கருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக் கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்; விவசாயக் குடும்பம். கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது. அவள் கணவன், சந்தை சந்தைக்குக் கால்நடைகளை வாங்கி விற்கும் ‘தரகு’த் தொழில் செய்தான்.
கருப்பாயி, எருமை $ மாடு[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.
பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்து வருவாள்.
அன்றும், வழக்கமான நேரத்துக்குச் சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள். முதல் விநியோகம் அவனுக்குத்தான்.
அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.
“எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ளே வெச்சுட்டுப் போ” என்றான்.
அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.
திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழி விடு” என்றாள்.
சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான். “உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.
பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.
அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம்.
அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.
இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.
ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு ஒத்துழைக்கவில்லை.
அவளிடமிருந்து ‘அவற்றை’ விடுவிக்க நினைத்தான். அதுவும் சாத்தியப்படவில்லை.
அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது. நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன. விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.
இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.
தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.
அடுத்த நாள், பால் கொண்டு போன போது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.
ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்த போது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான் சுந்தரம்
அப்புறமும் அந்நிலையே நீடித்தது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
படம்: கூகிளுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக