வெள்ளி, 1 மே, 2015

"பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்!"[பழசும் புதுசும்!]

மேற்கண்ட ‘வாசகம்’ பட்டினத்தார் மனம் வெறுத்துச் சொன்னது.
மனதில் எவ்வித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் தராமல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..........

‘மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமல்ல, ஏனைய இயற்கைப் பொருள்களுக்கும் பிறந்த இடத்தை நாடிப் போகும் குணம் உண்டு’ என்று.

தன் மையப் பகுதியிலிருந்து அணு ஆற்றலை உற்பத்தி செய்வதோடு, சுயமாகவே ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற ‘வெப்ப வாயுக் கோளம்’தான் சூரியன் என்கிறது அறிவியல்.

ஓய்வு ஒழிச்சலின்றி அயராது உழைத்து ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இந்தச் சூரியனில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும்?

அது சுருங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள பொருள்கள் ஒன்றன்மீது ஒன்று ஒட்டி நெருக்க, சூரியனின் அடர்த்தி அதிகரிக்கும். அடர்த்தி அதிகமாவது என்றால், சிறிய இடத்தில் அதிகப் பொருள் சேர்ந்துவிடுவது.

இக்கட்டத்தில், நியூட்டனின் ஈர்ப்பு விசை விதிப்படி, சூரியனின் ஈர்ப்புவிசை அதிகமாகி அதன் அருகிலுள்ள புதன் போன்ற  கிரகங்கள் சூரியனுக்குள் இழுக்கப்படும்.

இப்போது சூரியனின் எடை மேலும் அதிகமாகும்; ஈர்ப்பு விசையும் கூடும்.

மேலும், அருகிலுள்ள பூமி போன்ற பிற கோள்களையும் பொருள்களையும் அது இழுத்துக்கொண்டே இருக்கும்.

அதன் ஈர்ப்பு விசை மிக மிக மிக அதிகமாகி ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும். இந்நிலையில், அது ஒளியைக்கூட விழுங்கிவிடும்!

இப்போது, சூரியன் ஒரு கருந்துளை [Black Hole] போல் காட்சியளிக்கும்.

மேற்கண்ட அதிசயம், சூரியன் தன்னிடமுள்ள எரிபொருளை இழந்துவிடும் நிலையில் நிகழ்வதாகும்.

ஆக, சூரியனிலிருந்து வெளிப்பட்ட பூமி முதலான கோள்களும் பிறவும் மீண்டும் சூரியனுக்குள்ளேயே சங்கமம் ஆகிவிடும்! [பிறந்த இடம் தேடுதல்!]

இது நிகழவிருப்பது எப்போது?

சூரியனிடமுள்ள எரிபொருள் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்களாம்.

அதனால், மனித இனம் சூரிய நெருப்பில் கரையப் போவது இப்போதைக்கு இல்லை என்றும் ஆற்றுப்படுத்துகிறார்களாம். ஆனாலும்...........

நீங்கள் எப்படியோ, என்னால் கவலைப்படாமல் இருக்க முடியலீங்க.

ஒவ்வொரு மனித உடம்புக்குள்ளும் ஆன்மா இருக்கிறது. அது, அடுத்தடுத்துப் பிறவிகள் எடுத்துக்கொண்டேயிருக்கும் என்று ஆன்மிகவாதிகள் அடித்துச் சொல்கிறார்கள்.

எனவே, நானொருவன் செத்துச் செத்துப் பிறந்துகொண்டிருப்பதும் சாசுவதம்தான்.

நான்[புகழுக்காகப் பத்திரிகைகளில் பக்திக் கதைகளும் எழுதிக்கொண்டு பகுத்தறிவுவாதி வேடம் போடுகிறவன்!]  மோட்சலோகம் போவதெல்லாம் சாத்தியமே இல்லை; பூமி சூரியனில் கரையப்போகும் அந்தக் காலக்கட்டத்தில்,  மனிதனாக இல்லையென்றாலும் ஒரு நாயாகவோ நரியாகவோ பன்றியாகவோ கழுதையாகவோ பிறந்துதானிருப்பேன். பூமியோடு சேர்ந்து சூரிய நெருப்பில் சிக்கி வெந்து புழுங்கிச் சாம்பலாகப் போவதை நினைத்தால்..........

 இப்போதே ஒட்டுமொத்த உடம்பும் நடுங்குதுங்க!!!


[இப்பதிவில், வேறு ‘எதையோ’ எதிர்பார்த்து வந்திருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள்!]
*******************************************************************************எனக்கு விஞ்ஞானமெல்லாம் தெரியாது என்றாலும், அதுபற்றிப் பதிவு எழுத ரொம்பவே ஆசை! 

‘பூஜ்யத்திலிருந்து பூலோகம்’ [உலக இயற்கை ஆராய்ச்சி மையம், பாப்பாரப்பட்டி-636809; தர்மபுரி மாவட்டம். முதல் பதிப்பு: 2007] என்ற நூலிலிருந்து தகவல்களைச் சுட்டுக் கொஞ்சம் சுவையும் சேர்த்திருக்கிறேன்!!

*******************************************************************************



அமுதம் போன்றதொரு ‘குமுதம்'[28.11.2007] கதை:

தலைப்பு:                                           பசுபதி

“இப்போ லிஃப்ட் கேட்டாரே கையில் குடையோடு ஒரு பெரியவர், அவர் என் ஸ்கூல் வாத்தியார். கடமை தவறாதவர்; மாணவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்சவர். அவர்கிட்டே படிச்சவங்கள்ல நிறையப் பேர் டாக்டர், இஞ்ஜினீயர், ஐ.ஏ.எஸ்.அதிகாரி, விஞ்ஞானி, பேராசிரியர்னு பெரிய பெரிய பதவிகளில் இருக்காங்க.” காரைச் செலுத்திக்கொண்டே சொன்னான் பசுபதி.
“அப்படியா?” வியந்தாள் கிருத்திகா, அவன் மனைவி.

“அவர் மட்டும் இல்லேன்னா பத்தாவதோட என் படிப்பு முடிஞ்சிருக்கும். நானும் காலேஜில் படிச்சேன்னு சொல்லிக்க முடியாம போயிருக்கும். நான் படிக்கிறப்ப மத்த மாணவர்களை மிரட்டிப் பணம் பறிச்சப்பவும், பள்ளிக்கூடப் பல்புகளைத் திருடினப்பவும் என்னை டிஸ்மிஸ் பண்றதா இருந்தாங்க. அவர்தான் தலையிட்டு என்னைக் காப்பாத்தினார்.”

“அப்புறம் ஏன் அவருக்கு லிஃப்ட் கொடுக்காம வந்தீங்க?” கேட்டாள் கிருத்திகா.

“அவர் என்னை மறந்திருக்க மாட்டார். என்ன செய்யுறேன்னு கேட்பார். என்னால் அவர்கிட்ட பொய் சொல்ல முடியாது. கந்து வட்டியில் சம்பாதிக்கிறேன், கட்டப் பஞ்சாயத்துப் பண்றேன்னு சொல்ல முடியுமா? சொன்னா அந்த உத்தமர் மனசு தாங்குமா?” பசுபதியின் குரல் தழுதழுத்தது.

=============================================================================================  














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக