புதன், 27 மே, 2015

‘அவனா இவன்?’.....அன்று அண்ணா சொன்ன குட்டிக்கதை!

த்தாலி நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியன். அவன் கிறிஸ்து மார்க்கத்தைச் சேர்ந்தவன். உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் பரவ வேண்டும்; ஓவியக்கலை வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம் ஓவியமாக வரைந்தான்.

பலவற்றை ஓவியமாக்கிய பிறகு, ஏசுநாதருடைய அருள் ஒழுகும் கண்கள் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை வரைய வேண்டும் என்னும் ஆவல் ஏற்பட்டது.

பல குழந்தைகளின் முகங்களைப் பார்த்தான். எந்தவொரு குழந்தையின் முகமும் அவனுடைய கற்பனைக்கு ஏற்றபடி அமையவில்லை.

கடைசியாக, ஓர் ஏழையின் வீட்டில் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தையின் முகம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதை மாடலாக வைத்து ஓவியத்தை வரைந்து முடித்தான்.

ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் என்பவனையும் படமாக வரைய நினைத்தான் ஓவியன். எங்கு தேடியும் பொருத்தமான முகமுடைய ஆளைக் கண்டறிய இயலவில்லை.

ஒரு கொலைகாரனைப் போய்ப் பார்த்தான். அவன் கண்களில் குரூரம் இருந்தது. யூதாஸின் கண்களில் குரூரம் இல்லை என்பதால், அவனையும் தவிர்த்தான்.

பல வருடங்கள் தேடியும் பலனில்லை.

ஒரு நாள், மெத்த மெலிந்துபோய்ப் பசி நிறைந்த கண்களுடன், பார்வையில் வெறுப்பைக் கக்கும் ஓர் ஆளைச் சந்தித்தான். அவனிடம், “யூதாஸ் படத்துக்கு ஏற்றவன் நீதான்” என்று சொல்லி, அவனை அமர வைத்து ஓவியத்தை வரைந்து முடித்தான்.

“எவ்வளவு தேடியும் பொருத்தமான நபர் கிடைக்கவில்லை. நல்ல வேளை நீ அகப்பட்டாய்” என்று ஓவியன் நன்றி சொன்னபோது, அந்த ஆள் கேட்டான்: “என்னைத் தெரிகிறதா?”

“இல்லையே” என்றான் ஓவியன்.

“நீங்கள் ஏசுவின் குழந்தை முகம் வரைவதற்கு ‘மாடல்’ ஆக இருந்தவனும் நானேதான். குழந்தையாக இருந்தபோது ஏசு போல இருந்த நான் வளர்ந்து ஆளான நிலையில் யூதாஸ் போல ஆகிவிட்டேன்” என்றான் அந்த ஆள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

‘அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100’, பாலாஜி பப்ளிகேஷன்ஸ், சென்னை - 14; இரண்டாம் பதிப்பு, 1964.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக