அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 12 செப்டம்பர், 2015

மதம்..........உயிர் பறிக்கும் ‘வெறி நோய்’!!!

இஸ்லாமியராகப் பிறந்து, சிறிதும் கடவுள் நம்பிக்கை அற்றவராக வாழ்பவர் கவிஞரும் பேராசிரியருமான இன்குலாப் அவர்கள். மனித மனங்களைத் தூய்மைப்படுத்தவே கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். கீழ்வருவது, சிறுகதை வடிவில் அமைந்த அவரின் மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று. படியுங்கள்.


திருப்பாலைக்குடி என்ற கிராமத்திலிருந்து பஸ்ஸில் ஏறினேன், என் மனைவியோடும் மகளோடும். மூன்று பேர் ஓடிவந்து ஏறவும் பஸ் புறப்படவும் சரியாய் இருந்தது.

அவர்களுக்கு உட்கார இடமில்லை; நின்றார்கள். ஒரு நடுத்தர வயதுக்காரர் எங்களை நோட்டமிட்டார்.

என் மனைவியின் நெற்றியில் பொட்டில்லை. மகளுடைய நெற்றியிலும்தான்.

அடுத்து நின்றவரிடம் உரக்கச் சொன்னார்:

“இந்த முஸ்லீம்களைக் கண்டாலே வெட்டணும்.”

பலர் அதைக் கேட்டார்கள். பஸ் இரைச்சலில் அமுங்கிவிடாத தொனியில்தான் அவர் அதைச் சொன்னார்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு கேட்டேன்: “முஸ்லீம்களை ஏன் வெட்டணும்?”

“பக்கத்துக் கிராமத்தில் ஒரு பொம்பளையைக் கெடுத்துக் கொலை பண்ணிட்டானுவ.”

“ரொம்பக் கொடுமை. இதைச் செஞ்சது முஸ்லீம்தான்கிறதுக்கு என்ன ஆதாரம்?”

“கேள்விப்பட்டோம்.”

“கேள்விப்பட்டதை வச்சி இப்படிப் பேசலாமா?”

அமைதி.

“ஒரு பொம்பளையை மானபங்கப் படுத்தறவன் முஸ்லீமோ இந்துவோ எவனா இருந்தாலும் வெட்டணும்னுதான் நான் சொல்லுவேன். முஸ்லீமை வெட்டணும்னு நீங்க சொல்றது என்ன நியாயம்?”

அவர் சொன்னார்: “நீங்க சொல்றது சரி. எல்லாரும் சொல்றாங்கன்னு நான் வார்த்தையை விட்டுட்டேன்.

‘அண்ணன், தம்பி, மாமன், மச்சான், வாப்பா, காக்கா’ என்று நாங்கள் வளர்த்து வந்த உறவுகளுக்கு என்ன ஆனது? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது மண்ணில் இப்பொழுது வேகமாகப் பரவுவது...மத நோய்.

எனது ஊரில் பல தெருக்களில் சாக்கடை தேங்குகிறது. முக்குக்கு முக்கு குப்பை நாறுகிறது. குடிப்பதற்குப் போதுமான தண்ணீர் இல்லை. ஒழுங்கான மருத்துவ வசதி இல்லை. மின் விளக்குகள் சிம்னி விளக்குகள் போல் அழுது வடிகின்றன, விரல்விட்டு எண்ணக்கூடிய சில செல்வந்தர்களின் வீடுகள் தவிர. இந்த அவலம் எல்லாத் தெருக்களிலும் இருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் என்ற பேதமில்லை.

இத்ற்காக யாரும் போராட முன்வரவில்லை. ஆனால், மதத்தைக் காப்பதற்காக மட்டும் வன்முறை வெறியாட்டம் தூண்டி விடப்படுகிறது........

..........கொஞ்ச நாட்கள் முன்பு, எங்கள் ஊரிலும், நான் ஊரில் இல்லாதபோது, இப்படியொரு அநாகரிகம் நடந்து ஊர் அமளிப்பட்டு, துப்பாக்கி புகைந்தது.  சில நாள் கழித்து என் மருமகன் சொன்னார்: 

“கலவரம் தொடங்கினவுடனே எங்களை அந்த ஆசாரி அப்பு தன் வீட்டுக்குள்ளே கூட்டிகிட்டுப் போய்ட்டாரு. அதே மாதிரி சில முஸ்லிம் நண்பர்களுக்கும் இந்துக்கள்தான் புகலிடம் கொடுத்தாங்க. சில இந்துக்களை சில முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே கூட்டிட்டுப் போய்ப் பாதுகாத்தாங்க.”

“அப்போ யாரெல்லாம் அடிச்சிகிட்டது?” என்று என் மாப்பிள்ளையிடம் கேட்டேன்.

“சமூக விரோதிகள். அவங்களுக்கு இது ஒரு சாக்கா அமைஞ்சிட்டுது” என்றார் மாப்பிள்ளை.

ஒரு வெறியாட்டத்துக்கு இடையிலும் பலர் மனிதர்களாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக