“நீ இந்த ஊரைவிட்டே ஓடிப்போகணும். அப்பத்தான் மழை பெய்யும்னு மாரியாத்தாவே சொல்லிட்டா. உம்...உம்...புறப்படு. எல்லையைத்தாண்டித் திரும்பிப் பார்க்காம ஓடு. ஓடிப்போயிடு.”
“சாமி இல்ல பூதம் இல்லன்னு பிரச்சாரம் பண்றவன் நீ. நல்ல நேரம் கெட்ட நேரம்னு எதுவும் இல்ல; சகுனம் பார்க்குறது தப்பு; சாந்தி கழிக்கிறது தப்புன்னு என்னென்னவோ சொல்லிட்டுத் திரிஞ்சே. நாங்க கேட்டுட்டுச் சும்மா இருந்தது தப்பாப் போச்சி. இந்த ஊர் தெய்வக் குத்தத்துக்கு ஆளாயிடிச்சி. நீ வெளியேறினாத்தான் மழை பெய்யும். இப்பவே நடையைக் கட்டு.”
ஒட்டு மொத்த ஊரும் பிறப்பித்த உத்தரவை மீற முடியாத நிலையில், அந்த அந்தி நேரத்தில், புதுப்பாளையத்துலிருந்து வெளியேறி, ஊரின் மேற்கு எல்லையில் உள்ள பெரிய ஏரிக்கரை மீது நடந்துகொண்டிருந்தான் மணிமொழியன்.
“சே, இந்தக் கணினி யுகத்திலும் இப்படியொரு காட்டுமிராண்டிக் கூட்டமா? இந்த முட்டாள்களை மூடநம்பிக்கைச் சேற்றிலிருந்து ஈடேத்த நான் பட்ட பாடெல்லாம் வீணாயிடிச்சே. நல்ல வேளை.....சாமியாடி சொன்னா, கனவில் வந்து சாமி சொல்லிச்சி, பூதம் சொல்லிச்சின்னு என்னையே அம்மனுக்குப் பலி போடாம விட்டாங்களே!” என்று சொல்லி வாய்விட்டு நகைத்தான் மணிமொழியன்.
அவன் நகைப்புக்கு எதிர் நகைப்புப் போல வானம் ‘கடகட’ என முழங்கியது.
அவன் அண்ணாந்து பார்த்தான்.
இது என்ன விந்தை! வானமெங்கும் கறுத்து, கைக்கெட்டும் தூரத்தில் சூல் சுமந்து மிதக்கிறதே மேகக் கூட்டம்!
மழை பெய்யப் போகிறதா?
முட்டாள் மனிதர்களின் முடக்கு வாதத்தை இயற்கையே நியாயப்படுத்தப் போகிறதா?
மணிமொழியன் ஆச்சரியப்பட்டான். கூர்த்த பார்வையால் இருண்ட வானத்தைத் துழாவினான்.
எங்கிருந்தோ மிதந்து வந்த ‘மழை வாசம்’ ஒரு பேய் மழைக்கு முன்னோட்டம் தந்தது.
“பட்...பட்” ஓசையுடன் சடசடவென இறங்கிய மழைத் துளிகள், மணிமொழியனின் மண்டையைப் பதம் பார்த்தன.
அது செம்மண் பூமி. ‘குப்’ பென எழுந்த மண் வாசனை காற்றில் மிதந்து வந்து கமகமத்தது.
நனைந்து கொண்டே சிறு பிள்ளைகள் போல ஆடிப்பாட அவனுக்கு ஆசைதான். அப்போதிருந்த மன நிலையில் அது சாத்தியப்படவில்லை. வேகமாக ஓடி, ஏரியை ஒட்டியிருந்த எல்லையம்மன் கோயிலில் அடைக்கலம் புகுந்தான்.
மழை வலுத்தது. வருணனுடன் வாயுபகவானும் களத்தில் இறங்கினான்.
”சளேர்...சளேர்” என்று தரையில் அறைந்து ஆக்ரோசத்துடன் மழை கொட்டியது. கோயில் கூரை மீதும் அதனை ஒட்டியிருந்த தகரக் கொட்டகை மீதும் தாளமிட்டு அட்டகாசம் புரிந்தது.
பேயாட்டம் ஆடும் மரமட்டைகளை உசுப்பிவிட்டு விசிலடித்தது சூறாவளி. மேகக் கூட்டம் இடித்து முழக்கி டமாரம் கொட்டியது.
இத்தனை ஆரவாரங்களுக்கிடையே அது என்ன ஒரு வித்தியாசமான ஓசை?
மணிமொழியன் உற்றுக் கேட்டான். புதுப்பாளையம் இருந்த திசையில் கவனத்தைப் பதித்தான்.
மழையைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் புதுப்பாளையம் வாசிகள், தாம்பாளம், தகரடப்பா என்று எதையெல்லாமோ தட்டிக் கொண்டு, ஆடிப்பாடிக் கும்மாளம் போடுகிறார்கள் என்பது புரிந்தது.
மணிமொழியன் சிந்தனை வசப்பட்டான். சில சந்தேகங்கள் அவன் முன்னே விஸ்வரூபம் எடுத்தன.
‘நான் ஊரைவிட்டு வெளியேறிய கொஞ்ச நேரத்தில் வானம் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறதே, இது எப்படி?
தற்செயலா அல்லது என் மீது சுமத்தப்பட்ட பழியை நியாயப்படுத்த அம்மன் நிகழ்த்தும் அதிசயமா? இது அவளின் செயல்தான் என்றால், மனித மிருகங்களின் இந்த மூட நம்பிக்கைக்கு, காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு அவள் அங்கீகாரம் தருவதாகத்தானே அர்த்தம்?
நீண்ட நேரம் சிந்தனையில் மூழ்கிக் கிடந்த மணிமொழியன், அன்று எதிர்கொண்ட பிரச்சினையாலும் மனக் குழப்பத்தாலும் உண்டான அயர்ச்சி காரணமாகத் தரையில் நீட்டிப் படுத்தான். அவன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து நடந்து முடிந்த முக்கிய நிகழ்ச்சிகளை அசை போடலாயிற்று அவன் மனம்.
பள்ளி ஆசிரியனான மணிமொழியன், புதுப்பாளையத்திற்கு மாறுதலாகி வந்த சில மாதங்களிலேயே, படிப்பறிவில் மட்டுமல்லாமல் பகுத்தறிவிலும் புதுப்பாளையம் பழையபாளையமாகவே இருப்பதைக் கண்டு வருந்தினான்.
படிப்பகம், வாசகர்வட்டம், நற்பணி மன்றம் என்றெல்லாம் படிப்படியாகச் சில அமைப்புகளை ஏற்படுத்தி, உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை எழுப்பி உட்கார வைத்தான். கருத்தரங்குகள்,கவியரங்குகள், பட்டிமன்றங்கள், மேடை நாடகங்கள் என்று நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.
இளைஞர்கள் சிலரிடம் ஓரளவு மாற்றம் தெரிந்தது. அவர்கள் வரதட்சனையை மறுத்தார்கள்; சாதி வேறுபாட்டை அலட்சியம் செய்தார்கள். விதவையருக்கு வாழ்வு தர முன்வந்தார்கள்.
ஆயினும் என்ன? எஞ்சியிருந்தவர்கள் மாறவே இல்லை. பழைமையில் ஊறிப்போனவர்கள் அவனை வெறுத்தார்கள். அவனை ஊரைவிட்டு வெளியேற்றும் நாள் வருமா என்று காத்துக் கிடந்தார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போல அந்த ஆண்டு மழை பொய்த்தது.
மழைக்கஞ்சி காய்ச்சினார்கள். மழை பெய்யவில்லை.
சாமியாடியைக் கும்பிட்டு, அம்மனை வரவழைத்து முறையிட்டார்கள். சாமியாடி சொன்னதை அம்மனின் அருள்வாக்காகக் கொண்டு மணிமொழியனை வெளியேற்றினார்கள்.
சிறிதும் மட்டுப்படாமல், கட்டுப்பாடின்றிப் பெய்து கொண்டிருந்தது மழை.
நேரம் பின்னிரவைக் கடந்து கொண்டிருந்தது.
ஒரு பெரிய ராட்சத மதகை உடைத்துவிட்டால், ‘குபீர்’ என்று வெள்ளம் வெளியேறும் போது வெளிப்படுவது போன்ற ஓசை கேட்டுத் திடுக்கிட்டான் மணிமொழியன்.
எழுந்து வெளியே பாய்ந்தான்.
புது வெள்ளம் ததும்பி வழியும் அந்தப் பிரமாண்ட ஏரியின் அகன்ற கரை மீது கவனமாக நடந்தான்.
நடுக்கரையில் உடைப்பெடுத்துக் கொண்டிருந்தது! ஏரியில் சிறைபட்டுக் குமுறிக் கொண்டிருந்த புது வெள்ளம், புதுப் பாதை போட்டு மூர்க்கத்தனமாய் வெளியேறத் தொடங்கியிருந்தது.
உடைப்பு பெரிதாகி, இந்த ஊழி வெள்ளம் காட்டாறாக உருக்கொண்டு பாயும் போது எதிர்ப்படும் ஊர்கள் சிதைந்து சிதறி உருத்தெறியாமல் போகும் என்பது அவனுக்குத் திட்டவட்டமாகப் புரிந்தது.
முதல் பலியாய் முன்னால் நிற்பது புதுப்பாளையம்.
’ஊரா அது? காட்டுமிராண்டிகளின் சரணாலயம். தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய அத்தனை முட்டாள்களும் மூச்சுத் திணறிச் சாகட்டும்’ -இப்படியொரு வக்கிர சிந்தனைக்கு ஆளாகவில்லை அவன்.
ஏரிக்கரையிலிருந்து புதுப்பாளையம் நோக்கிப் புயலாகப் பாய்ந்தான்.
“ஏரி உடைப்பெடுத்திடிச்சே.........வெள்ளம் வருது..........வெள்ளம் வருதே.........ஏரி உடைப்பெடுத்திடிச்சே..........”
உரத்த குரலில் கூவியபடி ஓடினான் அவன்.
ஊரை நெருங்க நெருங்க அவன் குரல் உச்ச கதியில் ஒலிக்கலாயிற்று.
***********************************************************************************************************************
படைப்பு?
நான்...நானேதான்!
04.08.2016இல் இத்தளத்தில் வெளியான இப்பதிவு தமிழ்மணத்தில் இடம்பெறுவதற்காகக் கொஞ்சமே கொஞ்சம் புதுப்பிக்கப்பட்டது!
நான்...நானேதான்!
04.08.2016இல் இத்தளத்தில் வெளியான இப்பதிவு தமிழ்மணத்தில் இடம்பெறுவதற்காகக் கொஞ்சமே கொஞ்சம் புதுப்பிக்கப்பட்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக