'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Wednesday, April 29, 2015

மன்மதக்கலையும் மதி மயங்கும் மனித குலமும்![பழசோ பழசு!]

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்பார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. ‘ஆண் பெண் சேர்க்கை கொள்வது இன விருத்திக்காக மட்டுமே’ என்ற இயற்கை நியதியைத் தகர்த்து, அதை ஒரு கலையாக்கி, அதற்கான ‘கால அளவை’ நீட்டித்துக்கொண்டிருப்பவன் மனிதன்.

நீண்ட நேரம் ‘கலவி இன்பம்’ துய்க்க விரும்புவோர், அதற்கான வழிமுறைகளையும் உத்திகளையும் கற்றுத் தெளிய வேண்டியது ‘கட்டாயம்’ என்பதை மனித குலம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், கற்பதற்குரிய ‘தருணம்’ எது என்பதில்தான் கருத்துமாறுபாடுகள் நிலவுகின்றன.
“பாலு, கொஞ்ச நாளாவே நீ ஏதோ குழப்பத்தில் இருக்கிற மாதிரி தெரியுது. காரணத்தை உன் உற்ற நண்பனான நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார் கேசவன். வழக்கம் போல, மதிய உணவு இடைவேளையில், இருவரும்  நிறுவன வளாகத்திலிருந்த புங்கமர நிழலில் அமர்ந்திருந்தார்கள்.


“சொல்லுப்பா, ஏன்?” என்றார் கேசவன்.


“என் வீட்டில் எனக்குப் பெண் பார்க்கிறாங்க. கல்யாணத்தை நினைச்சாலே பயமா இருக்கு” என்றான் பாலு.

“ஏன்பா அப்படி? அது வந்து... போயி...ன்னு சுத்தி வளைக்காம போட்டு உடை.” 

“அப்பெல்லாம் படிச்ச பெண்கள் ரொம்பக் கம்மி. மத்த பெண்கள்கூட செக்ஸ் பேச மாட்டாங்க. அவ்வளவு பயம். புருஷன் கொஞ்ச நேரமே உடலுறவு வெச்சிட்டாலும் அவ்வளவுதான் முடியும்போல. மத்த ஆண்பிள்ளைகளும் இப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சித் திருப்தி அடைஞ்சாங்க. இன்னிக்கி நிலைமை வேற. எல்லாப் பெண்களும் படிக்கிறாங்க. செக்ஸைப் பத்திக் கருத்துப் பரிமாறிக்கிறாங்க; புத்தகங்களில் படிச்சும் மீடியாக்கள் மூலமாகவும் நிறையவே தெரிஞ்சிக்கிறாங்க. அதனால, கட்டின புருஷன்கிட்ட அவங்களோட எதிர்பார்ப்பும் அதிகமா இருக்கு.....” 


குறுக்கிட்டார் கேசவன். “எதிர்பார்ப்புன்னா?.....”


“மத்த விஷயங்கள்ல சந்தோசமா வெச்சிக்கிறது மட்டுமில்ல,  ‘அது’ விஷயத்திலும் தன்னைத் திருப்திபடுத்தணும்னு நினைக்கிறாங்க.”


"எதை வெச்சி இப்படிச் சொல்லுறே?”


“மீடியாக்கள் தர்ற செய்திகளைப் படிச்சுட்டுத்தான். கல்யாணமாகிக் கொஞ்ச நாள்லயே, மூனுல ஒரு பங்குத் தம்பதிகள் விவாகரத்துக் கேட்டுக் கோர்ட்டுப் படி மிதிக்கிறாங்களாம். இதுக்கான காரணங்களில், வரதட்சணை, ஈகோ தவிர செக்ஸும் முக்கிய இடம் வகிக்குது. ஏதோவொரு அயல்நாட்டுப் பத்திரிகையில் படிச்சதா நீங்க சொல்லியிருக்கீங்க. அந்தப் பத்திரிகை நிருபர், பல குடும்பப் பெண்களைச் சந்திச்சி, ‘செக்ஸ்’ அனுபவம் பத்திக் கேட்கிறார். எந்தவொரு பெண்ணும் முழுத் திருப்தி அடைஞ்சதாச் சொல்லல. ‘அப்பப்ப அப்படி இப்படின்னு இருந்தாரு. ரெண்டு குழந்தைகளையும் பெத்தேன். வருஷங்கள் ஓடிடிச்சி. அதுல திருப்தி கிடைச்சுதுன்னு நான் சொல்ல மாட்டேன்’னு ஒருத்தி அடிச்சிச் சொல்லுறா. ‘என்ன செய்யுறது? மனசுக்குள்ளயே புழுங்கினேன். படி தாண்டியும் போக முடியல. வேறே வழியில்லாம சுய இன்பப் பழக்கத்துக்கு அடிமையானேன்’னு இன்னொருத்தி வேதனைப்படுறா. மத்த பெண்கள் பேட்டியும் இதே ரீதியில்தான் இருக்கு.”


“வெளிநாட்டுப் பெண்களுக்குத் துணிச்சல் அதிகம்; சுதந்திரமும் இருக்கு. சுயமா சம்பாதிப்பது காரணமா இருக்கலாம். நம் நாட்டுப் பெண்களில் பலரும் கணவனைச்  சார்ந்தே இருக்காங்க. ஒளிவு மறைவில்லாம இவங்களால பேச முடியாது.”


“பேச முடியாதுன்னாலும், வளர்ந்து ஆளான புள்ளைகளை விட்டுட்டுக் கள்ளக் காதலனோட ஓடிப் போற பெண்கள் இங்கே இருக்காங்களே.  கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த பெண்களால, இப்படியெல்லாம் ஓடுறதுக்கு அவங்க மனசு இடம் கொடுக்காது. ஆனா, தப்புப் பண்ணவும் வழியில்லாம, ஓடிப் போகவும் முடியாம, மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் இங்கே நடக்குது.”


“உண்மைதான். எனக்குத் தெரிஞ்சி ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண். அவளோட மாராப்பு விலகி நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவ, ஒரு நாள் படு அசிங்கமா பேச ஆரம்பிச்சுட்டா. காரணம், கட்டின புருஷனின் இயலாமை அவளை மன நோயாளி ஆக்கிடிச்சி. போகட்டும், பெண்களின் எதிர்பார்ப்பு அதிகமாயிட்டதால, கல்யாணம் பண்ணிக்கப் பயப்படுறேன்னு சொல்லுறே. அப்படித்தானே?”


“ஆமாங்க.”


"மத்த நாட்டுப் பெண்கள் எப்படியோ, நம்ம பெண்களோட மனப்போக்கு வேறுமாதிரி. விந்தணுக்களை உட்செலுத்துகிற அந்த ஒரு செயல்பாட்டுக்கான கால நீட்டிப்பை மட்டுமே இவங்க பிரதானப்படுத்தறதில்ல. அழகை ரசிக்கிறது; உடம்போடு உடம்பு உரசறது; தொட்டுத் தழுவறது; முத்தமிடுறது; வார்த்தைகளால் சல்லாபிக்கிறதுன்னு ஆடவனுடைய ஒவ்வொரு செயலையும் உள்வாங்கிட்டு, அவ்வப்போது மனசுக்குள் அசை போட்டு ஆனந்தப்படுற உன்னத குணம் இவங்களுக்கு இருக்கு. அதனால, ’அந்த ஒரு விஷயத்தில்’ ஓரளவு இவங்களைத் திருப்திபடுத்தினாப் போதும், புருஷனைத் தலையில் தூக்கி வெச்சிக் கொண்டாடுவாங்க; ஆயுள் கால அடிமையா ஆயிடுவாங்க. என்ன நான் சொல்றது?” என்றார் கேசவன்.


