மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Wednesday, September 16, 2015

இந்தக் கேள்விக்கு நேற்று இன்றல்ல, இனி எப்போதும் பதில் இல்லை!!!

இந்தப்பதிவு, 18.06.2012இல் எழுதப்பட்டது. இப்போது மட்டுமல்ல, இனி எப்போதும்...கி.பி.18.06.20000000000000000000000000000000000000000000000000000000000000000012லும் [மறு...மறு...மறு...பிறவியில்!] படிக்கலாம். அப்போதும் இது உங்களைச் சிந்திக்கத் தூண்டும்! வாசித்துப் பாருங்களேன்.

 ‘கடவுள் உண்டா இல்லையா?’
மிகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெறும் இவ்விவாதத்தில், ‘அனுமானம்’ என்னும் ‘உத்தி’ யைத் துணைக் கொண்டு, வெகு எளிதாகக் கடவுளின் ‘இருப்பை’ நிலை நாட்ட முயன்று வருகிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.

ஒரு மண்பாண்டத்தைப் பார்க்கிறோம். அதை வனைந்தவர், அதாவது, படைத்தவர் ஒரு குயவர் என்பதை அறிகிறோம்.

நார்களாலும் களிமண் போன்ற பிற உபகரணங்களாலும் உருவாக்கப்பட்ட , ஒரு கூட்டைக் காணுகிற போது, அதை உருவாக்கியது ஒரு பறவை என்பதை அறிய முடிகிறது.

இவையெல்லாம் அரதப் பழசான எடுத்துக் காட்டுகள்.

இன்று புதிய புதிய உதாரணங்கள் தரப்படுகின்றன.

ஓர் ஓவியத்தைக் கண்ணுறும் போது. அது தானாக உருவாகவில்லை; அதை வரைந்தவன், அதாவது படைத்தவன் ஓர் ஓவியன் என்பதையும், ஒரு கணினி தானாகத் தோன்றிவிடாது; அதைத் தோற்றுவிக்க ஒரு தொழில் நுட்ப அறிஞன் தேவை என்பதையும் மிக எளிதாக நம்மால் உணர முடிகிறது. [இப்படிப் பல எ-டுக்கள் தருகிறார்கள்]

இம்மாதிரி அனுபவங்களை விவரித்து, ஒரு பொருள் தானாக உருவாவதில்லை; அதை உருவாக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை என்று பிறரை நம்ப வைக்க முயலுகிறார்கள்.

‘மண்பாண்டம், கணினி போன்றவற்றைப் போல, நாம் பார்க்கிற இந்தப் பிரபஞ்சப் பரப்பிலுள்ள ஒவ்வொரு பொருளையும், உயிரையும் பிறவற்றையும் தோற்றுவிக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை’ என்ற முடிவுக்குப் பிறரை இட்டுச் செல்கிறார்கள்.

இவ்வாறு முடிவெடுப்பதைத்தான் ‘அனுமானம்’ என்பார்கள்.

‘இது இப்படி நிகழ்ந்தது. எனவே, அதுவும் இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்’ என வாதிப்பது இதன் அடிப்படை அம்சம்.

ஒன்றை இங்கு மிக ஆழமாக மனதில் பதித்தல் அவசியம்.

அனுமானம் என்பதும் ஒருவகை நம்பிக்கைதான். எல்லா அனுமானங்களும் ‘உண்மை’ ஆகிவிடா. காரணங்கள் பல உள்ளன.

அவற்றில் ஒன்று............

ஓவியத்தைப் பார்த்ததும், அதை வரைந்தவர் ஓர் ஓவியர் என்று முடிவெடுப்பதிலேயே தவறு நிகழ்கிறது.

ஓர் ஓவியர், ‘தானே தனியராய்’ வெறுங்கைகளுடன் அதைப் படைத்தாரா?

அதை உருவாக்க, வண்ணம், தூரிகை, தாள் போன்ற மூலப் பொருள்கள் தேவையாயிற்றே. [செய்பவன்,கருவி,காரியம் என்றெல்லாம் நம் முன்னோர்கள் இது பற்றி ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்கள்]. இங்கே, படைப்புக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் பொருள்கள் மற்றும் சாதனங்களை ‘மூலப் பொருட்கள்’ எனக் கொள்வோம்.


மூலப் பொருள்களை வழங்கியவர்களும் படைப்புக்குத் துணைக் காரணமாக இருக்கையில், ஓவியத்தை ஓவியன் மட்டுமே ‘படைத்தான்’ என்று முடிவெடுப்பது தவறல்லவா?

ஒரு பொருளின் தோற்றம் பற்றிச் சிந்திக்கும் போது, அதை ‘ஒருவர் படைத்தார்’ என்று முடிவெடுப்பதில் நம்மவர்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்பது புரியாத புதிராக இருக்கிறது!

அவ்வாறு முடிவெடுப்பதால் விளையும் பயன் என்ன என்பதும் விளங்கவில்லை.

‘வெளி’யிலுள்ள அத்தனை பொருள்களையும் உயிர்களையும் பிறவற்றையும் கடவுள் என்றுஒருவர் படைத்தார் என்று அனுமானிக்கும் போதும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இதே தவற்றைத்தான் செய்கிறார்கள்.

அனைத்தையும் உருவாக்குவதற்கான ‘மூலப் பொருள்களை அவருக்குப் பிறர் வழங்கினார்கள்; அல்லது, அவை கடவுளைப் போலவே ‘என்றும் இருப்பவை’ எனக் கொண்டால்....................

‘முழு முதலானவர்’, ‘எல்லாம் வல்லவர்’ எனப்படும் அவரது தகுதிகளுக்குப் பங்கம் நேர்ந்துவிடும் என்பதால்..........

மூலப் பொருள்கள் அனைத்தையும் அவரே படைத்துக்கொண்டார் சொல்லியிருக்கலாம். அது ஏற்புடையதுதானா? “அல்ல” என்பதே நம் பதில்.

தானே தனக்குள் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டார் என்று சொல்லிச் சமாளிக்கலாம்.

இது சாத்தியம் எனின்.....இதுவே உண்மை எனின், அனைத்துப் பொருள்களும், உயிர்களும் பிறவும் முழுக்க முழுக்கக் கடவுளின் பிரதிகள் அல்லது கூறுகள் என்றாகிறது.

நீங்களும் நானும் கடவுளின் பிரதிகள்!

நாம் சிரித்தால் அவரும் சிரிப்பார். நாம் அழுதால் அவரும் அழுவார். நாம் அழுதுகொண்டே சிரித்தால் அவரும் அவ்வாறே செய்வார்.

நினைக்கும் போது மனம் பேரானந்தத்தில் மூழ்கித் தவிக்கிறது.

ஆனாலும் ஒரு சந்தேகம்.....................................

அடுக்கடுக்கான துன்பங்கள் அலை அலையாய் வந்து நம்மைத் தாக்கிச் சிதைக்கிற போது, கடவுளின் மறு பிரதியான நாம் வேதனையில் கிடந்து துடிக்கிறோமே, அது ஏன்???

ஏன்? ஏன்? ஏன்?

எல்லாம் அவரின் ‘திருவிளையாடல்’ என்கிறால்..........

இந்தத் திருவிளையாடல் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும்?

விடை தெரிந்தவர் யார்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


No comments :

Post a Comment