் எழுதாததால தோஷமே இல்லேன்னு ஆயிடாது. கெட்ட தோஷம் ஏதும் இருந்துட்டா அது உன்னைப் பாதிக்கும்தானே?”

“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. உங்களுக்கு ஒரு கெடுதலும் வராம இருந்தாப் போதும்.”

நெகிழ்ந்து இளகினான் அவன்; கண்கள் கலங்கச் சொன்னான்: “எத்தனை நல்ல மனசு உனக்கு. இந்த மனசு எவ்வளவு பெரிய தோஷத்தையும் அண்டவிடாம, கவசமா என்னைப் பாதுகாக்கும். பரிகாரம் எதுவும் தேவையில்ல.”

சொல்லிக்கொண்டே அவளின் தோளைத் தொட்டான்; கேசம் வருடி வாசம் நுகர்ந்தான்; கண்களா, இரு கன்னங்களா, தேனூறும் இதழ்களா...எங்கே முதல் முத்தம் பதிப்பது என்ற பரிதவிப்புடன் அவளை இறுகத் தழுவித் தன்னிலை இழந்துகொண்டிருந்தான் அவன்.

=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக