அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பகுத்தறிவாளரும் எழுத்தாளருமான ‘கல்புர்கி’ படுகொலை! இந்துத்துவாக்களின் வெறியாட்டம்!!

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர், சாகித்திய அகாடமி விருது பெற்றவரும் கன்னடப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பகுத்தறிவாளருமான பேராசிரியர் ‘கல்புர்கி’ அவர்கள்.
[நன்றி; தி இந்து]
இவரின், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்து, பஜ்ரங் தளம், விஸ்வ  ஹிந்து பரிஷத் , ஸ்ரீராம் சேனா ஆகிய அமைப்புகள் கர்னாடக மாநிலம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டன. தார்வார் மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் வீட்டின் முன்பாகத் திரண்ட இந்துத்துவா வெறியர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்திக் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், 30.08.2015 ஆம் நாள் காலை இரு நபர்கள் கல்புர்கியின் மாணவர்கள் என்று சொல்லிச் சந்தித்து, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஓடியுள்ளனர்.

“என் தந்தைக்குத் தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாருமில்லை. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசி வந்ததால் ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. மிரட்டியவர்களில் யாரோதான் என் தந்தையைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்” என்று கல்புர்கியின் மகள் ரூபா தர்ஷி தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கொடூரக் கொலையைக் கர்னாடக மாநில முதல்வர் சித்தராமையா கண்டித்திருக்கிறார். மூத்த எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில், மூடநம்பிக்கைக்கு முதன் முதலாகப் பலியானவர் ‘பகுத்தறிவுத் தந்தை’[Father of Philosophy] எனப்பட்ட  உலகம் போற்றும் கிரேக்க நாட்டுப் பெரியார் ‘சாக்ரட்டீஸ்’[கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான்] ஆவார்.

அவருக்குப் பின்னரும், பல சிந்தனையாளர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர்.

“பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குப் பரம விரோதிகள் மதவாதிகளே” என்று முழக்கமிட்ட ‘வால்டேர்’ என்னும் இலக்கிய மேதை அனுபவித்த துன்பங்கள் அளவிறந்தவை.

டார்வின் அனுபவித்த தொல்லைகளுக்கும் எல்லையில்லை.

விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் என்றாலே மூட வேத மத மூர்க்கர்களுக்கு எரிச்சல்தான். அவர்களைக் கைது செய்யத் தூண்டுவதும் சிறையில் அடைப்பதும் சித்திரவதை செய்வதும் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

நாத்திக மாமேதை இங்கர்சாலின் காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. 

விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக, மதவாதிகளின் கொட்டம் குறையத் தொடங்கியது. பகுத்தறிவாளர்கள் சுதந்திரமாகத் தம் கருத்துகளை வெளியிடும் நிலை உருவானது. தமிழ்நாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ பெரியாரின் பணி மிகப் பெரும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆயினும், அண்மைக் காலங்களில் இவ்வுரிமையைப் பறிக்கும் செயல்களில் மத வெறியர்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். 

இரண்டு[2013] ஆண்டுகளுக்கு முன்பு, புனேயில், நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார்.

வங்க தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வலைப்பதிவருமான அவிஜித் ராய் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மத அடிப்படைவாதிகளால்  படுகொலை செய்யப்பட்டார்.  ஹுமாயூன் ஆசாத், ரஜீப் ஹைதர், சகோர்-ரூணி போன்றோரும் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

இவ்வாறான கொலைபாதகச் செயல்களின் தொடர்ச்சிதான் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது.

இந்நிலை தொடர்வது நாட்டு நலனுக்கு ஏற்றதல்ல.

இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடவே கூடாது. கர்னாடக அரசு உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

‘மூடநம்பிக்ககளுக்கு எதிரான வலுவான சட்டம் இயற்றப்படுதல் வேண்டும்’ என்ற கல்புர்கியின் விருப்பத்தை விரைவில் நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகள் முனைந்து செயல்படுதல் வேண்டும்.
*****************************************************************************************************************************************************







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக