புதன், 6 மே, 2015

“தற்கொலையை ஊக்கப்படுத்துகிறார் ஜெயலலிதா” - ஒரு பத்திரிகையின் குரல்.

‘உயிரைப் போக்கிக்கொள்ள அப்பாவித் தொண்டர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து உற்சாகப்படுத்துதல் எந்தவிதத்தில் நியாயம்?’ என்று உரத்த குரலில் கேள்வியெழுப்பும் இந்த அப்பாவியின் பெயர் ‘ருத்ரன்’; ‘பகலவன் முரசு’ என்னும் பத்திரிகையின் ஆசிரியர். 172, Asoka Street, MMDE Colony, Arumbaakkam, Chennai - 600 106 என்னும் முகவரியிலிருந்து இந்த இதழ் வெளியாகிறது. 

கீழ்க்காண்பது இன்றைய[2015 மே 06 புதன்] அதன் தலையங்கம்!

#சமீப காலமாக நாட்டில் கொலைகளும் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. கொலை நடப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும், தற்கொலைக்கு அரசியலும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
சமீபத்தில், ‘ஆம் ஆத்மீ’ பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஒரு விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ‘ஐயோ...ஒரு உயிர் அநியாயமாய்ப் போய்விட்டதே’ என்ற ஆதங்கத்தைவிட, அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகள் செயல்படுவது அநாகரிகத்தின் உச்சம்.

மொத்தத்தில் , மத்திய அரசின் ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா’வே விவசாயியின் விபரீத முடிவுக்குக் காரணம் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த கருத்து. எது எப்படியோ, அந்த விவசாயியின் குடும்பத்துக்குச் சில லட்சம் ரூபாய்கள் அரசியல்வாதிகளால் வழங்கப்படும். அதன் பின் அவரது பரிதாப சாவு அனைவராலும் மறக்கப்பட்டுவிடும்.

சமீபத்தில் தமிழகத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப் பட்டுள்ளதால் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இதன் பின்னர் அவர் மனைவியும் தற்கொலை புரிந்துள்ளார். 

இவர்கள் இருவரும், பெற்ற பிள்ளையை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டனர். இந்த அ.தி.மு.க. தொண்டர், அவரின் குழந்தையை ஜெயலலிதா காப்பாற்றுவார் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இவர் சாவுக்கு  இரங்கல் தெரிவித்து முன்னால் முதல்வர் ஜெயலலிதா சில லட்சம் நிதி அறிவித்ததோடு அக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இதை மேலோட்டமாகப் பார்த்தால் கருணையாகத் தெரியும். ஆனால், உண்மையில் அவரது இச்செயல் தற்கொலையை ஊக்குவிக்கிறது.

ஓட்டுப் போடப் பணம் கொடுத்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது போதாதென்று தற்கொலைக்கும் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள். உயிரைப் போக்கிக்கொள்ள அப்பாவித் தொண்டர்களுக்கு ஊக்கத்தொகையும் அளித்து உற்சாகப்படுத்துதல் எந்தவிதத்தில் நியாயம்? அரசு மற்றும் அரசியல் கட்சிகள் இவ்வாறு கருணைத் தொகைகள் வழங்குவதை நிறுத்தினால் தற்கொலை நிகழ்வுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது#
****************************************************************************************************************************************************





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக