'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Sunday, May 24, 2015

சபிக்கப்பட்டவர்களும் சில சாமியார்களும்!

இந்தக் கதையில் ‘செக்ஸ்’ இல்லை; ‘சஸ்பென்ஸ்’ இல்லை; இன்ப முடிவு இல்லை!.....இவையெல்லாம் இல்லாமல் ஒரு கதையா?! ஹி...ஹி...ஹி!!!


மிகுந்த மன வருத்தத்துடன் உரையாடிக்கொண்டிருந்த டாக்டர், “மனம் தளர வேண்டாம். உங்க மகனைத் தினமும் லேசான உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்க. மூச்சுப் பயிற்சி ரொம்ப ரொம்ப முக்கியம். ரத்தக் குழாய்களில் அதிக அளவு பிராண வாயு சேரும்போது ஒட்டு மொத்த உடல் உறுப்பும் பலப்படும்.....

.....மனசுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்கணும்; படங்கள் பார்க்கணும்; இயற்கை அழகை ரசிக்கணும்....

.....பயத்துக்கு இடம் தரவே கூடாது. இருக்கிற கொஞ்சம் வாழ்நாளையும் அது விழுங்கிடும். அளவு கடந்த தன்னம்பிக்கை வேணும்.  ‘நான் வாழ்வேன். நீண்ட நாள் வாழ்வேன்’னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருக்கணும். அப்படிச் சொல்லிட்டு ஆக்ரோஷத்தோட சத்தம் போட்டுக் கத்தினாலும் தப்பில்ல. மன இயல் ரீதியா இந்த முயற்சியில் ஜெயிச்சு உயிர் பிழைச்சவங்க இருக்காங்க” என்று ஆணித்தரமான குரலில் வலியுறுத்தினார் செல்வராசுவிடம்.

டாக்டர், தன்னைத் தேற்றுவதற்காகவே இப்படிச் சொல்கிறார் என்று நினைத்தார் செல்வராசு. அவரின் அறிவுரையைப் புறக்கணித்தார்.

மகனின் உடல்நிலையை விசாரிக்க வந்த சொந்தபந்தங்களிடம், மனம் உடைந்து போய், “எல்லாம் நான் செய்த பாவம்...என் தலைவிதி...என்று ஏதேதோ புலம்பித் தீர்த்தார்.

நண்பர் ஒருவர், கடவுளின் அவதாரம் என்று சொல்லித் திரியும் உலகறிந்த ஓர் ஆன்மிகப் பிரச்சாரகரின் பெயரைச் சொல்லி, “அவரின் அருட்பார்வை பட்டால் தீராத நோய்கூடத் தீர்ந்து போகும். அவர் கரம் பட்டால் போன உயிரும் திரும்பி வரும். உன் மகனை அந்த மகானிடம் அழைச்சிட்டுப் போ” என்றார்.

“அவருடைய ஆசிரமம் ரொம்பத் தொலைவில் இருக்கு. வாடகைக் காரில்தான் போகணும். ரொம்பச் செலவாகும். இருந்த பணமெல்லாம் எற்கனவே செலவு பண்ணிட்டேன்.” குரலில் கனத்த சோகம் பொங்கச் சொன்னார் செல்வராசு.    
“கடன் வாங்கு” என்றார் நண்பர்.

கடனுக்கு அலைந்து, கணிசமான தொகை சேர்ந்ததும், மகனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் செல்வராசு.

உரிய கட்டணம் செலுத்தி, சில நாட்கள் காத்திருந்த பிறகு, அந்த ‘அவதாரி’யைத் தரிசிக்கும் ‘பேறு’ கிடைத்தது.
எட்ட இருந்தே தன் அருட்பார்வையால் அவருக்கும் அவர் மகனுக்கும் அந்த மகான் ஆசி வழங்க, அவரது சீடர் ஒருவர், “இங்கேயே தங்கியிருந்து தியான வகுப்புகளில் கலந்துக்கணும். சுவாமிகளின் ஆன்மிகச் சொற்பொழிவுகளைத் தவறாம கேட்கணும்” என்று நெறிப்படுத்தினார்.

அவர் சொன்னபடியெல்லாம் செய்தார் செல்வராசு. பலன் இல்லை. மகனின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை; பின் இறக்கமே தென்பட்டது.

ஒரு சீடரை அணுகி, “சாமி, என் மகனைத் ’தொட்டு’ ஆசீர்வாதம் பண்ணுவாரா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார். 

"அதுக்குத் தனியா பணம் கட்டணும்.”

கட்டினார் செல்வராசு.

மகனின் முன்னந்தலையைத் தொட்டு, “கடவுள் கருணை காட்டுவார். கவலைப் படாதே” என்று அவதாரம் அருள் வாக்கு நல்கிய போது செல்வராசு மெய்சிலிர்த்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது!

ஆயினும் என்ன, அடுத்த சில நாட்களிலேயே அவர் மகன் மரணத்தைத் தழுவினான்.

கதறி அழுதவாறு, மகானிடம் சொன்னார்: “என் மகன் என்னைத் தவிக்க விட்டுப் போய்ட்டான் சாமி.”

“வருத்தப் படாதே. நல்லதே நடந்திருக்கு. உன் மகனின் பொய்யுடம்புக்குத்தான் அழிவு. அவனுடைய மெய்யுடம்பு ஆன்மாவைச் சுமந்து ஆண்டவனின் திருவடியைச் சென்றடையும். இது எம் தரிசனத்தால் நேர்வது. உன் மகன் கொடுத்துவைத்தவன்” என்றார் அந்த ஆன்மிகச் செம்மல்.

”நன்றி பகவானே.” நெடுஞ்சாண்கிடையாக சாமியாரை விழுந்து கும்பிட்டுவிட்டு, மகனின் சடலத்துடன் ஊர் திரும்பினார் செல்வராசு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments :

Post a Comment