பருவ வயதில் அனைத்துப் பெண்களும் அழகிகளே. இந்தக் கதையின் நாயகி அழகு குறைந்தவாளாகச் சித்திரிக்கப்படுவது 100% கற்பனையே!
அந்தக் கல்லூரி வளாகத்தின் வடக்குத் திசையில், சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த புங்க மரத்தடியில் குப்புசாமி காத்திருந்தான்.
முந்தைய தினம் ரதிரேகாவிடம் தந்த காதல் கடிதத்திற்கு அன்று பதில் கிடைக்கும் என்று நம்பினான். காயா, பழமா? நாணயத்தைச் சுண்டிவிட்டு, பூவா தலையா பார்த்துக்கொண்டிருந்தான் குப்புசாமி.
ரதிரேகா! எவ்வளவு அழகான பெயர்!
அந்தக் கல்லூரியில் படிக்கும் அத்தனை குமரிகளுக்கும் அவரவர் அழகுக்கேற்ப மதிப்பெண் போட்டு, நீண்ட பட்டியல் தயாரித்து, நாள் கணக்கில் யோசித்து இந்த ரதிரேகாவைத் தேர்ந்தெடுத்தான் குப்புசாமி. அவளை நினைத்து உருகுவதாக அட்டகாசமான ஒரு காதல் கடிதம் தீட்டினான்.
அந்தக் கல்லூரியில் படிக்கும் அத்தனை குமரிகளுக்கும் அவரவர் அழகுக்கேற்ப மதிப்பெண் போட்டு, நீண்ட பட்டியல் தயாரித்து, நாள் கணக்கில் யோசித்து இந்த ரதிரேகாவைத் தேர்ந்தெடுத்தான் குப்புசாமி. அவளை நினைத்து உருகுவதாக அட்டகாசமான ஒரு காதல் கடிதம் தீட்டினான்.
ஆய்வுக்கூடத்தில், மற்றவர்கள் தத்தம் கருமமே கண்ணாய் இருந்தபோது, ஓசைப்படாமல் அவள் கையில் கடித்தத்தைத் திணித்து, “நாளை பகலுணவு இடைவேளையில் உனக்காகப் புங்க மரத்தடியில் காத்திருப்பேன்” என்று அவன் கிசுகிசுத்தபோது, அவள் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா! அப்போதே முக்கால் கிணறு தாண்டிவிட்டதாக நினைத்தான் குப்புசாமி.
குப்புசாமி தப்பு வழியில் போகிற பையன் அல்ல; தானுண்டு தன் படிப்புண்டு என்றுதான் இருந்தான். வயதுக் கோளாறு காரணமாகக் கொஞ்ச காலமாய்க் கன்னியரைப் பற்றிய நினைப்புக்கு மனதில் இடம் தந்துவிட்டான்.
அந்த ஆண்டுதான் கல்லூரியில் காலடி வைத்த வேலுச்சாமி, “இருபத்தொரு வயதில் பதினேழு பேருக்குக் காதல் கடிதம் எழுதிட்டேன்; பதினெட்டாவதா ஒருத்திக்கு எழுதப்போறேன்” என்று தம்பட்டம் அடித்தது, குப்புசாமிக்குள் அடங்கிக் கிடந்த காதல் பிசாசை உசுப்பிவிட்டுவிட்டது.
தன் வகுப்புத் தோழி மோகனாவுக்கு மட்டும் முப்பத்தேழு ‘மோக மடல்கள்’ தீட்டிவிட்டதாக முரளிமோகன் பீற்றித் திரிந்தது இவனுக்குள் ‘காதல் பித்தம்’ சுரக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.
கையில் விரித்துப் பிடித்த கடிதமும் கழுத்தில் உயர்த்திவிட்ட காலருமாக, “சரிதா என் காதலை ஏத்துகிட்டா. என்னை உயிருக்குயிரா காதலிக்கிறா” என்று சொல்லிச் சொல்லி செல்வராசு கர்வப்பட்டது, ‘நானும் காதலிக்கப்பட மாட்டேனா?’ என்ற ஏக்கத்தை இவனுக்குள் வளரச் செய்துவிட்டது.