"நீங்க சொல்றது சரிதாங்க. அந்த ஓரளவுக்குத் திருப்திபடுத்துற சாமர்த்தியம்கூட எனக்கு இல்லையேங்குறதுதான் என் நிலைமை.”


“விளக்கமா சொல்லு.”


“படிப்பு பாதிச்சுடும்கிற பயத்தில், செக்ஸ் பற்றிய நினைப்புக்கு நான் அதிகம் இடம் கொடுத்ததில்லை; நண்பர்களோட இதைப் பத்திப் பேசினதில்ல; செக்ஸ் புத்தகங்கள் படிச்சதில்ல.....”


இடைப் புகுந்து  சொன்னார் கேசவன்: “கல்வி நிலையங்களில் செக்ஸ் பத்திச் சொல்லித் தரணுனு சொல்றவங்க  யாரும்,  எந்த அளவுக்குக் கத்துக் கொடுக்கணும்னு அதுக்கான எல்லையை வரையறுத்ததே இல்லை. ஆண் பெண் உறுப்புகளின் பயன்பாடு; கருவுறுதல்; தவறான உடலுறவால் ஏற்படும் பாதிப்புகள்; தொற்றும் நோய்கள் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்னு  சொல்றாங்க. இப்படி, செக்ஸ் பத்திக் கொஞ்சம் சொல்லித் தந்தாலே,  அதற்கு மேலும் தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வத்தை டீன் ஏஜ்  பிள்ளைகளால் கட்டுப்படுத்த முடியாது. அதன் பின் விளைவு மிக மோசமானதாகவே இருக்கும். வயிற்றுப் பசியைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது காம உணர்ச்சி. ’காம உணர்ச்சிக்கு இடம் தந்துட்டா அது நம்மை வேறு எதுவும் செய்யவிடாது’ன்னு எனக்குத் தெரிஞ்ச ஒரு மேடைப் பேச்சாளர் அடிக்கடி சொல்வார். பெரிய பெரிய மேதைகளையும் அறிஞர்களையும் இந்த செக்ஸ் என்ன பாடுபடுத்தியிருக்கு!? அதனால, மாணவர்களுக்கு செக்ஸ் சொல்லித் தரணும்கிறது அடிமுட்டாள்தனமான வாதம்னுதான் நான் சொல்லுவேன். சரி...நீ மேலே சொல்லு.” 

பாலு தொடர்ந்தான். “பெண்களோட சகவாசமும் எனக்கு இருந்ததில்ல. மனக் கட்டுப்பாட்டையும் மீறி எப்பவாவது...எப்பவாவது...சுயமா......”

“சும்மா சொல்லு.”

“சுயமா என்னை நானே சந்தோசப்படுத்திக்குவேன். அந்தச் சந்தோசத்துக்கும் அற்ப ஆயுசுதான். நீண்ட நேரம் என்னை நானே சந்தோசப்படுத்திக்க முடியறதில்ல. அதை வெச்சுத்தான் என் வருங்கால மனைவியை அது விசயத்தில் ஓரளவுகூடத் திருப்திபடுத்த முடியாதுன்னு சொல்லுறேன்.”


“ரொம்பச் சரி. உடலுறவு சம்பந்தமான அனுபவமோ கேள்வி ஞானமோ படிப்பறிவோ இல்லாத நிலையில் நீ கல்யாணம் கட்டிக்கிறது தப்புதான்.....”


கேசவன் சொல்லி முடிப்பதற்குள் சொன்னான் பாலு: "என்னைப் புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி. எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு வீட்டில் சொல்லிடப் போறேன்.” 

“அவசரப்படாதே. நான் சொல்றதை முழுசாக் காதுல வாங்கிக்க. நான் கல்யாணம் கூடாதுன்னு சொன்னது, இனனும் ஆறு மாசத்துக்குத்தான். தேவைப்பட்டா ஒரு வருஷ அவகாசம்கூட நீ எடுத்துக்கலாம். அதுக்குள்ள நீ ஒரு நல்ல கணவனுக்குரிய தகுதியை வளர்த்துக்கணும்.  சேர்க்கையின்போது கையாளவேண்டிய வழிமுறைகள், உத்திகள் பற்றியும், திருப்திகரமான உடலுறவுக்கு உதவும் ‘ஆயின்மெண்ட்’ ‘ரப்பர்பேண்ட்’ போன்றவை பற்றியும் புத்தகங்கள் மூலமாவும் நல்ல நண்பர்கள் மூலமாவும் நீ தெரிஞ்சிக்கணும். கூச்சப்படாம மருத்துவர்கிட்டேயும் ஆலோசனை பெறலாம்.  உடலுறவு  சம்பந்தமான அறிவு வளர வளர, அது பற்றிய பயமும் படிப்படியாக் குறைய ஆரம்பிச்சுடும்........... ”

பேசுவதை நிறுத்தி, பொருள் பொதிந்ததொரு புன்னகையை முகத்தில் படரவிட்ட கேசவன், “பாலு, ‘ஆறு மாசம் போகட்டும். அப்புறம் பெண் பார்க்கலாம்’னு உன் பெற்றோர்கிட்ட சொல்லிட்டு, இன்னிக்கே உடலுறவுப் பாடம் படிக்க ஆரம்பிச்சுடு..... என்ன? வேலை முடிஞ்சி போகும்போது ஞாபகப்படுத்து, ஒரு நல்ல புத்தகம் தர்றேன்” என்று கண் சிமிட்டிவிட்டு உணவுப் பொட்டலத்தைப் பிரிக்க ஆரம்பித்தார் பாலு.
*****************************************************************************************************************************************************


ஒரு பக்கக் ‘குங்குமம்’[04.05.2015] கதை![புதுசோ புதுசு!]

                                            அர்ச்சனை   
ண்டுக்கு   இரண்டு தடவை ஏதாவது பிரசித்தி பெற்ற கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவது    என் வழக்கம்.

இன்று, நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்..

அதிகாலை புறப்பட்டு, கோயிலைச் சென்றடைந்தோம். அர்ச்சனைத் தட்டுடன் தேங்காய் பழத்தட்டை அர்ச்சகரிடம் நீட்டினோம்.

சாமி சிலைக்கு மாலை சாத்தி, பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து முடித்த அர்ச்சகர், “அர்ச்சனை யார் பேருக்கு? சொல்லுங்கோ” என்றார்.

“ஸ்ரு...” எங்கள் குழந்தையின் பெயர் சொல்லப்போன சரிதாவைக் கையமர்த்திவிட்டு, ‘மாரிமுத்து’ என்றேன். என்னைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மௌனமானாள் சரிதா.

அர்ச்சனை, வழிபாடெல்லாம் முடிந்து, கோயிலைச் சுற்றிப்  பார்க்க ஆரம்பித்தபோது, சரிதா புரியாமல் கேட்டாள்...“யாருங்க அந்த மாரிமுத்து?”

“நம்ம வீட்டு வேலைக்காரி மகன்மா. அவன் ஒரு வாரமா டைபாய்டு காய்ச்சலால் அவஸ்தைப்படுறான்னு அந்த அம்மா சொன்னதை மறந்துட்டியா? அவன் சீக்கிரம் குணமடையட்டும்னு அவன் பேரைச் சொன்னேன். எப்பவும் நம் குழந்தைக்காகத்தான் அர்ச்சனை பண்றோம். இன்னிக்கி மத்தவங்க குழந்தைக்காகப் பண்ணியிருக்கோம். இது தப்பா சரிதா?” என்றேன்.

“நான் அப்படிச் சொல்வேனா? நானும் ஒரு பிள்ளையைப் பெத்தவதானே!” என்றாள் அவள் கனிவோடு.
============================================================================================                         


No comments :

Post a Comment