தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jul 3, 2016

‘இப்தார் நோன்பு’ம் முதலமைச்சர் சொன்ன கடவுள் கதையும்!

“ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் அகமும் புறமும் தூய்மை அடைகிறது. அதன்மூலம் இறைப்பற்றும் அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதனால் இறைவனின் அருளைப் பெற முடிகிறது..... ”

சென்னையில் நடந்த, அ.தி.மு.க. சார்பான ‘இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி’[02.07.2016]யில் மேற்கண்டவாறு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், மேலும் பல நற்கருத்துகளை வழங்கியதோடு நபிகள் நாயகம் குறித்த ஒரு கதையையும் சொல்லியிருக்கிறார்கள். கதை.....
‘நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பிடிக்காத எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். 

ஒரு நாள் இரவு, அவர்களின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்து நண்பரின் இல்லத்துக்கு நபிகள் நாயகம் வந்தார். அவரைத் ‘தெளர்’ என்ற மலைக் குகைக்கு அழைத்துச் சென்றனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர்.

அப்போது நபிகள் நாயகத்தின் நண்பர் அவரிடம், “எதிரிகள் நம்மைக் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி இறப்பது உறுதி” என்றார். அப்போது நபிகள் நாயகம், “தோழரே பயப்பட வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருக்கிறார். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கு அவசியமில்லை” என்றார்.

அப்போது எதிரிகள் குகைக்கு அருகில் வந்தனர். ஆனால், எதிரிகள் உள்ளே நுழைவதற்குள்  நுழைவாயிலில் சிலந்தி வலை பின்னிவிட்டது. 2 புறாக்கள் படுத்திருந்தன.

அதைப் பார்த்த எதிரிகளில் ஒருவன், “நாம் தேடிவந்தவர்கள் இங்கே இருந்தால் சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண்டும். புறாக்களும் இருக்காது. எனவே, அவர்கள் இங்கே இருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறினார். அதை ஏற்று அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றார்கள்....’

கதையின்படி, சிலந்தியை வலை பின்னச் செய்து நபிகள் நாயகத்தைக் காப்பாற்றுகிறார் கடவுள். அவர் நினைத்திருந்தால், நபிகள் நாயகத்தையும் பிற நண்பர்களையும் எதிரிகளின் கண்ணுக்குப் புலப்படாமலே மறைத்திருக்க இயலும். வேறு வழிமுறைகளையும் கையாண்டிருக்க முடியும். நாம் கேட்க நினைப்பது, இறை நம்பிக்கையைத் தக்க வைக்க இம்மாதிரிக் கதைகள் இந்த அறிவியல் யுகத்தில் தேவையா என்பதே.

மக்களில் பலரும் இன்று ஆழ்ந்து சிந்திக்கக் கற்றிருக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் எல்லாம் இறை மறுப்பாளராக மாறிவிட்டார்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆயினும், இம்மாதிரியான கதைகள் குறித்துக் கணக்கிலடங்காமல் கேள்விகள் கேட்கத் தலைப்பட்டுவிட்டார்கள் என்று எண்ணுகிறோம். அதை முதலமைச்சரோ மதப் பிரச்சாரகர்களோ மறுக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறோம்.

எனவே, கடவுளின் பெருமைகளைப் பரப்புரை செய்வோரிடம் நாம் அன்புடன் முன்வைக்கும் ஒரு வேண்டுகோள்......

கடவுள் நம்பிக்கையால் நன்மைகள் விளையும் என்று நம்புகிற நீங்கள், அந்த நன்மைகளைப் பட்டியலிடுங்கள்; தவறில்லை. அருள்கூர்ந்து நம்ப முடியாத கதைகளைச் சொல்லி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்.

நன்றி.
===============================================================================
நன்றி: தமிழ் நாளிதழ்கள்[03.07.2016].