காதல் சுழலில் சிக்கிய நண்பர்களின் கதைப்பும் அளப்பும் இவன் உள்ளத்தில் பெரும் உணர்ச்சிப் போராட்டத்தை உண்டுபண்ணிவிட்டன.
குப்பு தீவிரமாக யோசித்தான். தானும் காதலித்துப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான்; ரதிரேகாவுக்குக் காதல் கடிதம் தந்தான்; புங்க மரத்தடியில் காத்திருந்தான்.
அதோ...தோழியர் குழாமிலிருந்து விடுபட்டுப் புங்க மரத்தைக் குறி வைத்து விரைந்து வந்துகொண்டிருப்பது.....ரதிரேகாவேதான்!
அவளின் ஒரு கையில் படபடத்துக்கொண்டிருக்கும் அந்தக் காகிதம்? இவனுக்கு அவள் தீட்டிய தீஞ்சுவை மடலோ?!
இதோ....குப்புவைத் தொட்டுவிடும் தூரத்தில் ரதிரேகா. குப்புசாமியின் நெஞ்சில் அதீத படபடப்பு! “ரதி...அது வந்து...” என்று ஏதோ சொல்ல முயன்றான்.
அதற்குள், ரதிரேகா தன்னிடமிருந்த கடிதத்தைக்[குப்பு எழுதியதுதான்] கசக்கிச் சுருட்டி, “இந்த மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?” என்று சொல்லி இவன் முகத்தில் அதை வீசி அடித்துவிட்டு, வந்த வேகத்தில் திரும்பிப் போனாள்.
குப்புசாமி லேசான அதிர்ச்சிக்கு ஆளானான். சுதாரித்துக்கொண்டு, சில நொடிகளில் இயல்பு நிலைக்குத் திரும்பினான்.
இவன் முகத்தில் ஏமாற்றம் சிறிதுமில்லை. அங்கு மகிழ்ச்சி முகாமிட்டிருந்தது.
“அடேய் குப்பு, அழகுக்கு மதிப்பெண் போட்டு நீ தயாரித்த பட்டியலில் இந்த ரதிரேகா கடைசி ஆள். ஒரு சோதனை முயற்சியாக இவளைத் தேர்ந்தெடுத்துக் கடிதம் கொடுத்தாய். இவளே உன்னை நிராகரித்துவிட்டாள் என்றால், வேறு எவளும் உன்னைச் சீந்தப் போவதில்லை. இனியும் காதல் கத்தரிக்காய்னு மனசு கிடந்து தவிக்காது. ‘என்னையும் ஒருத்தி காதலிப்பாளோ?’ என்ற எதிர்பார்ப்புக்கு இனி இடமில்லை.....
நிம்மதியாய்ப் படி. உயிரைக் கொடுத்துப் படி. நிறையச் சாதிக்கணும்; சம்பாதிக்கணும்; அப்பா பட்ட கடனை அடைக்கணும்; அம்மாவுக்கு நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாய் வைச்சிக்கணும்; தம்பி தங்கைகளை முன்னுக்குக் கொண்டுவரணும்.....
‘இந்த மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?’ன்னு கேட்டா இல்லையா, இந்த மூஞ்சியை வைச்சிகிட்டு லட்சம் லட்சமாய்ச் சம்பாதிச்சிடு குப்பு. அப்புறம் பாரு, இந்த ரதிரேகா என்ன, உன்னைக் கட்டிக்கத் தேவலோகத்து ரதியே வரிசையில் நிற்பா” என்று சொல்லி, தன்னைதானே உற்சாகப்படுத்தியபின் தரையில் அமர்ந்து புத்தகம் விரித்துப் படிக்கலானான் குப்புசாமி.
*****************************************************************************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக